Published:Updated:

`வின்டேஜ் வாகனங்களுக்கு புது நம்பர் பிளேட், தனி கமிட்டி! - மத்திய அரசு அறிவிப்பு

வின்டேஜ் கார்களின் நம்பர் போர்டுகளில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி வின்டேஜ் வாகனங்களின் போர்டுகளில் VA என்று எழுத்துரு பொறிக்கப்படும்.

வின்டேஜ் கார்கள்
வின்டேஜ் கார்கள்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வின்டேஜ் கார்கள் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடைமுறையிலுள்ள வின்டேஜ் கார்களில் உள்ள பதிவு எண்ணில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக இதில் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தைக் குறிக்கும் TN எனும் எழுத்துருக்களை அடுத்து VA என்று கூடுதலாக இந்தக் கார்களில் எழுத்து பொறிக்கப்படும்.

வின்டேஜ் கார்
வின்டேஜ் கார்

மேலும், இந்த அறிவிப்பில் வின்டேஜ் கார்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் என்ற வரையறையும் கூறப்பட்டுள்ளது. ஒரு வாகனம் முதலில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு இருந்தால் அதை வின்டேஜ் வாகனங்களாக கருதலாம் என்றும் இந்த அறிவிப்பு சொல்கிறது.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் வின்டேஜ் மோட்டார் வாகனங்கள் குழு (VMVSC - Vintage Motor Vehicles State Committee) அமைக்கப்படும், இந்தக் குழுவுக்கு வாகனங்களை வின்டேஜ் என அங்கீகரிக்கவும் நிராகரிக்கவும் உரிமை வழங்கப்படும்.

வின்டேஜ் கார்களின் அங்கீகாரத்தைப் பதிவு செய்ய அல்லது மறு பதிவு செய்ய அதன் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களை வழங்க வேண்டும். வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் என்றால் அதற்கு உரிய சான்றிதழ்களும் தேவைப்படும்.

வின்டேஜ் கலெக்டர்
வின்டேஜ் கலெக்டர்

வாகனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் பழைய பதிவு சான்றிதழ் போதுமானது. ஒரு முறை பதிவு செய்ய ரூ.20,000 கட்டணம் வசூலிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட வின்டேஜ் வாகனங்களை விண்டேஜ் மோட்டார் வாகனங்கள் மாநில பதிவு ஆணையம் (VMVSC) அங்கீகரிக்கும்.

இந்த ஒப்புதலுக்குப் பிறகு, வின்டேஜ் மோட்டார் வாகனங்கள் மாநில பதிவு ஆணையம் (VMVSR), பதிவு எண்ணை வழங்கும். பதிவுச் சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு, சான்றிதழை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

ஓடிக் களைத்த கார்களின் ஒய்யார அணிவகுப்பு... ஊட்டியில் வின்டேஜ் கார் ரேலி!

இந்த அறிவிப்பில் இருக்கும் முக்கியமான விஷயம், வின்டேஜ் வாகனங்கள் பொதுச் சாலைகளில் வழக்கமான பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாது என்பதுதான். ஆனால், அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க, நிகழ்வுகள், சந்திப்புகள், வரலாற்று சுற்றுப் பயணங்களில் பங்கேற்க இந்த வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, வின்டேஜ் பராமரிப்புகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நோக்கத்துக்காக இவை சாலையில் பயன்படுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வின்டேஜ் வாகனங்களை வாங்கலாம், விற்பனை செய்யலாம். ஆனால், வாங்குபவர் அல்லது விற்பவர், வாங்கிய 90 நாள்களுக்குள் மாநில போக்குவரத்து அமைப்பிடம் இதை அறிவிக்க வேண்டும்.