Published:Updated:

2 யூனிட் மின்சாரத்தில் 110 கி.மீ வரை பயணம்... ஹீரோ எலெக்ட்ரிக்கின் புது மாடல் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், ஆப்டிமா ER மற்றும் Nyx ER என இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் Optima ER
ஹீரோ எலெக்ட்ரிக் Optima ER ( Hero Electric )

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆப்டிமா ER மற்றும் Nyx ER என இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இருக்கும் ஆப்டிமா மற்றும் Nyx ஸ்கூட்டர்களின் அதிக ரேஞ்ச் கொண்ட வகைதான் இவை. இந்த ஸ்கூட்டர்களின் விலை ஆப்டிமா ER - ரூ.68,721, Nyx ER - ரூ.69,754.

ஹீரோ எலெக்ட்ரிக் Nyx ER
ஹீரோ எலெக்ட்ரிக் Nyx ER
Hero Electric
ஹூண்டாயின் 
மின்சார கோனா...

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்களில் FAME II மானியம் கிடைக்கும் விலை குறைவான ஸ்கூட்டர் இவைதான். இந்த ஸ்கூட்டர்களில் 2 லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஒரு முழு சார்ஜில் 110 கி.மீ தொலைவு வரை செல்லலாம். பேட்டரிகளை சுலபமாக கழட்டி சார்ஜ் செய்ய முடியும் என்பதால் பைக்கை நிறுத்தும் இடத்தில் சார்ஜிங் பாயின்ட் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பேட்டரியை மட்டும் வீட்டுக்குள் எடுத்துச்சென்று சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இவற்றை முழுவதுமாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் தேவை. வெறும் 2 யூனிட் மின்சாரம் போதும் 110 கி.மீ தூரம் செல்வதற்கு. ஆனால், அதிகபட்சம் 42 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உண்டு. ஹீரோவின் சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒரு மணிநேரத்தில் இந்த ஸ்கூட்டரை முழுமைமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

ஆப்டிமா ER

ஹீரோ எலெக்ட்ரிக் Nyx ER
ஹீரோ எலெக்ட்ரிக் Nyx ER

தினசரி கம்யூட்டிங் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர் இது. இதில் பெரிய 16x3 இன்ச் வீல்கள் வருகின்றன. வீல்களோடு இணைந்திருக்கும் ஹப் மோட்டார் வருகிறது. இதன் எடை 83 கிலோ மட்டுமே. கிட்டத்தட்ட புதிய ஹீரோ பிளெஷர் போலவே இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் என்ற ஸ்டிக்கரிங், ஆப்டிமா என்ற 3டி லோகோ, ஸ்டெப்அப் சீட் என ஸ்டைலாக உள்ளது ஆப்டிமா.

பெரிய க்ளோவ் பாக்ஸ், டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், USB போர்ட் எனத் தற்போது ஒரு ப்ரீமியம் ஸ்கூட்டரில் வரும் அனைத்து அம்சங்களும் இதில் வந்துவிடுகின்றன. சியட் டியூப்லெஸ் டயர்களும்கூட இருக்கின்றன. இரண்டு பேட்டரிகளும் சுலபமாக எடுப்பதற்கு வசதியாக சீட்டுக்கு கீழே பொருத்தியிருப்பதால் பூட் ஸ்பேஸ் ரொம்பவே குறைந்துவிட்டது. நீளமான பூட் ஸ்பேஸுக்குப் பதிலாக ஆழமான பூட் வருவதால் உயரமான பொருள்களை உள்ளே அடக்கிவிடலாம். ஹெல்மட்களை வைக்க எந்தத் தடையும் இல்லை.

இரண்டு பேட்டரிகள் மற்றும் பூட் ஸ்பேஸ்
இரண்டு பேட்டரிகள் மற்றும் பூட் ஸ்பேஸ்

Nyx ER

இந்த ஸ்கூட்டரை கமர்ஷியல் பயன்பாட்டுக்காக வடிவமைத்துள்ளார்கள். கடை வைத்திருப்பவர்கள் சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வருவதற்கு வதியாக நிறைய இடவசதி உண்டு. ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற உணவு டெலிவரி செய்பவர்கள், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதில் பின்பக்கம் கேரியர் மற்றும் மடித்து வைக்கக்கூடிய பில்லியன் சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்டிமாவில் ஸ்டைலான சிறிய கிராப் ரயில். ஆனால், Nyx-ல் பொருள்களைக் கட்டுவதற்காகப் பெரிய கிராப் ரயில் கொடுத்துள்ளார்கள். அதிக எடையை பேலன்ஸ் செய்ய 10x3 எனச் சிறிய வீல் அளவு கொடுத்துள்ளார்கள். இந்த ஸ்கூட்டரின் எடை 87 கிலோ.

இந்த ஸ்கூட்டர்களின் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் வாரன்ட்டி கொடுக்கப்படுகிறது. சரியாகப் பராமரிக்கும் பட்சத்தில் 5 ஆண்டுகள் வரை இந்த பேட்டரிகள் உழைக்கும். அதற்குப் பிறகு பேட்டரியை மாற்ற வேண்டிய அவசியம் வரலாம் என்கிறார்கள். ஒரு பேட்டரியின் விலை ரூ.22,000. இந்தப் பேட்டரிகள் சீனாவில் இருந்து கொண்டுவரப்படுதால் இதன் விலை அதிகம். பேட்டரி தயாரிப்புகள் இந்தியாவில் தொடங்கும் பட்சத்தில் இதன் விலை பாதிக்கும் குறைவாகவே இருக்கும்.

பின்பக்க சஸ்பென்ஷன்
பின்பக்க சஸ்பென்ஷன்

மோட்டார் மற்றும் பேட்டரி எவ்வளவு நீரை தாக்குபிடிக்கும் எனும் IP ரேட்டிங்கை ஹீரோ இதுவரை வெளியிடவில்லை. தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 615 ஷோரூம்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 65 ஷோரூம்கள் இருக்கிறதாம். இதை 2020 முடிவதற்குள் 1,000 ஷோரூம்களாக மாற்ற திட்டமிட்டுள்ளார்கள். ஒவ்வொரு ஷோரூமிலும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் பொருத்தப்பட்டுள்ளதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறைத் தலைவர் மனு குமார் தெரிவித்தார்.

`20 ஆண்டுகளில் இல்லாதது!'- வாகன விற்பனை 31% குறைவு
ஆப்டிமா ER
ஆப்டிமா ER

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒவ்வொரு ஷோரூமை சுற்றியும் 10 சார்ஜிங் ஸ்டேஷன் வரை கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் 700 கோடி ரூபாய் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளார்களாம்.