Published:Updated:

பகையாளியாக இருந்து 2019ல் பங்காளியான ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

ஆட்டோமொபைல் துறையில், உலக அளவில் 2019ல் நிகழ்ந்த புதிய இணைப்புகளும் கூட்டணிகளும்.

தொழில்நுட்பம், தூரத்தில் இருப்பவர்களையும் இணைத்துவிடுகிறது. அப்படி, தொழில்நுட்பத்தால் தொழில்நுட்பத்துக்காகத் தங்களின் முரட்டுப் பகையை மறந்து, சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஆண்டு இணைந்துள்ளன. பகையாளியாக இருந்து 2019ல் கூட்டாளிகளாக மாறிய நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.

2
PSA - Fiat merger ( motor1.com )

PSA குரூப்-ஃபியட்

"நிறுவனங்கள் தனித்தனியாகப் பிரிந்திருக்கத் தேவையில்லை. மாறிவரும் சூழ்நிலைகளைச் சமாளிக்க, பெரிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்" கடந்த ஆண்டு மரணமடைந்த ஃபியட்டின் தலைவர் செர்ஜியோ மார்க்கியோனி சொன்ன விஷயம் இது.

அதன்படி, 2019-ல் இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்து, உலகின் நான்காவது பெரிய OEM என்று பெயர் எடுத்துள்ளது.

Peugeot, சிட்ரான், டிஎஸ், வாக்ஸ்ஹால் போன்ற நிறுவனங்களின் தாய் கழகம் PSA-வும், க்ரைஸ்லர், டாஜ், ஆல்ஃபா ரோமியோ, மஸ்ராட்டி போன்றவற்றின் கழகம்தான் ஃபியட். ஐரோப்பியா, வடக்கு அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளின் கார் சந்தையைப் பிடிக்க போட்டிபோட்டுக்கொண்டிருந்த இந்த நிறுவனங்கள், இப்போது ஒன்றாகக் கைகோத்து 3.7 பில்லியன் யூரோ நிறுவனமாக மாறியுள்ளது. இந்த மெர்ஜரில் கவனிக்கவேண்டிய விஷயம், ஃபியட்டில் மொத்தம் 12 துணை நிறுவனங்கள் உள்ளன. இதில் எந்தத் தொழிற்சாலையும், நிறுவனமும் மூடப்படவில்லை. அதற்கு மாறாக, இனி ஃபியட் கார்கள் PSA நிறுவனத்தின் கட்டமைப்போடு வரப்போகின்றன.

3
Daimler - Geely

டெய்ம்லர் - கீலி

எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில், சீனாவைச் சேர்ந்த கீலி, செம கில்லி. குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும், ரைடு ஹெயிலிங்கை விடவும் டெய்ம்லர் நிறுவனம் இப்போது கீலியுடன் இணைந்துள்ளது. ஏற்கெனவே, வால்வோ நிறுவனத்தைத் தன் வசம் வைத்திருக்கும் கீலி, சீனாவில் ப்ரீமியம் கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கியுள்ளது. இதற்காக, 50-50 பார்ட்னர்ஷிப் போட்டு இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள்.

4
மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி

மஹிந்திரா-ஃபோர்டு

யாரும் எதிர்பார்க்காத வேளையில் வந்ததுதான் மஹிந்திரா ஃபோர்டு அறிவிப்பு. இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் மஹிந்திரா நிறுவனமும் தொழில் புரட்சியின் ஆரம்பமான ஃபோர்டு நிறுவனமும், இந்தியாவில் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அக்டோபர் மாதம் கையெழுத்திட்டார்கள். ரூ.1,925 கோடி மதிப்புமிக்க இந்த ஒப்பந்தத்தின்படி மஹிந்திரா, ஃபோர்டு நிறுவனத்தில் 51 சதவிகித பங்குதாரராக மாறியது. இந்த ஒப்பந்தத்தின்படி  தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து ஃபோர்டு இந்தியா, மஹிந்திராவுக்கு சொந்தமாகிவிட்டது.

5
டொயோட்டா - சுபாரு கூட்டணி ( topspeed.com )

டொயோட்டா - சுபாரு

இந்த ஆண்டு, அதேபோல சுபாரு நிறுவனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டி, ஏற்கெனவே இருந்த பார்ட்னர்ஷிப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது டொயோட்டா. கனெக்டட் கார், தானியங்கிக் கார், ரைடு ஷேரிங், எலெக்ட்ரிக் கார் போன்றவற்றை உருவாக்க சுபாருவில் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது, டொயோட்டா. ஏற்கெனவே, இந்த நிறுவனத்தில் 16.8 சதவிகித பங்கை வைத்திருந்த டொயோட்டோ, இந்த ஆண்டு அதை 20 சதவிகிதமாக உயர்த்திக்கொண்டது.

6
சுஸூகி - டொயோட்டா பார்ட்னர்ஷிப்

டொயோட்டா-சுஸூகி

ஜப்பானின் ஆஸ்தான எதிரிகளாக இருந்த டொயோட்டாவும் சுஸூகியும், 2018ல் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொண்டார்கள். இந்த ஆண்டு அதன் அப்டேட்டாக, டொயோட்டா நிறுவனம் சுஸூகியில் 4.9 சதவிகித பங்குகளை ஆகஸ்ட் மாதம் கூடுதலாக வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 90.7 கோடி டாலர்கள். இதேபோல சுஸூகி நிறுவனமும் டொயோட்டாவில் 45.3 கோடி டாலர் மதிப்புக்கு பங்குகளை வாங்கியுள்ளது. இதுமட்டுமில்லை, இந்த ஆண்டுதான் டொயோட்டா-சுஸூகியின் முதல் கார் பெலினோ விற்பனைக்கு வந்தது.

அடுத்த கட்டுரைக்கு