Published:Updated:

பெரிய வீலில் சின்ன டயர்... சின்ன வீலில் பெரிய டயர்... எது சிறந்த காம்பினேஷன்?

ரஞ்சித் ரூஸோ

தேவைக்கு ஏற்ப கார் டயரைத் தேர்ந்தெடுப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோம்.

மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட்

கார் வாங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டால் நமக்கு முதலில் எழும் கேள்வி எந்த டயர்களை வாங்கலாம். 15-க்கும் அதிகமாக டயர் நிறுவனங்களும் 100-க்கும் அதிகமான டயர் மாடல்களும் இருக்கும் பட்சத்தில் இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரியாமல் குழம்பிப்போய்,  பிடிக்கவில்லை என்றாலும் காரில் இருக்கும் அதே டயர்களையே மீண்டும் வாங்குபவர்கள் அதிகம்.

Aftermarket Wheels
Aftermarket Wheels

"காரின் கம்பீரத்தைக் கூட்ட வேண்டும்; ஸ்பீடுபிரேக்கர்ல போறப்போ வைப்ரேஷன் அதிகமா இருக்கு; பர்ஃபாமன்ஸ் அதிகமாக்க முடியுமா பாஸ்; டயர்ல இருந்து ரொம்ப நாய்ஸ் வருது; மைலேஜ் தர மாதிரி டயர் வேணும்'' என ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கேள்வி.

ஸ்டாக் டயர்களை மாற்றிவிட்டு உங்கள் தேவைக்கு ஏற்ப, டயரை தேர்ந்தெடுப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோம்.

எஸ்யூவியாக இருந்தாலும் சரி செடானாக இருந்தாலும் சரி, ஸ்டாக்கில் கிடைக்காத கம்பீரமும் ஸ்போர்ட்டி லுக்கும் கொஞ்சம் பெரிய டயர்களை மாட்டினால் கிடைத்துவிடும். பெரிய டயர்களுக்குப் போகும்போது சரியான வீல் மற்றும் டயர்களைப் பொருத்தவில்லை என்றால் காரின் கையாளுமை வெகுவாகப் பாதிக்கும். சில சமயங்களில் இதனால் விபத்துகள்கூட ஏற்படலாம். அழகு, கையாளுமை மற்றும் பாதுகாப்பு இந்த மூன்றும் சரிவிகிதம் இருக்கும் அளவு டயர்களை பொருத்த வேண்டும்.

பெரிய டயர்களுக்குப் போகும்முன் கவனிக்க வேண்டியவை

பெரிய டயர்களுக்குப் போகும்போது டயரின் மொத்த விட்டம் (diameter) தற்போது இருக்கும் டயரைவிட 3 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும். இல்லையென்றால், ரைடிங் மற்றும் கையாளுமை சரியான விகிதத்தில் இருக்காது. இதனால், சஸ்பென்ஷன் பாகங்கள் சேதமாகும்.

பெரிய வீல்கள் வேண்டாம் என்றால் அதே வீல் அளவில் அகலமான டயர்களுக்குப் போகலாம். அகலமான டயர்கள் காரின் கிரிப் மற்றும் ஸ்டெபிலிட்டியை அதிகரிக்கும். ஆனால், வேகம் மற்றும் மைலேஜை குறைத்துவிடும். அகலமான டயர்களைப் பொருத்தினால் ஸ்டீயரிங்கில் எஃபர்ட்டும் முன்பைவிட அதிகமாக இருக்கும். புதிய டயர்கள் வாங்கும்போது டயரின் அகலம் வீல், ஆர்ச்சைவிட அதிகமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். டயர் திரும்பும்போது காரில் அதிக லோடு இருந்தால் டயர்கள் வீல் ஆர்ச்சில் உரசும்.

