Published:Updated:

பாதுகாப்பான கார் எது, முதுகுவலிக்காத ஸ்கூட்டர் எது..?! வாசகர் கேள்விகள்... நிபுணர் பதில்கள்!

ஆட்டோமொபைல் தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்களின் பதில்கள்.

Cars
Cars ( Sales )

எனக்கு கார்கள் பற்றி எந்தப் பரிட்சயமும் இல்லை. வருங்காலத்தில் கார் வாங்க உள்ளதால், அதுகுறித்த விவரங்களை எங்கே தெரிந்துகொள்வது? எந்த கார் பெஸ்ட் என்பதை செக் செய்வது எப்படி?

- ரம்யா சின்னதுரை, இ-மெயில்.

புதிதாக கார் வாங்கப்போவதற்கும், அதைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவதற்கும் வாழ்த்துகள். முதலில், நீங்கள் உங்கள் காரின் பட்ஜெட்டை இறுதிசெய்துவிட்டு, கிடைக்கக்கூடிய கார்களின் பட்டியலைத் தயார் செய்யவும். அதைத் தொடர்ந்து, அந்தந்த கார்களின் விமர்சனக் கட்டுரைகள், ஒப்பீடுகள் ஆகியவற்றை இணையத்தில் தேடித் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த தகவல்களைப் பெற, அதைப் பின்னணியாகக்கொண்டு இயங்கக்கூடிய வலைதளங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை தொடர்ச்சியாகப் படித்தாலே போதும்.

Venue Compact SUV
Venue Compact SUV
Hyundai India

எனது பட்ஜெட் 10-12 லட்ச ரூபாய். காம்பேக்ட் எஸ்யூவி-தான் வேண்டும். எதை வாங்கலாம்?

- அபிநயா, கோயம்புத்தூர்.

நீங்கள் வாங்கவிருப்பது பெட்ரோல்/டீசல் ஆகிய இரண்டில் எது என்பதைச் சொல்லாவிட்டாலும், உங்களின் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நெக்ஸான் - விட்டாரா பிரெஸ்ஸா - எக்கோஸ்போர்ட் - வென்யூ - XUV 3OO - TUV 3OO எனப் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதில், காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டின் சமீபத்திய வரவுகளான வென்யூ மற்றும் XUV 3OO ஆகியவற்றில் ஒன்று, உங்களுக்கான சாய்ஸாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இவை இரண்டுமே மாடர்ன் டிசைன், ஸ்மூத் இன்ஜின்கள், அதிகப்படியான வசதிகள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், கொடுக்கும் காசுக்கேற்ற மதிப்பு என அசத்துகின்றன. இருப்பினும், உங்களுக்குப் பிடித்தமான காரை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுக்கவும்.

நான், டிஸ்கவர் 125 பைக்கை வைத்திருக்கிறேன். என் மனைவி ஸ்கூட்டி பெப் ப்ளஸ்ஸைப் பயன்படுத்துகிறார். தற்போது, புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்கத் தீர்மானித்திருக்கிறேன். அவங்களுக்கு உடல்வலி இருப்பதால், அந்த ஸ்கூட்டர் சிறப்பான சஸ்பென்ஷனைக் கொண்டிருப்பது அவசியம்

- வி. கணேச மூர்த்தி, இ-மெயில்.

உங்கள் தேவைகளைவைத்துப் பார்க்கும்போது, ஜூபிட்டர் அல்லது ஆக்ஸஸ் ஆகிய ஸ்கூட்டர்களில் ஒன்று உங்களுக்கான தேர்வாக இருக்கலாம். இதில், சொகுசான ஓட்டுதல் அனுபவம் மற்றும் வசதிகள் வேண்டும் என்றால், ஜூபிட்டரையும் குறைவான எடை மற்றும் சிறப்பான பர்ஃபாமன்ஸ் வேண்டும் என்றால், ஆக்ஸஸையும் பரிசிலிக்கலாம். எனவே, இரண்டையும் டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்துவிட்டு முடிவெடுக்கவும். டீலர் நெட்வொர்க்கில் சுஸூகியைவிட டிவிஎஸ் முன்னிலை வகிக்கிறது என்பதை நினைவில்கொள்ளவும்.

Grand i10 Nios
Grand i10 Nios
Hyundai India

அடுத்த 4 மாதங்களில் கார் வாங்க திட்டமிட்டிருக்கிறேன். 7 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், எனக்கான சாய்ஸ் எது... பெட்ரோல் காரா, டீசல் காரா?

- ஸ்டீபன் ராஜ், இ-மெயில்.

நீங்கள் சொல்வதைவைத்துப் பார்க்கும்போது, உங்களின் புத்தாண்டுப் பரிசாக புதிய கார் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் எனத் தோன்றுகிறது; அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் BS-6 விதிகள் அமலுக்கு வருவதால், நீங்கள் அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட காரை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். அதன்படி, சமீபத்தில் வெளிவந்திருக்கும் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ஆகியவை, உங்களுக்கான சாய்ஸ் ஆக இருக்கிறது. மாதத்துக்கு 2,000-க்கும் அதிகமான தூரம் காரைப் பயன்படுத்துவீர்கள் என்றால், டீசல் மாடலையும் இல்லையென்றால், பெட்ரோல் மாடலையும் வாங்குவது நலம்.

டீசன்ட்டான மைலேஜ் தரக்கூடிய பெட்ரோல் ஹேட்ச்பேக் வேண்டும்; அது நல்ல டெக்னிக்கல் விவரங்களையும், அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பது அவசியம். இதனாலேயே எனக்கு ஃபோர்டு ஃப்ரிஸ்டைல் மிகவும் பிடித்திருக்கிறது. எனது முடிவு சரியானதா... தற்போதைய மாடலையே வாங்கலாமா அல்லது BS-6 மாடல் வரும்வரை காத்திருக்கலாமா. 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், வேறு ஏதேனும் நல்ல ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?

- பிரகதீஷ், இ-மெயில்.

பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் 6 காற்றுப்பைகளைக்கொண்ட ஃப்ரீஸ்டைல் நல்லதொரு தேர்வுதான். ஸ்டைலான டிசைன், மனநிறைவைத் தரும் இடவசதி, அதிக சிறப்பம்சங்கள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், கொடுக்கும் காசுக்கேற்ற மதிப்பு என இந்த கார் ஆல்ரவுண்டராக அசத்துகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் BS-6 விதிகள் அமலுக்கு வருவதால், அனேகமாக இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து ஃபோர்டு நிறுவனம் BS-6 கார்களைத் தயாரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, சில காலம் காத்திருந்து, ஒரேடியாக BS-6 ஃப்ரிஸ்டைல் காரை வாங்குவது நலம்.

Santro
Santro
Hyundai India

நான் ஒரு கார் வாங்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறேன். என்னுடைய பட்ஜெட் 6 லட்சம் ரூபாய். நகரப் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனக்கு ஒரு சிறந்த கார் வாங்க வழிகாட்டவும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பது ப்ளஸ்ஸா மைனஸா?

- இரா.கனகராஜ், சென்னை.

நீங்கள், முதன்முறையாக கார் ஓட்டப்போகிறீர்கள்... கூடவே வீட்டில் இருக்கும் அனைவரும் அதைப் பயன்படுத்துவார்கள் என்றால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். மாருதி சுஸூகி வேகன்-ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ ஆகிய கார்களை நீங்கள் பரிசிலிக்கலாம். இதில், சமீபத்திய வரவான வேகன்-ஆர், பவர்ஃபுல்லான 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனுடனும் வருகிறது. ஆனால், நீங்கள் நகரத்தில்தான் அதிகமாகப் பயணிப்பேன் என்றதால், 1.0 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடலே போதுமானது; தேவைப்பட்டால், சான்ட்ரோவையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.