Published:Updated:

ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக்கில் எது பெஸ்ட்... நியோஸ் Vs ஸ்விஃப்ட்! #LongRead

ஆட்டோமேட்டிக் போட்டி - Hyundai Grand i10 Nios vs Maruti Suzuki Swift

Nios vs Swift

கூட்டம் கூட்டமாக எஸ்யூவிகள் இந்திய கார் சந்தையில் களேபரம் உண்டாக்க, தனி ரகமாக ஹேட்ச்பேக் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது ஹூண்டாயின் 'நியோஸ்'. முதல் முறையாக AMT கியர்பாக்ஸுடன் களமிறங்கும் ஹூண்டாய், ஹேட்பேக் செக்மென்ட்டின் மக்கள் செல்வனாக இருக்கும் மாருதி ஸ்விஃப்ட்டுடன் போட்டிபோட்டு வெற்றிபெறுமா? பார்ப்போம்.

டிரைவிங்

கிராண்டு i10 காரில் இருக்கும் அதே இன்ஜின்தான் i10 நியாஸிலும் உள்ளது. ஆனால், இதில் பிஎஸ்-6 இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் டார்க் கன்வர்ட்டருக்குப் பதில், AMT கியர்பாக்ஸ் வருகிறது. வீல்பேஸ் மற்றும் வசதிகள் அதிகம் கொடுத்து செலவுகளுக்குத் தயாராக இருக்கும் பட்ஜெட் கார் விரும்பிகளுக்குத் தூண்டில் போட்டுள்ளது ஹூண்டாய்.

Nios vs Swift
Nios vs Swift

நியோஸின் பிஎஸ்6 இன்ஜின், ஐடிலிங் மற்றும் குறைவான வேகங்களில் அமைதியாக இருக்கிறது. வைப்ரேஷன்களும் இன்ஜின் சத்தங்களும் காருக்குள் தெரியாமல் இருப்பதைப் பாராட்டலாம். பவர் டெலிவரி, டிவி நியூஸ்போல பரபரப்பாக இல்லாமல், டிவி சீரியல்போல மந்தமாகவே இருக்கிறது. ஸ்விஃப்ட் அளவுக்கு சுறுசுறுப்பான இன்ஜின் ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால், ஓவர்டேக் செய்வதற்கு இன்ஜினை அதிக RPM-ல் வைத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது.

0-100 கி.மீ வேகம் தொட 15.28 நொடிகள் எடுத்துக்கொள்கிறது நியோஸ். AMT கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இருந்தாலும் கியர் மாற்றங்கள் மொதுவாக இருக்கின்றன. கியர் உடனுக்குடன் மாற வேண்டும் என்றால், மேனுவல் மோடில் போடுங்கள் என இன்டீரியரில் ஒரு போர்டு வைத்தால் நலமாக இருக்கும். சரி, அப்படியே மேனுவலில் போட்டாலும், உண்மையான மேனுவல் கியர்பாக்ஸ் அளவுக்கு கியர் மாற்றங்கள் வேகமாக இல்லை.

ஹூண்டாய் நியோஸ்
ஹூண்டாய் நியோஸ்
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

சிட்டி டிரைவிங் என வரும்போது எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் போல கியர்பாக்ஸ், இன்ஜினுக்கு செம பொருத்தம். முதல் கியரிலிருந்து இரண்டாவது கியர் போகும்போது மட்டும் தர்மயுத்தம் தொடங்குகிறது. அதாவது, கியர்பாக்ஸ் தேவையில்லாமல் ஜெர்க் கொடுக்கிறது. டிராஃபிக்கில் ஊர்ந்துசெல்வதும், மலை ஏற்றங்களும் அப்ளாஸ் அள்ளும் அளவுக்கு அருமை. கொடிவேரி டேம் நிறைந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். விலங்குகளைப் பார்க்க மசினகுடிபக்கம் ஒரு ட்ரிப் அடிக்கலாம். ஆனால், மலையேறும் முன் ஹேண்டிலிங்கில் பழக்கம் தேவை. ஸ்டீயரிங்கின் ஃபீல் மற்றும் ஃபீட்பேக் போதுமானதாக இல்லை.

ஸ்டீயரிங் எடை குறைவாக இருப்பது நெரிசலான சாலைகளில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். சொகுசான ரைடிங் என்றால் நியோஸ்தான் நிபுணன். கரடுமுரடு சாலைகளிலும் பள்ளம்மேடுகளிலும் அடித்து ஓட்டுவதற்கு நியோஸ் சூப்பர். ஷாப்பிங் மால் பார்க்கிங்கில் இருக்கும் கறுப்பு, மஞ்சள் ஸ்பீடுபிரேக்கரில் ஏற்றும்போதுகூட கார் சொகுசாகவே இருக்கிறது. இருந்தாலும், 100 கிலோமீட்டருக்கு மேல் வேகங்களில் செல்லும்போது சாலையில் இருக்கும் சின்னப் பள்ளங்களுக்கே கீழும், மேலுமாகத் தூக்கிப்போடுகிறது. அதிவேகங்களில் நம்பிக்கை தருவதாக இல்லை.

இன்ஜின் மற்றும் பர்ஃபாமன்ஸில் செக்மென்ட்டின் 'சொப்பன சுந்தரி' இந்த மாருதி ஸ்விஃப்ட். இந்தியாவில் உள்ள பல கார் நிறுவனங்களுக்கு ஹேட்ச்பேக் என்றாலே ஸ்விஃப்ட்டின் பர்ஃபாமென்ஸ்தான் பெஞ்ச்மார்க். இதன் 1.2 லிட்டர் இன்ஜின் 83bhp பவர் வெளிப்படுத்துகிறது. பென்சில் விளம்பரத்தில் அழகான கையெழுத்துக்கு 5 மார்க் எக்ஸ்ட்ராவாகப் போடுவதுபோல இதன் பவர் டெலிவரிக்கு எக்ஸ்ட்ரா மார்க் கொடுக்கலாம். 2,200rpm தாண்டிவிட்டால், க்ளைமாக்ஸில் அடிவாங்கி படுத்திருக்கும் ஹீரோ திடீரென பவர் வந்து வில்லன்களைப் புரட்டி எடுப்பதைப்போல ஒரு பவர் எழுச்சியைக் காட்டுகிறது இந்த இன்ஜின்.

க்ளைமாக்ஸில் பாட்டுப்பாடி வெறியேற்றும் ஹீரோயின்போல AMT கியர்பாக்ஸ்க்கு, இன்ஜினுக்குச் சரியான பொருத்தம். வேகத்தில் சோர்வில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால், 0-100 கி.மீ வேகத்தை 13.2 நொடிகளிலேயே தொடுகிறது ஸ்விஃப்ட். ஓவர்டேக்கிங்கிலும் இந்த இன்ஜின் ரெஸ்பான்ஸ்தான் உதவுகிறது.

நியோஸ் டிரைவர் சீட்
நியோஸ் டிரைவர் சீட்
ஸ்விஃப்ட் டிரைவர் சீட்
ஸ்விஃப்ட் டிரைவர் சீட்

5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் சிறப்பாக இருந்தாலும் நியோஸைவிட அதிர்வுகள் அதிகம். ஸ்விஃப்ட்டின் மேனுவல் மோடு லாங் டிரைவ்களில் இன்னும் த்ரில் சேர்க்கும் (அப்போ பாதுகாப்பு... அது வேற டிப்பார்ட்மென்ட்). ஹேண்டிலிங் நியோஸைவிட தரம். பிரச்னை என்னவென்றால் ஸ்டீயரிங்குக்கும் சாலைக்கும் ரொமான்ஸே இல்லை. ஸ்டீயரிங் ஃபீல் ரொம்ப சுமார். காரை வேகமாகத் திரும்பும்போது பாடியின் கன்ட்ரோல் மற்றும் டயரின் க்ரிப் ஒன்ஸ்மோர் கேட்கிறது. பர்ஃபாமன்ஸ் பிரியர்களின் பாராட்டுகள் நிச்சயம்.

ஸ்டீயரிங்கைத் தவிர்த்து பார்த்தால் ஸ்விஃப்ட் செம சுட்டி கேரக்டர். சொகுசு என வரும்போதுதான் சொங்கிவிடுகிறது. ரைடிங் நியோஸ் அளவுக்கு சௌகரியமாக இல்லை. சஸ்பென்ஷன் ஹார்டாக இருப்பதால் பெரிய ஸ்பீடு பிரேக்கர்களும் கரடுமுரடு சாலைகளும் நம்மைத் தூக்கிப்போடுகின்றன. நெடுஞ்சாலை ஸ்டெபிளிட்டி சூப்பர்.

car interior
car interior

இன்டீரியர்

இப்போதெல்லாம் எந்தக் காரில் ஏறினாலும் ஒன்று போலவே இருக்கிறது. இன்டீரியரின் டிசைன் அப்படி. இந்தச் சூழலில் ஹூண்டாயின் இன்டீரியர் கொஞ்சம் புத்துணர்ச்சியைத் தருகிறது. டேஷ்போர்டில் இருக்கும் வெளிர் நிற பிளாஸ்டிக் பிஎம்டபிள்யூ ஃபீல் இல்லை. ஆனால், ப்ரீமியம் ஃபீல் உறுதி. பிளாஸ்ட்டிக்கின் டெக்ஸ்சரும் வித்தியாசமாக இருக்கிறது. எங்களுக்கு பிடித்திருந்தது... உங்களுக்கும் பிடிக்கலாம். 

நியோஸ் இன்ட்டீரியர்
நியோஸ் இன்ட்டீரியர்

8.0 இன்ச் டச்ஸ்கிரீனின் ரெஸ்பான்ஸ் அருமை. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அனலாக் RPM மீட்டர் என இரண்டாகப் பிரித்துள்ளார்கள். சென்ட்டர் கன்சோல் பழைய டிசைன். ஆனால், ஸ்விட்சுகள் தரம் அருமை.  கிரே நிற சீட் வேலைப்பாடுகள் புதுசாகவும் பளிச்செனவும் இருக்கிறது. அழுக்குப்படிந்தால் இன்டீரியர் அழகு அதோகதிதான்.

நியோஸ் பின்பக்க கேபின்
நியோஸ் பின்பக்க கேபின்

முன்பக்க சீட்டில் நல்ல சப்போர்ட் இருக்கின்றன. போல்ஸ்ட்டர் சப்போர்ட் இல்லையென்பதால் சீட் தட்டையாக இருப்பதுபோல தெரிகிறது. கிராண்டு i10 மாடலைவிட நியோஸில், வீல்பேஸ் எக்ஸ்ட்ரா என்பதை பின்சீட்டில் உட்காரும்போது உணரலாம். பின்பக்கம் ஏசி வென்ட் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் வசதி இந்த செக்மென்ட்டிலேயே நியோஸில் மட்டும்தான் உள்ளது. பூட்ஸ்பேஸ் ஸ்விஃப்ட்டைவிட 8 லிட்டர் சிறியது. அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் மற்றும் குழந்தைகள் சீட்டுக்கான ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள் இல்லை.

ஸ்விஃப்ட் இன்ட்டீரியர்
ஸ்விஃப்ட் இன்ட்டீரியர்
கார் டிரைவரால் தொடங்கிய முதல் உலகப்போர்! | #Worldnews #Worldhistory

ஸ்விஃப்ட்டின் இன்டீரியர் பழகிப்போய்விட்டது. பவர்விண்டோ ஸ்விட்ச், டேஷ்போர்டு பிளாஸ்டிக் எல்லாமே டல் அடிக்கின்றன. இருந்தாலும், ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், போல்ஸ்ட்டர் சீட் எல்லாம் வைத்துப் பார்க்க ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் படிக்க சுலபமாக இருக்கிறது. 7 இன்ச் ஸ்மார்ட் பிளே சிஸ்டம் பயன்படுத்த சுலபம். இடவசதி ஓரளவு நன்றாகவே உள்ளது. நியோஸைவிட சீட் சாஃப்ட்டாகவும் சொகுசாகவும் இருப்பதால் லாங் டிரைவுகளுக்கு ஓகே.

