அடுத்த தலைமுறை க்ளாஸிக் பைக்கின் டெஸ்ட்டிங் பணிகளில், தற்போது ராயல் என்ஃபீல்டு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இது 2020-ல் வரலாம் என யூகிக்கப்படும் சூழலில், இந்த நிலையில் அந்த பைக்கை அண்ணாசாலையில் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான வெங்கடேஷ். அதில் புதிய க்ளாஸிக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்விட்ச்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஸ்பீடோமீட்டர் முன்பு போலவே அனலாக்கில் இருந்தாலும், அதில் KPH/MPH என இரண்டு ரீடிங்குகளும் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது, ஏற்றுமதி சந்தைகளை மனதில்வைத்தும் பைக் தயாரிக்கப்படும் எனத் தோன்றுகிறது. மோ.வி முன்பு சொன்னதுபோலவே, அதற்குக் கிழே இடம்பெற்றிருக்கும் சிறிய டிஜிட்டல் ஸ்க்ரீனில் ஓடோமீட்டர் - ட்ரிப் மீட்டர் - கடிகாரம் - பெட்ரோல் அளவு ஆகிய தகவல்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முந்தைய மாடலில் Amp Meter இருந்த இடத்தில், நியூட்ரல் - ஹைபீம் - இண்டிகேட்டர் - ஏபிஎஸ் - இன்ஜின் செக் ஆகியவற்றுக்கான சமிக்ஞை விளக்குகள் இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. முந்தைய மாடலில் இருந்த சாவி துவாரத்துடன் ஒப்பிடும்போது, புதிய க்ளாஸிக்கின் Lock Set மாடர்ன்னாக இருக்கிறது. இது தண்டர்பேர்டு மற்றும் ஹிமாலயனில் உள்ள புஷ் லாக் போல இருக்கலாம். மேலும் கில் ஸ்விட்ச் மற்றும் லோபீம்/ஹைபீம் ஸ்விட்ச் ஆகியவை, Rotary Knob பாணிக்கு மாறியுள்ளன. இது எந்தளவு பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பது, போகப் போகத் தெரியும்! ஆனால், இண்டிகேட்டர், ஹாரன், ஹெட்லைட் ஆகியவற்றுக்கான ஸ்விட்ச்கள் மற்றும் ரியர் வியூ மிரர்கள், முன்பைப் போலவே இருக்கின்றன.
ஃப்ளாட் ஹேண்டில்பாரின் End Weights மற்றும் பெட்ரோல் டேங்க்கில் இருந்த ரப்பர் டேங்க் பேடு நீக்கப்பட்டுள்ளது என்றாலும், புதிய HandGrip மற்றும் ஃபுட் ரெஸ்ட், பார்க்க ஸ்டைலாக உள்ளன. இண்டிகேட்டர்கள், ஏற்றுமதி செய்யப்படும் இன்டர்செப்டரில் இருப்பதுதான்! ஸ்பை படங்களை உற்றுநோக்கும்போது, இன்ஜின் கேஸிங் ராயல் என்ஃபீல்டின் 650சிசி பைக்குகளில் இருப்பதுபோலக் காட்சியளிக்கிறது.

கியர் லீவரைப் பார்க்கும்போது, அது Heel & Toe ஷிஃப்ட் வகையில் செயல்படும் எனலாம். பிரேக் லீவரும் புதிது; BS-6 விதிகளுக்கேற்ப டியூன் செய்யப்படும் இன்ஜினில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் இருக்கலாம் என்றாலும், அது ஏர் கூலிங் முறையிலான வடிவமைப்பையே கொண்டிருக்கும். குறைவான விலை மற்றும் சிறப்பான இழுவைத்திறனுக்காக, 2 வால்வ் அமைப்பு மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே தொடரலாம்.
தற்போதைய மாடலின் ரைடர் சீட்டுக்கு அடியே ஸ்ப்ரீங் இருக்கும் நிலையில், புதியதில் அதைக் காணவில்லை. மேலும் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் ஆகிய இரண்டிலுமே LED கிடையாது. தவிர பழைய Single Downtube ஃபிரேமுக்குப் பதிலாக, புதிய Double Cradle சேஸி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் வீல்களே உள்ளதால், இதிலும் டியூப்லெஸ் டயர்கள் நிச்சயம் இருக்காது.

டயர்கள் மற்றும் ஃபெண்டர்களில் சிறிய முன்னேற்றம் இருக்கலாம். பேட்டரி பாக்ஸ் - ஏர்ஃபில்டர் பாக்ஸ் - முன்பக்க ஃபோர்க் ஆகியவை Cut Copy Pasteதான். மெட்டல் கிராப் ரெயில் உயரமாக இருப்பது, பைகளைக் கட்ட வசதியாக இருக்கும். க்ராஷ் கார்டு, விண்ட் ஸ்க்ரீன், அலாய் பேக்ரெஸ்ட் ஆகியவை ஆக்ஸசரிகளாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.