Published:Updated:

ஹோண்டாவின் புதிய SP 125 BS-6 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

SP 125 BS-6
SP 125 BS-6 ( Honda 2 Wheelers )

ஹாலோஜன் ஹெட்லைட்டுக்குப் பதில் LED ஹெட்லைட், அனலாக் - டிஜிட்டல் மீட்டருக்குப் பதில் Full டிஜிட்டல் மீட்டர், புதிய ஸ்விட்ச்கள், பெரிய Tank Extension உடனான 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் எனப் புதிய மாடலில் கணிசமான மாறுதல்கள் உடனடியாகத் தெரிகின்றன.

ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் BS-6 மாடலைத் தொடர்ந்து, ஷைன் பைக்கின் பிரிமியம் மாடலாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் CB ஷைன் SP 125 பைக்கின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கியுள்ளது ஹோண்டா. இது தற்போது SP 125 எனப் பெயர் மாற்றம் கண்டிருப்பதுடன், முன்பைவிட 7,081 - 7,231 ரூபாய் அதிக விலையில் (சென்னை எக்ஸ்-ஷோரூம்) வெளிவந்திருக்கிறது. 4 கலர்கள் - கிராஃபிக்ஸ் காம்பினேஷனில் வந்திருக்கும் இந்த பைக், டிரம் CBS (75,672 ரூபாய்) மற்றும் டிஸ்க் CBS (79,872 ரூபாய்) என இரு வேரியன்ட்களில் அறிமுகமாகியுள்ளது. பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் V12, ஹீரோ கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர், யமஹா சல்யூட்டோ ஆகிய பைக்குகளுடன் போட்டி போடுகிறது புதிய SP 125 BS-6. இதன் உற்பத்தியை ஹோண்டா ஏற்கெனவே தொடங்கிவிட்டதுடன், இந்த மாத இறுதிக்குள்ளாக டீலர்களை பைக் வந்தடையும் எனத் தகவல் வந்திருக்கிறது. CB ஷைன் SP 125 பைக்குடன் ஒப்பிட்டால், எந்த அளவில் SP 125 வேறுபடுகிறது?

SP 125 BS-6
SP 125 BS-6
Honda 2 Wheelers

டிசைன் மற்றும் வசதிகள்

ஹாலோஜன் ஹெட்லைட்டுக்குப் பதில் LED ஹெட்லைட், அனலாக் - டிஜிட்டல் மீட்டருக்குப் பதில் Full டிஜிட்டல் மீட்டர், புதிய ஸ்விட்ச்கள், பெரிய Tank Extension உடனான 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் எனப் புதிய மாடலில் கணிசமான மாறுதல்கள் உடனடியாகத் தெரிகின்றன. 13மிமீ அதிக நீளம் (2,020மிமீ), 23மிமீ அதிக அகலம் (785மிமீ), 18மிமீ அதிக உயரம் (1,103மிமீ), 19மிமீ அதிக வீல்பேஸ் (1,285மிமீ) என SP 125 வளர்ந்திருக்கிறது. ஆனால், முந்தைய மாடல்களைவிட 3-5 கிலோ வரை எடை குறைந்திருக்கிறது. இதனால் பைக்கின் கையாளுமை மற்றும் பர்ஃபாமன்ஸில் முன்பைவிட வித்தியாசம் தெரியலாம். Diamond Frame - ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் - CBS பிரேக்ஸ் - 18 இன்ச் டியூப்லெஸ் டயர்கள் என மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே தொடர்வது குறிப்பிடத்தக்கது. AC செட்-அப்பிலிருந்து DC செட்-அப்புக்கு எலெக்ட்ரிக்கல்ஸ் மாறியுள்ளதால், சீரான வெளிச்சம் ஹெட்லைட்டிலிருந்து கிடைக்கும். தவிர ஹாரன் மற்றும் மீட்டரின் செயல்பாடும் சீராக இருக்கும்.

SP 125 BS-6
SP 125 BS-6
Honda 2 Wheelers

Full டிஜிட்டல் மீட்டரில் டேக்கோமீட்டர் இல்லாவிட்டாலும், கியர் - மைலேஜ் - ECO - சர்வீஸ் இண்டிகேட்டர் இருப்பது ஆறுதல். எக்ஸாஸ்ட் பைப், Split Spoke அலாய் வீல்கள், டெயில் லைட் ஆகியவற்றின் தோற்றமும் புதிது. ஆனால், இண்டிகேட்டர்கள் மற்றும் ரியர் வியூ மிரர்கள் அதேதான்; 125சிசி செக்மென்ட்டிலேயே LED ஹெட்லைட்ஸ் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச் இருக்கும் ஒரே பைக் இதுதான்! மேலும், விலை அதிகமான பைக்குகளில் இருப்பதுபோல, பாஸ் லைட் ஸ்விட்ச்சிலேயே ஹெட்லைட்டின் Low/High Beam அட்ஜஸ்ட் செய்யமுடியும் என்பது செம. அதேபோல ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச் கொண்டே, பைக்கை ஸ்டார்ட் செய்யவும் முடியும். பின்பக்க சஸ்பென்ஷனை 5 வகையில் அட்ஜஸ்ட் செய்யமுடியும் என்பதுடன், பைக்குக்கு 3+3 வருட வாரன்ட்டி கிடைப்பது பெரிய ப்ளஸ். இவ்வளவு புதிய விஷயங்களை பைக்கில் புகுத்திய ஹோண்டா, அகலமான டயர்களைப் பொருத்தியிருக்கலாம்.

இன்ஜின் மற்றும் பர்ஃபாமன்ஸ்

SP 125 BS-6
SP 125 BS-6
Honda 2 Wheelers

CB ஷைன் SP 125 பைக்கில் 124.73சிசி - கார்புரேட்டர் இன்ஜின் (52.4மிமீ Bore X 57.8மிமீ Stroke) இருந்த நிலையில், புதிய SP 125 மாடலில் இருப்பது புதிய 124சிசி PGM-Fi இன்ஜின் (50மிமீ Bore X 63.1மிமீ Stroke). இரண்டிலுமே ஏர் கூலிங் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Long Stroke அமைப்பு என ஒன்றாக இருந்தாலும், Compression ரேஷியோவில் மாற்றம் தெரிகிறது (CB ஷைன் SP 125 - 9.2:1, SP 125 BS-6: 10:1). இன்ஜின் திறனில் சற்று வித்தியாசம் இருந்தாலும், பவர் மற்றும் டார்க்கில் முன்னேற்றம் தெரிகிறது. BS-4 மாடல் 10.16bhp பவர் மற்றும் 1.03kgm டார்க்கை வெளிப்படுத்திய நிலையில், BS-6 வெர்ஷன் 10.73bhp பவர் மற்றும் 1.09 டார்க்கைத் தருகிறது. இதனுடன் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சேரும்போது, ஸ்மூத்தான பவர் டெலிவரி கியாரன்ட்டி எனலாம். தவிர eSP மற்றும் உராய்வைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிகள் பின்பற்றப்பட்டுள்ளதால், முன்பைவிட 16% அதிக மைலேஜ் கிடைக்கும் என்கிறது ஹோண்டா. இது புதிய இன்ஜின் என்பதை, புதிதாக இடம்பிடித்திருக்கும் ஆயில் ஃபில்டர் உணர்த்திவிடுகிறது. ஆக்டிவா 125 BS-6 மாடலில் இருந்த ACG தொழில்நுட்பம் இங்கேயும் உண்டு.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு