Published:Updated:

ஜீப் ரேங்ளர், ஹேரியர் ப்ளாக் எடிஷன்... இந்த மாதம் அறிமுகமாகும் புதிய எஸ்யூவிகள்!

இந்திய கார் சந்தையின் மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில்தான், தற்போது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் துறை, உலகளவில் புதிய வாகனங்களின் விற்பனையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், கடந்த 9 மாதங்களாக, அது கடுமையான ஊசலாட்டத்துடன் இருப்பது தெரிந்ததே. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்து செக்மென்ட்களிலும், அந்தந்த நிறுவனங்களின் கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிட்டால், இந்த ஆண்டு வீழ்ச்சியே அவர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வர இன்னும் 8 மாதங்களே இருப்பது, இதற்கான பிரதான காரணங்களில் ஒன்று எனலாம். இதற்கிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கது;

Black Edition Cabin
Black Edition Cabin
Autocar India

ஆனால், இதன் வெளிப்பாடாக, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக்கூடிய கார்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் 28% ஜிஎஸ்டியை, 18%-ஆகக் குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை மனதில்வைத்து, வாகன உற்பத்தியாளர்கள் தமது புதிய தயாரிப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் களமிறக்க நாள் குறித்துவிட்டார்கள்! இந்தப் பட்டியலை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம் என்றாலும், அதில் இருந்த ரிவோல்ட் RV 400 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகம், இந்த மாதத்தின் 7-ம் தேதியிலிருந்து மாத இறுதிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்தச் சூட்டோடு, ஆகஸ்ட் 2019-ன் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரப்போகும் புதிய வாகனங்களைப் பார்த்துவிடுவோம்.

டாடா ஹேரியர் - ப்ளாக் எடிஷன்

இந்திய கார் சந்தையின் மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில்தான், தற்போது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் வந்த நிஸான் கிக்ஸ் அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டது என்றால், அடுத்து வந்த டாடா ஹேரியர் அந்த சூட்டைக் குறைக்காமல் பார்த்துக் கொண்டது. இடையே மஹிந்திரா XUV 3OO மற்றும் ஹூண்டாய் வென்யூ என காம்பேக்ட் எஸ்யூவிகளின் ஆதிக்கம் மேலோங்கினாலும், தற்போது எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்ட்டோஸ் வாயிலாக மக்களின் கவனம் மீண்டும் மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட் வசம் திரும்பியிருக்கிறது! இதற்கிடையே ரெனோ நிறுவனம் டஸ்ட்டரின் பேஸ்லிஃப்ட் மாடலைக் கொண்டுவந்துவிட்டது; இதனால் அதிகரித்துவரும் போட்டியைச் சமாளிக்க, All Black ஃபினிஷுடன் கூடிய ஹேரியரைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். தனது வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் இந்த எஸ்யூவியை இந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது.

Harrier Black Edition
Harrier Black Edition
Autocar India

Gloss ப்ளாக் நிறத்தில் பாடி இருப்பதுடன், 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பம்பர்களில் இருந்த Skid Plate ஆகியவையும் கறுப்பு நிறத்துக்கு மாறியுள்ளன. ஆனால் காரின் விண்டோ லைனில் உள்ள க்ரோம் ஃபினிஷ் தொடர்கிறது. ஹேரியரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறத்திலும் கறுப்பு நிறமே வியாபித்திருக்கிறது. கேபினில் பிரவுன் நிற அப்ஹோல்சரிக்குப் பதிலாக, கறுப்பு நிற லெதர் உள்ளலங்காரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல டேஷ்போர்டில் இருந்த Faux Wood பேனலுக்குப் பதில், Textured ஃபினிஷுடன் கூடிய Matte Grey பேனல் இடம்பெற்றிருக்கிறது. முன்னே சொன்ன மாற்றங்களைத் தவிர, காரில் மெக்கானிக்கலாக எந்த வித்தியாசமும் இல்லை. சமீபத்தில் வெளிவந்த ஹேரியரின் டூயல் டோன் மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த ப்ளாக் எடிஷனின் விலை அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அனேகமாக இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் BS-6 மாடலில், சன்ரூஃப் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை சேர்க்கப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜீப் ரேங்ளர் - ஆஃப் ரோடர் எஸ்யூவி