ஸ்விஃப்ட் பின்பக்க கேபின்
ஸ்விஃப்ட் பின்பக்க கேபின்

பின்பக்கம் நல்ல இடவசதி உள்ளது. ஆனால், கறுப்பு கேபின், ரியர் குவாட்டர் கிளாஸ் இல்லாதது, விண்டோ உயரமாக இருப்பது என மூன்றும் சேர்ந்து இருட்டு ரூமில் அடைத்து வைத்ததைப்போல இருக்கிறது. பூட் ஸ்பேஸ் 268 லிட்டர். பின்சீட்டை மடித்து இந்த ஸ்பேஸை அதிகரித்துக்கொள்ளலாம் என்பது லாங் டூர் விரும்பிகளுக்குக் கூடுதல் ப்ளஸ்.

Vikatan
இன்ஃபோடெயின்மென்ட்
இன்ஃபோடெயின்மென்ட்

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

நியோஸின் டாப் வேரியன்ட்டில் ஏகப்பட்ட வசதிகள் உண்டு. ஆனால், AMT கியர்பாக்ஸில் அதிகபட்சம் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் மட்டுமே வாங்க முடியும். இதனால், ஒயர்லெஸ் சார்ஜிங், 15 இன்ச் ரியர் வீல், பின்பக்க வாஷர்/வைப்பர், கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் கிடைக்காது. LED DRL, ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வென்ட், டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், EBD மற்றும் ரிவர்ஸிங் கேமரா & பார்க்கிங் சென்சார்கள் உண்டு.

நியோஸ் vs ஸ்விஃப்ட் வசதிகள்
நியோஸ் vs ஸ்விஃப்ட் வசதிகள்

ஸ்விஃப்ட் AMT மாடலை டாப் வேரியன்ட்டான ZXi+ வேரியன்ட்டிலேயே வாங்கலாம். இதில் LED ஹெட்லைட் மற்றும் DRL, 15 இன்ச் அலாய் வீல், கீலெஸ் என்ட்ரி, ஸ்மார்ட்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேடிக் ஹெட்லைட், ரியர் வாஷ்ர்/வைப்பர் போன்ற வசதிகள் வருகின்றன. பாதுகாப்பு வசதிகளாக டூயல் ஏர்பேக், ABD & EBD, பிரேக் அசிஸ்ட் மற்றும் ஐசோஃபிக்ஸ் மவுன்ட் வருகின்றன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு கார்களும் ஒன்றுபோலவே உள்ளன. அதிக பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த செக்மென்ட்டில் ஃபோர்டு ஃபிகோவைத் தவிர வேறு மாடல் இல்லை.

எதை வாங்குவது?

கிராண்டு ஐ10 நியோஸ் AMT, ரூ.7.47 லட்சத்துக்கு மேக்னா; ரூ.8.17 லட்சத்துக்கு ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியன்ட்டில் கிடைக்கிறது. ஸ்விஃப்ட்டின் டாப் வேரியன்ட்டான ZXI+ AMT ரூ.9.37 லட்சத்துக்கு வருகிறது. இது நியோஸை விட ரூ.1.2 லட்சம் அதிகம். ஸ்விஃப்ட்டில் VXi AMT வேரியன்ட், ரூ.7.82 லட்சத்துக்கு வருகிறது. இதுநியோஸைவிட 36,000 ரூபாய் மட்டுமே விலைக்குறைவு. வசதிகளும் ரொம்பவே குறைவு. 

பெரிய டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் மீட்டர், LED DRL, புது ஸ்டீயரிங் வீல் - 2019 ரெனோ க்விட் எப்படி?

ஓனர்ஷிப் காஸ்ட் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை ஒப்பிட்டடால் ஹூண்டாய் மற்றும் மாருதி இரண்டு நிறுவனத்துக்கு பெரிய வித்தியாசம் கிடையாது. ஜாலி ரைடு விரும்புபவர்கள் ஸ்விஃப்ட்டை விரும்புவார்கள். மற்றபடி ஒரு குடும்பத்துக்கான சொகுசான, ஸ்டைலான, ஆடம்பரம் நியோஸ்.