Published:Updated:

2020-ம் ஆண்டில் கலக்க வரும் ஹஸ்க்வர்னா பைக்கில் என்ன ஸ்பெஷல்?

அநேகமாக இந்த 250சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனைக்கு வரும்போது, அவை கேடிஎம் மாடல்களைவிட 10,000 - 20,000 ரூபாய் அதிகமாக இருக்கலாம்.

ஹஸ்க்வர்னா
ஹஸ்க்வர்னா ( Husqvarna 250 )

டிசம்பர் 2019 மாதம் கோவாவில் நடந்து முடிந்த India Bike Week 2019 நிகழ்ச்சியில், பைக் ஆர்வலர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், கேடிஎம்மின் அட்வென்ச்சர் சீரிஸ் மாடல்கள் (250, 390, 790) காட்சிப்படுத்தப்பட்டன. இதைத் தவிர வித்தியாசமான டிசைனுடன், இரு பைக்குகள் அந்த ஸ்டாலில் வீற்றிருந்ததைப் பார்க்க முடிந்தது. கேடிஎம்மின் குழும நிறுவனங்களில் ஒன்றான ஹஸ்க்வர்னாவின் Svartpilen 250 மற்றும் Vitpilen 250 தான் அது! இதில் Vitpilen 250 கஃபே ரேஸர் என்றால், Svartpilen 250 ஸ்க்ராம்ப்ளர் மாடலாகும். இவை எதிர்பார்த்தபடியே டியூக் 250 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. மேலும், உலக பைக் சந்தைகளில் ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் Svartpilen 401 மற்றும் Vitpilen 401 பைக்குகளைப் போலவே, இந்த 250சிசி மாடல்களும் காட்சியளிக்கின்றன. நேக்கட் பைக் என்றாலும், இதன் புதுமாதிரியான வடிவமைப்பு கவரவே செய்கிறது.

Svartpilen 250
Svartpilen 250
Husqvarna

ஆனால், ஸ்போக் வீல்கள் மற்றும் Metzeler டயர்களுக்குப் பதிலாக 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் MRF டியூப்லெஸ் ரேடியல் டயர்கள் இதில் இடம்பிடித்திருக்கின்றன. மேலும், ஸ்ட்ரீட் பைக்குகளைப் போலவே, Svartpilen 250-ல் வழக்கமான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் மற்றும் Dual Purpose டயர்கள் உள்ளன; இதுவே Vitpilen 250-ல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளைப் போலவே ஸ்ப்ளிட் ஹேண்டில்பார் மற்றும் ரேடியல் டயர்கள் இருக்கிறது. ஹஸ்க்வர்னாவின் இந்த பைக்குகளில் இருப்பது, 31bhp பவர் - 2.4kgm டார்க்கைத் தரும் 248.8சிசி இன்ஜின் - ஸ்லிப்பர் க்ளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. அனேகமாக இது BS-6 வெர்ஷனாக இருக்கலாம்; ஆனால் கேடிஎம் டியூக் 250 பைக்கின் Kerb Weight 161 கிலோவாக இருக்கும் நிலையில், Svartpilen 250 மற்றும் Vitpilen 250 பைக்கின் Dry Weight 153 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது! எனவே இந்த அதிக எடை, பைக்கின் பர்ஃபாமன்ஸில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது, அவற்றை ஓட்டிப் பார்க்கும்போது தெரிந்துவிடும். பிப்ரவரி 2020-ல் இவை முதற்கட்டமாக 125 கேடிஎம் ஷோரூம்களில் விற்பனைக்கு வரலாம்.

Svartpilen 250
Svartpilen 250
Husqvarna

ஜூன் 2020-க்குள்ளாக இந்த எண்ணிக்கை 379 ஷோரூம்களாக அதிகரிக்கப்படும். இதைத் தொடர்ந்து, கேடிஎம்மின் Most Popular மாடலான டியூக் 200 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட Svartpilen 200 மாடல் அறிமுகப்படுத்தப்படும் (தீபாவளி பரிசாக இருக்கலாம்). இது ஹர்க்வர்னாவின் சர்வதேச வலைதளத்தில் ஏற்கெனவே அப்டேட் செய்யப்பட்டிருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும். இந்த மாடலில் உள்ள 199.6சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு, 26bhp பவரைத் தரும். மற்றபடி பிரேக்ஸ், வீல்கள், சஸ்பென்ஷன், பாடி பேனல்கள், சேஸி, சிறப்பம்சங்கள் (LED DRL உடனான LED ஹெட்லைட், ப்ளூடுத் வசதி கொண்ட டிஜிட்டல் மீட்டர்) ஆகியவை, 250சிசி மாடலில் இருப்பவை என்பது ஸ்பெஷல்! ஆனால் 250சிசி மாடலில் எக்ஸாஸ்ட் பைப் வழக்கம் போல Side Mounted ஆக இருந்தால், 200சிசி மாடலில் Underslung எக்ஸாஸ்ட் பைப் இருக்கிறது. மேலும் டியூக் 200-ன் சப்-ஃபிரேம் வெல்டிங் செய்யப்பட்டிருந்தால், Svartpilen 200-ல் Bolt-On சப்-ஃபிரேம் இடம்பிடித்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கு வரும் ஹஸ்க்வர்னா பைக்கில் கிராப் ரெயில் உண்டு.

Svartpilen 250
Svartpilen 250
Husqvarna
2020 ஹீரோ HF டீலக்ஸ் - நாட்டின் முதல் 100சிசி BS-6 பைக் இதுதான்!

அநேகமாக இந்த 250சிசி ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனைக்கு வரும்போது, அவை கேடிஎம் மாடல்களைவிட 10,000 - 20,000 ரூபாய் அதிகமாக இருக்கலாம் எனத் தகவல் வந்திருக்கிறது. 200சிசி மாடலில் Svartpilen முதலில் வந்தாலும், இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து Vitpilen 200 பின்னர் வரும் எனலாம். பைக் ஆர்வலர்கள் பரவலாக எதிர்பார்த்த 401 சீரிஸ் ஹஸ்க்வர்னா பைக்ஸ், 2021-ம் ஆண்டில் நடுவே வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இதில் 44bhp பவர் மற்றும் 3.7kgm டார்க்கை வெளிப்படுத்தும் 373.2சிசி இன்ஜின் - ஸ்லிப்பர் க்ளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், BS-6 அவதாரத்தில் வரும்போது, இதன் செயல்திறன் எப்படி இருக்கும் என்பது இனிதான் தெரியும். வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் Svartpilen 401 மற்றும் Vitpilen 401 பைக்குகள் சமீபத்தில்தான் அப்டேட் செய்யப்பட்டன. அதில் புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் நீளமான சீட் இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, புதுமையான தோற்றத்தில் இருக்கும் இவற்றுக்கு, மக்கள் என்ன மாதிரியான வரவேற்பைத் தருவார்கள் என்பதைப் பார்க்க வீ ஆர் வெயிட்டிங்!