டியூக் 250 பைக்கின் அதே ஸ்ப்ளிட் ட்ரெல்லிஸ் ஃபிரேம், LED DRL உடனான ஹாலோஜன் ஹெட்லைட், டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு, BS-6 எக்ஸாஸ்ட் ஆகியவை BS-6 டியூக் 200-ல் இடம்பெற்றுள்ளன.
தனது Flagship பைக்கான அப்பாச்சி RR 310 பைக்கை, ஜனவரி 30, 2020 அன்று மாலை வேளையில் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. ஆனால், அதே தேதி காலையில் 390 அட்வென்ச்சர் தவிர்த்து, தான் இந்தியாவில் விற்பனை செய்யும் பைக்குகளின் BS-6 வெர்ஷன்களைத் தடாலடியாகக் களமிறக்கிவிட்டது கேடிஎம்! 2012-ம் ஆண்டு இதே நிறுவனம் நம் நாட்டில் அறிமுகப்படுத்திய டியூக் 200-ன் அடுத்த தலைமுறை மாடல், பைக் ஆர்வலர்களின் நீண்ட காலக் காத்திருப்புக்கானத் தீர்வாக வந்துவிட்டது BS-6 790 டியூக். ஏப்ரல் 2020-க்குப் பிறகு வெளியாகலாம் எனத் தகவல் வந்திருக்கிறது. இதர பைக்குகளில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.
டியூக் 125 & RC 125
முறையே 1.38 லட்சம் மற்றும் 1.55 லட்சம் ரூபாய்க்கு (விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்), டியூக் 125 மற்றும் RC 125 பைக்கின் BS-6 வெர்ஷன்கள் வெளிவந்திருக்கின்றன. முன்பைவிட 5,500 - 6,500 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் இவை, அதே 14.5bhp பவர் மற்றும் 1.2kgm டார்க்குடன் கிடைப்பது ப்ளஸ். புதிய எக்ஸாஸ்ட்டுடன் இருந்தாலும், BS-6 டியூக் 125 பைக்கின் எடை 6.6 கிலோ குறைந்துவிட்டது (141.4 கிலோ)! இதுவே RC 125 பைக்கைப் பொறுத்தவரை, அது புதிய எக்ஸாஸ்ட் - கலர்/கிராஃபிக்ஸ் உடன் கிடைக்கிறது. மற்றபடி விலை உயர்வுக்கு இணையாக, பைக்கின் வசதிகளில் எந்த மாறுதலும் இல்லாதது நெருடல். பிப்ரவரி 2020 மாதத்தின் இறுதியில் இந்த இரு ப்ரீமியம் 125 பைக்குகளின் விற்பனை தொடங்கும் எனத் தெரிகிறது.

டியூக் 250 & RC 200
இரு புதிய கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷனுடன் (Silver Metallic, Dark Galvano), 2.01 லட்ச ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) டியூக் 250 BS-6 கிடைக்கிறது. முன்பைவிட 3,300 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், அதே 30bhp பவர் மற்றும் 2.4kgm டார்க்குடனேயே வருகிறது. ஆனால், முன்பைவிட இதன் எடை 1 கிலோ அதிகரித்துவிட்டது (162 கிலோ). அநேகமாக எக்ஸாஸ்ட் பைப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றமே இதற்கான காரணமாக இருக்கலாம்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, LED ஹெட்லைட் - TFT டிஸ்பிளே ஆகிய வசதிகளை டியூக் 250-ல் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பில் SuperMoto மோடு தரப்பட்டுள்ளது. புதிய கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கக்கூடிய RC 200, அதே 25bhp பவர் மற்றும் 1.92kgm டார்க்கைத் தருகிறது. 1.97 லட்சம் ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) வந்திருக்கும் RC 200, 6,100 ரூபாய் விலை உயர்வைப் பெற்றிருக்கிறது. அதை நியாயப்படுத்தும் விதமாக, இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

டியூக் 390 & RC 390
வழக்கம்போல புதிய கலர் - கிராபிக்ஸ் தவிர (Silver Metallic, Ceramic White), விலை அதிகமான - பவர்ஃபுல் பைக்குகளில் இருக்கக்கூடிய Bi-Directional Quick-Shifter வசதியை டியூக் 390-ல் வழங்கியிருக்கிறது கேடிஎம். இதனால் கியர்களை மாற்றும்போது க்ளட்ச்சைப் பயன்படுத்தக்கூடிய தேவை இல்லை என்பது சிறப்பு. 2.53 லட்ச ரூபாய்க்குக் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கக்கூடிய இந்த நேக்கட் பைக், முன்பைவிட 4,700 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது. 390 அட்வென்ச்சர்போல இதிலும் Switchable டிராக்ஷன் கன்ட்ரோல் இருந்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. மற்றபடி புதிய கலர் - கிராஃபிக்ஸுடன் வந்திருக்கும் RC 390, 4,000 ரூபாய் அதிக விலையில் கிடைக்கிறது (2.48 லட்ச ரூபாய், டெல்லி எக்ஸ்-ஷோரூம்). டியூக் 390 போலவே, இதுவும் 43.5bhp பவர் மற்றும் 3.6kgm டார்க்கையே வெளிப்படுத்துகிறது.

2020 டியூக் 200
இந்தப் பட்டியலில், அதிக விலை உயர்வு (10,500 ரூபாய்) மற்றும் அதிகப்படியான மாற்றங்களைப் பெற்றிருக்கும் பைக் இதுதான்! அதன்படி டியூக் 250 பைக்கின் அதே ஸ்ப்ளிட் ட்ரெல்லிஸ் ஃபிரேம், LED DRL உடனான ஹாலோஜன் ஹெட்லைட், டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு, BS-6 எக்ஸாஸ்ட் ஆகியவை, BS-6 டியூக் 200-ல் இடம்பெற்றுள்ளன. ஆனால், இங்கே Super Moto மோடு கிடையாது என்பதுடன், சஸ்பென்ஷன் - டிஸ்க் பிரேக்ஸ் - இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை அப்படியே BS-4 டியூக் 200 பைக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளன. ஆனால் பெட்ரோல் டேங்க்கின் அளவு 3 லிட்டர் அதிகரித்திருப்பதால் (13.5 லிட்டர்), பைக்கின் ரேஞ்ச் 30% அதிகமாகியிருப்பதாக கேடிஎம் கூறியுள்ளது.

இவ்வளவு மாற்றங்கள் இருந்தாலும், BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷனின் எடை வெறும் 2 கிலோ மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. இதனால் RC 200 போலவே 25bhp பவர் மற்றும் 1.93kgm டார்க்கைக் கொண்டிருக்கும் இந்த நேக்கட் பைக், பர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் வித்தியாசத்தைப் பெற்றிருக்கும் என நம்பலாம். Electronic Orange, Ceramic White எனும் இரு புதிய கலர் - கிராபிக்ஸுடன் வந்திருக்கும் டியூக் 200-ன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 1.73 லட்ச ரூபாய்.