JL என்ற புனைப்பெயரைக் கொண்ட ரேங்ளரை, வருகின்ற ஆகஸ்ட் 9, 2019 அன்று விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது ஜீப் நிறுவனம். இந்த நான்காம் தலைமுறை எஸ்யூவி, கடந்த 2017 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. உலகளவில் 3 டோர் மற்றும் 5 டோர் என இரு மாடல்களில் கிடைத்தாலும், இந்தியாவுக்கு வரப்போவது பிராக்டிக்கலான 5 டோர் வெர்ஷன்தான்! மேலும் இதன் Unlimited Sahara வேரியன்ட்டில் உள்ள சிறப்பம்சங்கள், இந்திய மாடலில் இருக்கும் எனத் தெரிகிறது.

Wrangler
Wrangler
Jeep

ஜீப்களின் பிரத்யேகமான டிசைன் ரேங்ளரில் தொடர்வது பெரிய ப்ளஸ். புகழ்பெற்ற CJ5 மாடலைப் போலவே இதன் முன்பக்கம் அமைந்திருக்கிறது. தவிர காரின் Belt-Line, முன்பைவிட ஒரு இன்ச் குறைந்திருக்கிறது. பின்பக்கத்தில் உள்ள டெயில் லைட்ஸ் பெரிதாகியிருப்பதுடன், ஸ்பேர் வீலும் கொஞ்சம் கீழே பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது, கதவு கண்ணாடி வாயிலாக டிரைவருக்கு வெளிச்சாலை தெளிவாகத் தெரியவே இந்த முன்னேற்றம்!

காரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறத்தின் டிசைனிலும் பெரிய வித்தியாசமில்லாவிட்டாலும், ஆங்காங்கே சிற்சில மாற்றங்கள் உள்ளன. முன்பைவிட அதிகரித்திருக்கும் இடவசதியைத் தாண்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் 7 இன்ச் MID, 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள், பொருள்களை வைக்க அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ், அதிகமான 12V சாக்கெட் மற்றும் USB பாயின்ட்கள் ஆகியவை இதற்கான உதாரணம். உலக சந்தைகளில் 4 இன்ஜின் ஆப்ஷன்களுடன் (2 பெட்ரோல் மற்றும் 2 டீசல்) வலம் வருகிறது ஜீப் ரேங்ளர். அவை பின்வருமாறு,

Wrangler Engine
Wrangler Engine
Jeep

● 3.6 லிட்டர், V6 பெட்ரோல்: 285bhp பவர் மற்றும் 35.3kgm டார்க்

● 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல்: 270bhp பவர் மற்றும் 40kgm டார்க்

● 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல்: 197bhp பவர் மற்றும் 45kgm டார்க்

● 3.0 லிட்டர், V6 டர்போ டீசல்: 240bhp பவர் மற்றும் 57kgm டார்க்

ஆனால், இதில் எது இந்தியாவுக்கு வரும் என்பதில் இன்னும் தெளிவில்லை. முந்தைய மாடலைப் போலவே, இந்த நான்காம் தலைமுறை ரேங்ளரும், அமெரிக்காவில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகிறது. எனவே CBU முறையில் முழு காராக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படும்.

Wrangler Cabin
Wrangler Cabin
Jeep
Black Edition Seats
Black Edition Seats
Autocar India

மேலும் எதிர்பார்த்தபடியே, முன்பைவிட இது அதிக விலையில்தான் வரும். இதனைத் தொடர்ந்து, காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் மாடலில் உள்ள 2.0 லிட்டர் (BS-6) டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட வழக்கமான காம்பஸை, பின்னாளில் டாடா ஹேரியர் - எம்ஜி ஹெக்டர் - மஹிந்திரா XUV 5OO ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக ஜீப் கொண்டு வரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு