இரண்டாம் தலைமுறை எர்டிகா... கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான இந்த எம்பிவி, மஹிந்திரா மராத்ஸோ மற்றும் ரெனோ லாஜிக்குப் போட்டியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இங்கே அதிகளவில் விற்பனையாகும் டாப்-5 யுட்டிலிட்டி வாகனங்களில், எர்டிகாவுக்கு நிச்சயமாக ஒரு இடமிருக்கும்! பட்ஜெட்டில் ஃபேமிலி கார் வாங்க வேண்டும் என்பவர்களால் தவிர்க்க முடியாத வாகனமாக இருக்கும். இதில், போட்டியாளர்களைச் சமாளிக்கும் விதத்தில் இந்த ஆண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது மாருதி சுஸூகி.

இந்த நிறுவனத்தின் சொந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல், டாக்ஸி மார்க்கெட்டுக்கு எனப் பிரத்யேகமான Tour மாடல், வடமாநிலத்தாரை மனதில்வைத்து CNG-யில் இயங்கும் மாடல், அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மாடல் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.
எர்டிகாவுக்கு இருக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு க்ராஸ்ஓவரைத் தயாரித்துள்ளது மாருதி சுஸூகி. XL6 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதை, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. எர்டிகாவுடன் ஒப்பிடும்போது, காரில் என்ன மாற்றங்கள் இருக்கின்றன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிசைன் மற்றும் கேபினில் என்ன வித்தியாசம்?
XL6-ன் பாடி பேனல்கள் (கதவுகள், டெயில்கேட், LED டெயில் லைட்) மற்றும் பிளாட்ஃபார்ம் (சேஸி), எர்டிகாவில் இருந்தே பெறப்பட்டுள்ளன. ஆனால், கார் பார்க்க எர்டிகாவைவிட வித்தியாசமாகவே இருக்கிறது. இதற்கு உயரமான மற்றும் தட்டையான பானெட், க்ரோம் பட்டை கொண்ட பெரிய கிரில், ஷார்ப்பான LED ஹெட்லைட்ஸ், Faux Aluminium Skid Plates கொண்ட பம்பர்கள், பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில், உயர்த்தப்பட்ட Ride Height, கறுப்பு நிற மிரர்கள், அலாய் வீல்கள், டெயில் கேட் ஆகிய மாற்றங்களே இதற்கான காரணம். LED DRL கிரில்லுடன் இணையும் விதம் அழகு. சன்ரூஃப் இல்லாவிட்டாலும், டூயல் டோன் Contrast ரூஃப் இடம்பெறலாம். ஆனால், XL6-ன் முன்பக்கத்துடன் ஒப்பிட்டால், பின்பக்கத்தில் பெரிய மாறுதல்கள் இல்லை. புதிய அம்சங்களால், எர்டிகாவைவிட 50 மிமீ அதிக நீளம் - 40 மிமீ அதிக அகலம் - 10 மிமீ அதிக உயரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது XL6.

ஆனால் 2,740மிமீ வீல்பேஸ் மற்றும் 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் அதேதான். தனது பெயருக்கேற்றபடியே, இந்த கார் 6 சீட்களுடனே வரும்; எனவே, எர்டிகாவின் நடுவரிசையில் இருக்கும் பெஞ்ச் சிட்டுக்குப் பதிலாக 2 கேப்டன் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எர்டிகாவில் Faux Wood வேலைப்பாடுகளுடன்கூடிய பீஜ் நிற கேபின் இருந்தால், XL6-ல் Piano Black வேலைப்பாடுகள் கொண்ட கறுப்பு நிற கேபின் உள்ளது. லெதர் அப்ஹோல்சரி செம என்றாலும், இடவசதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. காரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அனைத்து வேரியன்ட்களிலும் 2 காற்றுப்பைகள் - ABS - EBD - பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் - ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் - சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை ஸ்டாண்டர்டு எனலாம். டாப் வேரியன்ட்களில் 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, தானாக இயங்கும் ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், பின்பக்க வைப்பர், ரிவர்ஸ் கேமரா ஆகியவை இருக்கலாம்.
இன்ஜின் ஆப்ஷன் மற்றும் விலை எப்படி?

எர்டிகாவில் இரண்டு டீசல் இன்ஜின்கள் இருக்கும் நிலையில் (1.3 லிட்டர் DDiS 200 SHVS மற்றும் 1.5 லிட்டர் DDiS 225), XL6-ல் டீசல் இன்ஜினே இருக்காது எனத் தகவல் வந்திருக்கிறது! எனவே BS-6 எர்டிகா போலவே, SHVS தொழில்நுட்பம் உடனான 1.5 லிட்டர் BS-6 K15B பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவம் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன்தான் இந்த க்ராஸ்ஓவர் வரும். முன்னே சொன்ன மாற்றங்களால், XL6-ன் எடை எர்டிகாவைவிட அதிகமாக இருக்கலாம் என்பதால்,

பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜில் சின்ன மாற்றம் இருக்கலாம். இது சியாஸ் இருக்கும் நெக்ஸா டீலர்ஷிப்பில் (இந்தியா முழுக்க 206 நகரங்களில் 363 Touch-Points) விற்பனை செய்யப்படும். இதனால் எர்டிகாவைவிட பிரிமியம் தயாரிப்பாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் XL6-ன் விலை, எப்படியும் அதைவிட 50,000 - 75,000 ரூபாயாவது அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. அந்த பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய ஒரே 6 சீட்டராக இந்த க்ராஸ்ஓவர் இருக்கும். XL6-ன் புக்கிங் இன்னும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை.