Published:Updated:

வந்துவிட்டன BS-6 வெஸ்பா ஸ்கூட்டர்கள்... அட, ஏப்ரிலியாவில் 160சிசி இன்ஜின் இருக்கு பாஸ்!

பவர் மற்றும் டார்க் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அவை எதிர்பார்த்தபடியே முன்பைவிட குறைவான காற்று மாசை வெளியிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

Aprilia SR 160 BS-6
Aprilia SR 160 BS-6 ( Piaggio India )

ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 காற்று மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. அதற்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால், வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்துவதில் தீவிரமாகக் கவனம் செலுத்திவருகின்றனர். டூ-வீலர்களில் ஹோண்டா, ஹீரோ, யமஹா, ஜாவா, டிவிஎஸ், சுஸூகி ஆகிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது, பியாஜியோ குழுமமும் இணைந்திருக்கிறது (வெஸ்பா, ஏப்ரிலியா). அதன்படி, ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் 125சிசி/150சிசி வெஸ்பா மற்றும் 125சிசி ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில், கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Vespa SXL 150 BS-6
Vespa SXL 150 BS-6
Autocar India

இவற்றின் பவர் மற்றும் டார்க் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அவை எதிர்பார்த்தபடியே முன்பைவிட குறைவான காற்று மாசை வெளியிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, லேட்டஸ்ட் கம்பஷன் சிஸ்டமே (அளவில் பெரிய Catalytic Converter) பிரதான காரணம் எனலாம். இதனால் அவற்றில் Choke-க்கு இனி வேலை இல்லை. ஆனால், போட்டி நிறுவனங்கள் தமது BS-6 மாடல்களில் முன்பிருந்ததைவிட அதிக சிறப்பம்சங்களைச் சேர்க்கும் நிலையில், இந்த ப்ரீமியம் ரெட்ரோ ஸ்கூட்டரின் வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்களிலும் எந்த மாற்றமும் இல்லாதது வியப்பளிக்கிறது. வெஸ்பாவின் 150 SXL மாடலின் புனே எக்ஸ்-ஷோரூம் விலை, 91,492 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆச்சர்யப்படும் விதமாக, “Designed for Racers, Built for riders” என்ற கோட்பாடுகளின்படி தயாரிக்கப்பட்டிருக்கும் SR 150 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக SR 160 மாடலைக் களமிறக்கியுள்ளது பியாஜியோ குழுமம்! இதில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய 160சிசி இன்ஜின், 11bhp பவரை வெளிப்படுத்தும் எனத் தகவல் வந்திருக்கிறது. முந்தைய 150சிசி வெர்ஷன் (154.8சிசி, 3 வால்வ், கார்புரேட்டட் இன்ஜின்), 10.06bhp@6,750rpm பவர் மற்றும் 1.09kgm@5,000rpm டார்க்கைத் தந்தது தெரிந்ததே. புனே எக்ஸ்-ஷோரூம் விலையான 85,431 ரூபாய்க்கு வெளிவந்திருக்கும் இந்த ஸ்கூட்டரிலும் புதிய இன்ஜினைத் தாண்டி, வசதிகள் (14 இன்ச் அலாய் வீல்கள், 6.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக், இரட்டை ஹெட்லைட்) மற்றும் கலர் ஆப்ஷன்களில் எந்த மாறுதலும் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால், 'இந்தியாவில் பெரிய இன்ஜினைக் கொண்ட ஸ்கூட்டர்' என்ற பெருமை, இப்போது ஏப்ரிலியாவுக்குக் கிடைத்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

Vikatan
Vespa SXL 150 BS-6
Vespa SXL 150 BS-6
Piaggio India

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வெஸ்பா மற்றும் ஏப்ரிலியாவின் BS-4 மாடல்களைவிட BS-6 வெர்ஷனின் விலை, 15-20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, பியாஜியோ குழும தயாரிப்புகளின் விலை அனைத்துமே, ஒரு லட்ச ரூபாயைத் தாண்டும் என்பது மைனஸ்தான். இந்த BS-6 வாகனங்களின் உற்பத்தியை, மகாராஷ்டிராவில் உள்ள தனது தொழிற்சாலையில் வெஸ்பா குழுமம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. எனவே, அவை நாடெங்கும் உள்ள அந்த நிறுவன டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன; இப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே BS-6 வாகனங்கள் விற்பனைக்கு வருவது ஒருபுறம் நன்மைதான் என்றாலும் (டீலர்களின் கைவசம் இருக்கும் BS-4 வாகனங்களை விற்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்கும்), அவை சீராக இயங்குவதற்கான BS-6 எரிபொருள் இன்னும் கிடைக்காதது மறுபுறம் ஏமாற்றம்தான் (டெல்லி NCR மற்றும் ஆக்ராவில் மட்டுமே இப்போது BS-6 எரிபொருள் கிடைக்கிறது)!