Published:Updated:

1.95 லட்சத்துக்கு வந்திருக்கும் ஜாவா Perak பைக்கில் என்ன ஸ்பெஷல்? #JawaPerak

ஜாவா மற்றும் ஜாவா 42 BS-4 பைக்குகளாக இருக்கும் நிலையில், ஜாவா Perak BS-6 அவதாரத்தில் வந்திருப்பது பெரிய ப்ளஸ்.

Jawa Perak
Jawa Perak ( Jawa India )

கடந்தாண்டு இதே நவம்பர் மாதத்தில் 3 பைக்குகளை ஜாவா நிறுவனம் காட்சிப்படுத்தியது தெரிந்ததே. அதில் ஜாவா மற்றும் ஜாவா 42 ஏற்கெனவே விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது கடைசி மாடலான ஜாவா Perak-க்கும் ஒரு வழியாக வெளிவந்துவிட்டது. 1.95 லட்ச ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) வந்திருக்கும் இது, கடந்தாண்டு கூறப்பட்டதைவிட 6,000 ரூபாய் அதிக விலையில் கிடைக்கிறது. ஜாவா மற்றும் ஜாவா 42 BS-4 பைக்குகளாக இருக்கும் நிலையில், ஜாவா Perak BS-6 அவதாரத்தில் வந்திருப்பது பெரிய ப்ளஸ். இதுதான் விலையேற்றத்துக்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

புத்தாண்டு முதல் இந்த பைக்கின் புக்கிங் தொடங்கும் என்பதுடன், ஏப்ரல் 2, 2020-ம் தேதி முதல் டெலிவரிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களைப் போலவே, ஜாவா Perak-ம் அதிக வெயிட்டிங் பீரியட்டைக் கொண்டிருப்பது முரண் (5-8 மாதங்கள்). இந்த பைக்குக்கு எனப் பிரத்யேகமான போட்டியாளர்களே இல்லை!

Jawa Perak
Jawa Perak
Jawa India

ரெட்ரோ மாடர்ன் டிசைனைக் கொண்ட ஜாவா & ஜாவா 42 ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, Bobber பாணி வடிவமைப்பில் கெத்தாகக் களமிறங்கியுள்ளது Perak. குறைவான உயரம் - அதிக நீளம், க்ரோமுக்குப் பதிலாக மேட் ஃபினிஷ், Floating சிங்கிள் சீட், சிறிய ஃபெண்டர்கள், Bar End மிரர்கள், மெலிதான இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன், வித்தியாசமான Tool Box ஆகியவை அதற்கான உதாரணம். ஜாவா & ஜாவா 42 விட ஜாவா Perak 15மிமீ குறைவான சீட் உயரம் (750மிமீ) மற்றும் 116மிமீ அதிக வீல்பேஸ் (1,469மிமீ) கொண்டிருக்கிறது.

மேலும், பின்பக்கத்தில் ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர்களுக்குப் பதிலாக, 7 விதமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கிறது. இதனால் Double Cradle Tubular Frame-ல் இருக்கும் Sub Frame புதிது; டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் அதேதான் (இதில் டிரம் பிரேக் ஆப்ஷன் கிடையாது)! என்றாலும், டயரின் சைஸில் மாற்றம் தெரிகிறது. (முன்: 100/90-18, பின்: 140/70-17). ஜாவா, ஜாவா 42 பைக்கில் MRF டயர்கள் இருந்த நிலையில், ஜாவா Perak பைக்கில் CEAT டயர்கள் உள்ளன. இப்படியான கணிசமான மாற்றங்களால், ஜாவா Perak பைக்கின் எடை முன்பைவிட 9 கிலோ கூடிவிட்டது (179 கிலோ).

Jawa Perak
Jawa Perak
Jawa India

ஜாவா பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 334சிசி இன்ஜின், 30bhp பவர் மற்றும் 3.1kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், ஜாவா & ஜாவா 42 போலவே 11:1 Compression Ratio - லிக்விட் கூல்டு - 4 வால்வ் - DOHC - Fi அமைப்பு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினின் 65மிமீ Stroke-ல் மாற்றமில்லாவிட்டாலும், முன்பைவிட பெரிய Bore-யைக் கொண்டிருக்கிறது (76மிமீ-ல் இருந்து 81மிமீ). ஜாவா & ஜாவா 42 பைக்கைவிட அதிக எடையை ஜாவா Perak கொண்டிருப்பதால், இந்த அதிக பவர்/டார்க் அதை ஈடுகட்டிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதற்குப் போட்டி பைக்குகளே இல்லாவிட்டாலும், விலை விஷயத்தில் ஜாவா கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், இந்த விலையில் இந்த லுக்கில் வேறு எந்த பைக்கும் கிடையாது என்பது ப்ளஸ்.

Jawa Perak
Jawa Perak
Jawa India
ராயல் என்ஃபீல்டு & ஜாவா-வுக்குப் போட்டி... வந்துவிட்டது பெனெல்லி இம்பீரியல் 400