Published:Updated:

ஸ்க்ராப்பேஜ் பாலிசி எப்படி இருக்க வேண்டும்? - பவன் கோயங்கா சொல்லும் 5 முக்கிய ஆலோசனைகள்!

ரஞ்சித் ரூஸோ

பழைய வாகனங்களை மறுசுழற்சி செய்வதை கட்டாயமாக்கும் ஸ்க்ராப்பேஜ் பாலிசி, பல ஆண்டுகளாகப் பேசுபொருளாகவே உள்ளது.

பவன் கோயங்கா
பவன் கோயங்கா ( Matti Blume - Wikimedia commons )

ஸ்க்ராப்பேஜ் பாலிசியை நடைமுறைக்குக் கொண்டுவருவோம் என உறுதியளித்திருக்கிறது மத்திய அரசு. இரண்டு வாரங்களுக்கு முன்புகூட, 'ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்தநிலையைச் சரிசெய்ய எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளாக ஸ்க்ராப்பேஜ் பாலிசியைக் கொண்டுவருவோம்' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

BMW Recycle Centre
BMW Recycle Centre
BMW blog

சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கக் (SIAM) கருத்தரங்கில் பேசிய மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் பவன் கோயங்கா, 'ஸ்க்ராப்பேஜ் பாலிசிகள் தெளிவாக வரையறுக்கப்படுவது மிகவும் முக்கியம். உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று சரியான திட்டமில்லாத ஒரு பாலிசி தந்துவிடக்கூடாது. அதில் கவனம் தேவை' என மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஸ்க்ராப்பேஜ் பாலிசியை எப்படி வடிவமைக்கலாம் எனவும் சில வரைமுறைகளை விளக்கினார். அதன்படி,

  • பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் வாகனத்தை அழிப்பதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களாகவே முன்வந்து, தங்களுடைய வாகனங்களை ஸ்க்ராப்பில் போடுவதற்கு அவர்களைத் தூண்ட வேண்டும்.

  • தங்களுடைய வாகனங்களை ஸ்க்ராப்பில் போடுபவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அதிகபட்சத் தொகை, ரூ.5,000 - ரூ.10,000 ஆக இருக்கக்கூடாது. என்னுடைய பழைய வாகனத்தைப் பயன்படுத்துவதைவிட ஸ்க்ராப்பில் போடுவது நல்லது என நினைக்கும் அளவுக்கு ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும்.

ஸ்க்ராப்பேஜ் பாலிசி
ஸ்க்ராப்பேஜ் பாலிசி
Gary Scott from Pixabay
  • புதிய வாகனம் வாங்க ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றால், ஸ்க்ராப் மூலம் அவருக்குக் கிடைக்கும் சலுகையை புது வாகனம் வாங்கும் வேறு யாருக்காவது மாற்றுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். 

  • ஸ்க்ராப்பில் போட்ட வாகனத்துக்குப் பதிலாக புதிய வாகனம் வேண்டாம். ஆனால், அந்த வாகனத்தைவிட கொஞ்சம் புதிய, பயன்படுத்தப்பட்ட (யூஸ்டு) வாகனம் ஒன்றை வாங்க வேண்டும் என்றால், அதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும். 

  • இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிசியைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதைத் தவறாகப் பயன்படுத்த முடியாதபடி சட்டங்களும் விதிக்கப்பட வேண்டும்.

2008 கிரேட் ரெசஷனுக்குப் பிறகு, தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த ஆஸ்திரியா, கனடா, சீனா, ஜெர்மனி போன்ற பல நாடுகள் ஸ்க்ராப்பேஜ் பாலிசியை நடைமுறைப்படுத்தின.
CERO
CERO

...என்பன உள்ளிட்ட சில வழிமுறைகளை அறிவித்திருக்கிறார். மேலும், நிறுவனங்களுக்கு இருக்கும் சவால்கள் பற்றிப் பேசுகையில், "வாகனங்களை வாங்கி, துண்டுகளாக்கி, பாகங்களைப் பிரித்து ரீசைக்கிள் செய்யும் ஒரு முழுமையான ஸ்க்ராப் சென்டரைக் கட்டமைக்க ஒரு கணிசமான தொகை செலவாகும். ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். BS4, BS6, எலெக்ட்ரிக் என திடீர் கட்டுப்பாடுகள் வரும்போது, நீங்கள் அதைச் சமாளிக்க முடியாமல்போவதற்குக் காரணம், நீங்கள் அதற்குத் தயாராகவில்லை என்பதே. நீங்கள், அரசாங்கத்துடன் உரையாடலில் ஈடுபடவில்லை" என்றார்.

மஹிந்திரா ஆக்செல்லோ (Accelo) மற்றும் MSTC (உருக்கு அமைச்சகத்தின் ஒரு நிறுவனம்) இணைந்து, கடந்த ஆண்டு நொய்டாவில் CERO என்ற ரீசைக்ளிங் சென்டரைத் தொடங்கினார்கள். இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட முதல் வாகன மறுசுழற்சி மையம் இதுவே. இங்கே, பெரிய டிரக் மற்றும் பஸ்களில் இருந்து, கார், டூ-வீலர், வீட்டு உபயோகப் பொருள்கள் வரை எல்லாவற்றையும் மறுசுழற்சி செய்யலாம்.

ஸ்க்ராப்பேஜ் பாலிசி
ஸ்க்ராப்பேஜ் பாலிசி
Holger Schué from Pixabay

தற்போது, ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், சீனா, நெதர்லாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா எனப் பல நாடுகளில் வாகனங்களுக்கான ஸ்க்ராப்பேஜ் திட்டம் நடைமுறையில் உள்ளது. 2008-ல் வந்த கிரேட் ரெசஷனுக்குப் பிறகு, தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த பல நாடுகள் இதை நடைமுறைப்படுத்தின. உலகில் அதிக வாகனங்கள் உற்பத்திசெய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மற்றும் பிரேசிலில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. பிரேசில், 2016-ம் ஆண்டில் ஸ்க்ராப்பேஜ் திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்கள். இன்னும் இந்தியா மட்டுமே மிச்சம்.