Published:Updated:

சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250, சிறந்த ஸ்கூட்டர் - ஆக்டிவா 125... மோட்டார் விகடன் விருதுகள் 2020

மோட்டார் விகடன் விருதுகள் 2020
மோட்டார் விகடன் விருதுகள் 2020

போட்டியாளர்களைவிட முன்னோக்கிச் சிந்தித்து, சரியான நேரத்தில் BS-6 இன்ஜினைக் கொண்டுவந்துள்ளது ஹோண்டா. அதற்கான அங்கீகாரம்தான் இது.

இது விருதுகள் காலம். கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த கார்கள் மற்றும் பைக்குகளின் விமர்சனங்கள், ஒப்பீடுகள், ஃபர்ஸ்ட் ரைடு, டிராவல் என எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி, அதில் சிறந்த வாகனங்களுக்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நேரம். மோட்டார் விகடன் ஆசிரியர் குழு மற்றும் நிபுணர்கள் விருதுகளுக்கான கார்/பைக்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த ஆண்டு மோட்டார் விகடன் விருது வாங்க இருக்கும் கார்/பைக்ஸ் இதோ...

சிறந்த கார் - கியா செல்ட்டோஸ்

‘அடிச்சான் பார்யா முதல் பால்லயே சிக்ஸர்’ - முதல்வன் படத்தில் அர்ஜுனைப் பார்த்து மணிவண்ணன் சொல்லும் இந்த வசனம், கியாவின் செல்ட்டோஸுக்கு அப்படியே பொருந்தும். ஆகஸ்ட் 2019 மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த மிட்சைஸ் எஸ்யூவி, ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் யுட்டிலிட்டி வாகனங்களில் தவிர்க்க முடியாத தயாரிப்பாக மாறிவிட்டதில் ஆச்சர்யம் இல்லை.

சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250, சிறந்த ஸ்கூட்டர் - ஆக்டிவா 125... மோட்டார் விகடன் விருதுகள் 2020

க்ரெட்டாவின் தனி ஆவர்த்தனத்தை முறியடித்திருக்கும் செல்ட்டோஸ், 18 வேரியன்ட்கள் - 3 BS-6 இன்ஜின்கள் (1.5 லிட்டர் பெட்ரோல்/1.5 லிட்டர் டீசல்/1.4 லிட்டர் டர்போ பெட்ரோல்) - 3 கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் (MT, CVT, DCT) - 2 ஸ்டைலிங் ஆப்ஷன்கள் (GT Line, Tech Line) என வெரைட்டியாக வந்ததும், அதன் அசுரத்தனமான வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. (60,000-க்கும் அதிகமான கார்கள் புக் ஆகிவிட்டன).

ஐரோப்பிய கார்களைப்போலத் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, சிறப்பான பர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதல், மனநிறைவைத் தரும் இன்ஜின் ரிஃபைன்மென்ட் மற்றும் கையாளுமை என அசத்தியது. மேலும் தரமான கேபின், வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்திலும் எகிறியடித்தது. இதனுடன் ப்ரீமியம் டிசைன் மற்றும் கட்டுபடியாகக்கூடிய விலை சேரும்போது, இந்த விருதுக்கான முழுத் தகுதியை கியா செல்ட்டோஸ் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250

ஆட்டோமொபைல் துறையின் தேக்க நிலைக்கும் மாற்றங்களுக்கும் இடையே, 2019-ம் வருடத்தில் தனித்தன்மையோடு பல பைக்குகள் விற்பனைக்கு வந்தன. இதில், சிறந்த பைக் எது என்பதற்கான தேடல், மிகப் பெரிய சவாலாக இருந்தது.

சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250, சிறந்த ஸ்கூட்டர் - ஆக்டிவா 125... மோட்டார் விகடன் விருதுகள் 2020

தினசரிப் பயன்பாட்டுக்கும், வீக்எண்ட் ரைடுக்குமான சராசரி மைலேஜ், ரைடிங்கை உற்சாகம் ஆக்கக்கூடிய பர்ஃபாமன்ஸ், ப்ரீமியம் வசதிகள், ஸ்போர்ட்டி டிசைன், விலைக்கேற்ற தரம், விற்பனை, தொழில்நுட்பம் என சிறந்த பைக்கைத் தேர்ந்தெடுக்க சில செக்லிஸ்ட்டை உருவாக்கியிருந்தோம்.

இந்த செக்லிஸ்ட்டில் அதிகப்படியாக டிக் அடிக்கப்பட்ட பைக், ஜிக்ஸர் SF 250. தேர்வுக்குழுவிலும், மக்கள் மத்தியிலும்கூட அதிக ஓட்டுகள் வாங்கிய பைக் இதுவே. BS-6 இன்ஜின் மட்டும் விட்டுப்போயிருந்தாலும், பைக் வாங்க விரும்பும் எல்லோரையும், ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்த்துவிடுகிறது ஜிக்ஸர் SF 250. இன்னும் சிம்பிளாகச் சொல்லவேண்டும் என்றால், ஜிக்ஸர் ரைடர்களுக்கான/ஆர்வலர்களுக்கான பைக்.

மோட்டார் விகடன் விருதுகள் 2020 http://bit.ly/37K1Cp2

சிறந்த ஸ்கூட்டர் - ஹோண்டா ஆக்டிவா 125

இந்தியாவில் பைக்குகளின் விற்பனையை இப்போது ஸ்கூட்டர்களின் விற்பனை ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறது. சிறந்த ஸ்கூட்டர் போட்டிக்கு இம்முறை ப்ளெஷர் ப்ளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஏப்ரிலியா ஸ்டார்ம், ஆக்டிவா 125 ஆகியவை போட்டியிட்டன.

இதில் அதிக வாக்குகளைப் பெற்று சிறந்த ஸ்கூட்டர் எனத் தேர்வாகியிருப்பது ஹோண்டாவின் ஆக்டிவாதான். `இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்’ என்ற பெருமை தவிர, அதிக வசதிகள் மற்றும் போதுமான பவர் உடன் வந்திருக்கும் இதன் ரைடு ரிப்போர்ட், 54-ம் பக்கத்தில். போட்டியாளர்களைவிட முன்னோக்கிச் சிந்தித்து, சரியான நேரத்தில் BS-6 இன்ஜினைக் கொண்டுவந்துள்ளது ஹோண்டா. அதற்கான அங்கீகாரம்தான் இது.

சிறந்த போன் - ரியல்மீ XT

18,999 ரூபாய் விலைக்கு நான்கு கேமராக்கள், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் எனப் பார்த்ததும் கவரும் வசதிகளுடன் வந்திருந்தது ரியல்மீ XT. கொடுக்கும் விலைக்கு முழுமையான ஒரு ஸ்மார்ட்போனாக இது அமைந்தது செம! இந்த போன் மூலமாக, மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் ரெட்மியை பரபரவென ஓவர்டேக் செய்தது மட்டுமல்லாமல், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை நிறுவியிருக்கிறது ரியல்மீ. 64MP கேமரா, AMOLED டிஸ்ப்ளே இதன் துருப்புச்சீட்டு.

சிறந்த பட்ஜெட் மொபைல் - ரெட்மி 8

இப்போது மிட்-ரேஞ்ச் பிரிவில்தான் அதிக மொபைல்கள் விற்பனையாகின்றன. அப்படி இருந்தும் கவனத்தைக் கைவிடாமல், மக்களைக் கவர ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயத்தை வைத்திருக்கிறது ரெட்மி. அப்படி மக்களைக் கவர்ந்த ஒரு போன்தான் ரெட்மி 8. நல்ல பில்டு குவாலிட்டி, நீடித்த பேட்டரி லைஃப் என முக்கிய பாக்ஸ்களை டிக் அடிக்கும் ரெட்மி 8, இந்த விலையில் மேம்பட்ட USB-C போர்ட்டை எடுத்து வந்தது சிறப்பு. இதனால் 'விளம்பரம் வர்றதுதாங்க பயம்... மத்தபடி ரெட்மிதான் மாஸ்' என்ற மக்களின் மைண்ட் வாய்ஸ் இந்த ஆண்டும் தொடர்ந்திருக்கிறது.

சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250, சிறந்த ஸ்கூட்டர் - ஆக்டிவா 125... மோட்டார் விகடன் விருதுகள் 2020

சிறந்த ப்ரீமியம் மொபைல் - ஒன்ப்ளஸ் 7 ப்ரோ

முதல் முறையாக 50,000 ரூபாய் விலையில் ஒன்ப்ளஸ் வெளியிட்ட முதல் போன் 7 ப்ரோதான். பாப்-அப் செல்ஃபி கேமரா, 90 Hz ஃபுல் டிஸ்ப்ளே என பல புதிய விஷயங்களை எடுத்து வந்தது 7 ப்ரோ. இதன் வருகைக்குப் பின்புதான், ப்ரீமியம் போன் என்றாலே 90 Hz டிஸ்ப்ளே இருக்கவேண்டும் என்பது சட்டமானது. மூன்று லென்ஸ்களுடன் கேமராவிலும் வெரைட்டி காட்டியதால் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் போன்களையும் ஓரம்கட்டி, இந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ.

- இவற்றுடன்... சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி | ரீடர்ஸ் சாய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி | எஸ்யூவி ஆஃப் தி இயர் | டிசைன் ஆஃப் தி இயர் | ப்ரீமியம் செடான் ஆஃப் தி இயர் | காம்பேக்ட் ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர் | ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர் | எம்பிவி ஆஃப் தி இயர் | எலெக்ட்ரிக் கார் ஆஃப் தி இயர் | லக்ஸூரி எம்பிவி ஆஃப் தி இயர் | லக்ஸூரி கார் ஆஃப் தி இயர் | ஃபேஸ்லிஃப்ட் ஆஃப் தி இயர் | சிறந்த கம்யூட்டர் பைக் | சிறந்த எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர் | சிறந்த மிட்சைஸ் பைக் | சிறந்த அட்வென்ச்சர் பைக் | சிறந்த ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை அடங்கிய முழுமையான விருதுப் பட்டியலுக்கு > மோட்டார் விகடன் விருதுகள் 2020 https://www.vikatan.com/events/editorial/motor-vikatan-awards-2020-2

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு