Published:Updated:

`வேகமானவர்; ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்வார்!- 6-வது முறையாக ஹாமில்ட்டன் உலக சாம்பியன்

2019-ம் ஆண்டின் F1 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ஹாமில்ட்டன். 6-வது சாம்பியன்ஷிப் மட்டுமில்லை, இது ஹாட்ரிக் சாம்பியன்ஷிப்.

Hamilton
Hamilton

நேற்று நள்ளிரவு, டெக்ஸாஸில் நடைபெற்ற F1 போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்தாலும், புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலைபெற்று, 2019 ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், லூயிஸ் ஹாமில்ட்டன்.

லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்

5 உலக சாம்பியன் பட்டங்கள் வாங்கிய யுவான் மேனுவல் ஃபேங்கியோவின் சாதனையை முறியடித்துள்ளார், லூயிஸ் ஹாமில்ட்டன். வரலாற்றில் 2-ம் வேகமான ரேஸராக இருக்கும் இவர், F1-ன் ஆல்டைம் ஹீரோ மைக்கேல் ஷூமேக்கரின் 7 உலக சாம்பியன்ஷிப் சாதனையை சமன் செய்வாரா என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.

மெக்ஸிகோ போட்டியை முதலிடத்தில் முடித்துவிட்டு, சாம்பியன்ஷிப்புக்கு இன்னும் 4 புள்ளிகள் இருந்தால் போதும் என்ற நிலையில், நேற்று சர்க்யூட் ஆஃப் அமெரிக்காவின் ரேஸைத் தொடங்கினார் ஹாமில்ட்டன். இந்த 56 சுற்று பந்தயத்தின் இரண்டாம் பாதியில், ஹாமில்ட்டனை ஓவர்டேக் செய்து டஃப் கொடுத்தார், மெர்சிடீஸ் அணியின் இன்னொரு வீரர் வேல்ட்ரி போட்டாஸ்.

ஹாமில்ட்டன்
ஹாமில்ட்டன்

ரேஸின் முடிவில் இரண்டாம் இடம் பிடித்து, 18 புள்ளிகள் பெற்று தனது 6-வது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார். ஹாமில்ட்டனுக்கு இது ஹாட்ரிக் சாம்பியன்ஷிப். 2008, 2014, 2015, 2017, 2018 மற்றும் 2019 என வெற்றிப்பட்டியல் நீண்டுகொண்டே இருக்க, ''இன்னும் எத்தனை சாம்பியன்ஷிப் வெல்வேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு விளையாட்டு வீரனாக நான் எவ்வளவு புதிதாக இருக்கமுடியுமோ அப்படி இருக்கிறேன். ஒரு டீமாக அடுத்த சாம்பியன்ஷிப்பில் இன்னும் தொடர்ந்து கடினமாகப் போராடுவோம்'' என்கிறார் ஹாமில்ட்டன்.

கடந்த இரண்டு சீசன்கள் போல் இல்லாமல், இந்த முறை சாம்பியன்ஷிப்புக்கு கடும் போட்டி இருந்தது. மெர்சிடீஸ் ரேஸர் வேல்ட்ரி போட்டாஸ், ஃபெராரியின் செபாஸ்ட்டியன் வெட்டல், சார்லெஸ் லெக்லார்க், ரெட்புல் அணியின் மேக்ஸ் வெஸ்ட்டபன் என முதலிடத்துக்காக ஒவ்வொரு போட்டியிலும் ரேஸர்கள் வேகமெடுக்க, ஹாமில்ட்டனின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கன்சிஸ்டென்ஸி.

இந்த ஆண்டு நடைபெற்ற பல போட்டிகளில், தகுதிச் (Qualifying) சுற்றில் பின்தங்கியிருந்தபோதும் ரேஸில் ஹாமில்ட்டன் முதலிடம் பிடித்துள்ளார். இதற்குக் காரணம், இவரின் Consistent driving. அதாவது, போட்டியில் ஆரம்பம் முதல் முடிவு வரை கொஞ்சமும் தடுமாறாமல் சீரான வேகத்தில் தொடர்ந்துள்ளார்.

F1 சாம்பியன் ஹாமில்ட்டன்
F1 சாம்பியன் ஹாமில்ட்டன்

ஹாமில்ட்டன் வெற்றி பற்றி மெர்சிடீஸ் அணியின் தலைவர் டோட்டோ உல்ஃபிடம் கேட்டபோது, "இத்தனை ரேஸர்களைக் கடந்தும் ஷூமேக்கரின் சாதனை இன்னும் சாதனையாகவே நிலைத்திருப்பதற்கு ஒரு காரணம், அது கஷ்டமானது. ஹாமில்ட்டன் வேகமானவர். எவ்வளவுதான் வேகமாக ஓட்டினாலும், இன்னும் முன்னேற என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்ப்பவர். இந்த குணம்தான் மற்ற டிரைவர்களிடம் இருந்து ஹாமில்ட்டனை தனித்துக் காட்டுகிறது. ஹாமில்ட்டன், ஷூமேக்கரின் சாதனையைச் சமன் செய்வார்'' என்றார்.