காரின் பக்கவாட்டு பகுதியை சைடுவால் (Sidewall) என்பார்கள். கார் திரும்பும்போது இந்த சைடுவால் வளையும் தன்மை கொண்டது. இதை சைடுவால் ஃப்ளெக்ஸ் (Flex) என்பார்கள். காரின் ரிம் பெரிதாகவும் சைடுவால் சிறியதாகவும் இருந்தால் திருப்பங்களின் போது சைடுவால் ஃப்ளெக்ஸ் குறைவாக இருக்கும். இதனால் செம கிரிப் கிடைக்கும். ஆனால், டிரைவிங் சொகுசாக இருக்காது. டயரின் அகலமும் சைடுவாலும் எதிரும் புதிருமானது. அகலம் அதிகரிக்கும்போது சைடுவால் அளவு குறையும். 

sidewall flex
sidewall flex
Maruti G

டயரின் மொத்த விட்டத்தை எப்படிக் கணக்கிடுவது?

டயர் அளவுகள் / Tyre size
டயர் அளவுகள் / Tyre size

உதாரணத்துக்கு மாருதி ஸ்விஃப்ட்டின் z வேரியன்ட்டை எடுத்துக்கொள்வோம். இதில் 185/65/R15 டயர்கள் வருகின்றன. 185 (mm) என்பது டயரின் அகலம். 65 என்பது சைடுவாலின் உயரம். இதை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்பார்கள். அதாவது, டயரின் அகலத்தில் 65% சைடுவாலின் உயரம். 15 (இன்ச்) என்பது ரிம்மின் விட்டம்.

டயரின் மொத்த விட்டம் = (சைடுவால் அகலம்) x 2 + (ரிம் விட்டம்) = (65/100 x 185) x 2 + (15 x 25.4) = 621.5மிமீ

*(25.4 = 1 இன்ச்)

டயரின் அளவுக்கு ஏற்ப கணக்கிட்டு மொத்த விட்டத்தைத் தெரிந்துகொள்ளலாம். இது உங்கள் பழைய டயரை விட 3 சதவிகிதம் குறைவாக இருந்தால் புதிய டயர் உங்கள் டெஸ்ட்டில் பாஸ். இணையத்திலேயே டயர்களின் கிளியரன்ஸ் அளவு சொல்ல கால்குலேட்டர்கள் உண்டு. இருந்தாலும் ஃபார்முலாவை தெரிந்துகொள்வது நல்லது.

மாருதி ஸ்விஃப்ட்டின் Z வேரியன்ட்டுக்கு செட்டாகும் சில டயர்கள்

215/60 R15 - 2.82%

205/60 R15 - 0.89%

225/50 R16 - 1.59%

205/55 R16 - 1.67%

255/40 R17 - 2.3%

225/45 R17 - 2.06%

டயர் அளவை மூன்று விதமாக அதிகரிக்கலாம்

ஸ்போர்ட்ஸ் கார்
ஸ்போர்ட்ஸ் கார்

ப்ளஸ் ஜீரோ : ஏற்கெனவே உங்கள் காரில் இருக்கும் வீலில் முன்பைவிட அகலம் அதிகமாக, சிறிய ஆஸ்பெக்ட் ரேஷியோ இருக்கும் டயரை பொருத்துவது. இந்த முறையில் சில சமயங்களில் அகலமான டயர்கள் உட்காராமல் இருந்தால் வீலை மாற்ற வேண்டியது வரும். அதனால் டயர் வாங்கும்போது கவனம் தேவை.

ப்ளஸ் ஒன் : ஒரு இன்ச் பெரிய வீலை பொருத்தி, அதில் முந்தைய டயரைவிட குறைவான ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டயரை பொருத்துவது.

ப்ளஸ் டூ : இரண்டு இன்ச் பெரிய வீலை பொருத்தி அதில் மிகக் குறைவான ஆஸ்பெக்ட் ரேஷியோ அளவைக் கொண்ட டயர்களைப் பொருத்துவது.

காரில் மெக்கானிக்கலாக எந்த மாற்றத்தையும் செய்யாமல் ஸ்டைலையும் டிரைவிங்கையும் மெருகேற்ற டயர்தான் மிகச் சிறந்த வழி. ஆனால், நீங்கள் பொருத்தப்போகும் டயர் அளவில் என்ன ப்ளஸ், என்ன மைனஸ் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அகலமான டயர்
அகலமான டயர்

''இந்த டயர் உங்க காருக்கு செட் ஆகும் சார்'' என டீலர்கள் சொன்னால் அப்படியே நம்பிவிட வேண்டாம். ஸ்டைலைத் தாண்டி காரின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்.