Published:Updated:

`20 ஆண்டுகளில் இல்லாதது!'- வாகன விற்பனை 31% குறைவு

ஜூலை மாதம் வாகனங்களின் விற்பனை 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.

வாகனங்கள்
வாகனங்கள்

ஜூலை மாதம் வாகனங்களின் விற்பனை 31 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக SIAM அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு விற்பனை குறைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாசஞ்சர் வாகனங்களின் விற்பனை இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. 9 மாதங்கள் கடந்தும், எந்த ஆட்டோமொபைல் நிறுவனமும் இன்னும் நிலையான விற்பனை இலக்கை அடையவில்லை. இதேநிலை தொடர்ந்தால் ஆட்டோமொபைல் சந்தையை மையப்படுத்தி இருக்கும் மற்ற துறைகளும் பாதிக்கப்படும். இதனால் இந்தியாவின் GDP பெருமளவு குறைய வாய்ப்புகள் உண்டு என்று கணிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். 

Automobile
Automobile
Pixabay

வாகனங்களின் விற்பனை 30.9 சதவிகிதம் சரிந்து ஜூலை மாதம் வெறும் 2,00,790 யூனிட்டுகளே விற்பனையாகியுள்ளன. கமர்ஷியல் வாகனங்களைப் பொறுத்தவரை விற்பனை 25.7 சதவிகிதம் சரிந்து வெறும் 56,866 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில், பலத்த அடி பாசஞ்சர் கார்களுக்குத்தான். 36 சதவிகிதம் விற்பனை சரிந்துள்ளது. பைக் விற்பனையும்கூட 16.8 சதவிகிதம் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த விற்பனைக் குறைவால் உள்நாட்டு கார் உற்பத்தி 17 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக SIAM சொல்கிறது.

இந்த விற்பனை நெருக்கடி நேரடியாகவே பங்குச்சந்தையை பாதித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையின் பங்குகள் 23 சதவிகிதம் வரை விலை குறைந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகியின் பங்குகள் மட்டும் 18.3 சரிவைச் சந்தித்துள்ளது. நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கார் விற்பனை
கார் விற்பனை

ஆட்டோமொபைல் துறையின் தொடர் சரிவைப் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், ``இந்த நிலை கடன் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள தற்காலிக தொய்வு'' எனக் கூறியுள்ளார் . தற்போது வரி குறைப்பு மற்றும் சுலபமான கடன்களுக்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தீபாவளி, தசரா, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரிசைகட்டி நிற்பதால் நவம்பர் மாதம் முதல் மீண்டும் சகஜ நிலைக்கே சந்தை திரும்பும் என சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.