Published:Updated:

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக் என்பது என்ன?

டிசம்பர் 1-ம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் மூலம் மட்டுமே கட்டணம் வாங்கப்படும் என NHAI அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடி/Toll Gate
சுங்கச்சாவடி/Toll Gate ( Fastag )

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஃபாஸ்ட் டேக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. டிசம்பர் 1-ம் தேதி முதல் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் முலமாக மட்டுமே டோல் கட்டணம் பெறவேண்டும் எனக் கடந்த ஆண்டே மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

Fastag/ஃபாஸ்ட் டேக்
Fastag/ஃபாஸ்ட் டேக்

டிசம்பர் 1-ம் தேதிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் வேளையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர், ``தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் 1-ம் தேதிக்குள் எல்லா லேன்களையும் ஃபாஸ்ட் டேக் லேன்களாக மாற்றவேண்டும்'' என்றார். இதற்குப் பிறகு, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் சுற்றறிக்கை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின் படி, தேசிய நெடுஞ்சாலையில் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் இனி, ஃபாஸ்ட் டேக் மூலமாக மட்டுமே டோல் கட்டணம் பெறுவார்கள். ஒரே ஒரு லேனில் மட்டுமே பணம் வாங்கப்படும். டோல் கட்டணத்தைப் பணம் மூலம் செலுத்துபவர்களிடம் அதிக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 527 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 380 சுங்கச்சாவடிகளில் அனைத்து லேன்களிலும் ஃபாஸ்ட் டேக் உண்டு. கிட்டத்தட்ட 70 சதவிகிதச் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் வந்துவிட்டதால் இனி டோல் கட்டணங்களை எலெக்ட்ரானிக் முறையிலேயே செலுத்தும் முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ``தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே வந்திருக்கும் இந்தத் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில நெடுஞ்சாலைகளிலும் செயல்படுத்தப்படும். அதற்கான கட்டுமான உதவிகளை மத்திய அரசு இலவசமாகவே செய்துதரும்'' என்றும் கூறியுள்ளார்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

மத்திய அமைச்சகத்தின் அறிவுப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் இனி ஃபாஸ்ட் டேக் மூலம் மட்டுமே கட்டணம் பெறப்படும் எனத் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தற்போது தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களில் 35 சதவிகிதம் வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் மூலம் பணம் செலுத்துகின்றன. 48 சுங்கச்சாவடிகளில் மொத்தம் 482 லேன்கள் உள்ளன. இதில் 428 லேன்கள் ஃபாஸ்ட் டேக் லேன்களாக மாற்றப்பட்டுவிட்டன. மீதம் இருக்கும் லேன்களை இன்னும் 2 வாரத்தில் ஃபாஸ்ட் டேக் லேன்களாக மாற்றிவிடுவோம் என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறையினர்.

ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன? எப்படி வாங்குவது?

ஃபாஸ்ட் டேக் என்பது `ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID)' எனும் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன ஸ்டிக்கர். இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒட்டவேண்டும். இந்த RFID இணையதள வாலெட் ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும். மொபைல் ரீசார்ஜ் செய்வது போல ஃபாஸ்ட் டேக் கணக்கில் ரீசார்ஜ் செய்து பணத்தைச் சேமித்துக்கொள்ளவேண்டும்.

Fastag/ஃபாஸ்ட் டேக்
Fastag/ஃபாஸ்ட் டேக்
paytm

ஃபாஸ்ட் டேக் லேன்களில் ஒரு ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டிருக்கும். நம் வாகனம் ஃபாஸ்ட் டேக் லேனைக் கடக்கும்போது நம் இணையதள வாலெட்டில் இருக்கும் பணம் தானாகவே எடுத்துக்கொள்ளப்படும். பணம் இல்லையென்றால் அதற்கு உண்டான அபராதத் தொகையோடு கட்டணம் செலுத்தவேண்டும். ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் டோல் கட்டணத்திலிருந்து 2.5 சதவிகிதம் மீண்டும் அவர்களின் வாலெட்டிலேயே கொடுத்துவிடுவார்கள்.

ஃபாஸ்ட் டேக் /Fastag
ஃபாஸ்ட் டேக் /Fastag

5 ஆண்டுகள் வரை ஒரு ஃபாஸ்ட் டேக்  ஸ்டிக்கரைப் பயன்படுத்தலாம். தற்போது இந்த ஃபாஸ்ட் டேக் பெரும்பாலான வங்கிகளில் கிடைக்கிறது. இதை Paytm இணையதளம் மூலமும் மத்திய அரசின் NHAI இணையதளத்தின் மூலமும்கூட வாங்கலாம்.

தினமும் சுங்கச்சாவடிகளைத் தாண்டிச்செல்லும் டிரைவர்கள் NHAI இணையதளத்தில் மாதாந்திர பாஸ் வாங்கிக்கொள்ளலாம். ஃபாஸ்ட் டேக் ஐடியை நேரடியாகச் சென்றும் வாங்கலாம். இதற்காக, தற்போது 28,000 பாயின்ட் ஆஃப் சேல்ஸ் இடங்கள் உள்ளன. இதை அடுத்த நிதியாண்டுக்குள் 50,000 ஆக அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது NHAI.

பார்க்கிங்
பார்க்கிங்

தற்போது 60 லட்சம் ஃபாஸ்ட் டேக், பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த ஃபாஸ்ட் டேக் மூலம் நாளொன்றுக்கு 10 லட்சம் கட்டணங்கள் பெறப்படுகின்றன. ஃபாஸ்ட் டேக் மூலம் டோல் கட்டணம் மட்டுமல்லாமல் பார்க்கிங், எரிபொருள் போன்ற கட்டணங்கள், GST E waybill கட்டணங்கள் பெறும் முயற்சிகளும் நடக்கின்றன. ஹைதராபாத் விமானநிலையத்தில் ஃபாஸ்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் பெறும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.