Published:Updated:

`இன்ஜினும் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனமும் இருக்கும்' - பிரதமர் மோடி

ரஞ்சித் ரூஸோ

``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி பேசியிருக்கிறார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கார்கள், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள் என ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பாரபட்சமின்றி 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை வெறும் 6 மாதங்களில் சந்தித்திருக்கிறது இந்தத் துறை. ஆனால், ``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி மௌனம் கலைத்துள்ளார் பிரதமர் மோடி.

கார்கள்
கார்கள்

பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்து பேட்டியளித்துள்ள பிரதமர், தற்போது ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலையைப் போக்க ஏதாவது முயற்சிகள் எடுத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ``இந்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இத்துறையுடன் திறனாய்விலேயே இருக்கிறது. இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. சில கடன் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்களால் வாகனங்களின் தேவை மற்றும் விற்பனை குறைவாக இருக்கிறது. வாகனங்களின் தேவையும் அதற்கான சந்தையும் விரைவில், வலுவாக மீண்டு எழும்’’ என்றார்.

``நான் ஒரு உறுதியை மட்டும் தரமுடியும், இந்தியாவில் IC இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் வளரும் அளவுக்கு பெரிய சந்தையும், அதற்கேற்ற கொள்கைகள் உருவாவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இரண்டின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு எதையும் கற்பனை செய்யவேண்டாம். நாம் தனித்துவமான இடத்தில் இருக்கிறோம். இங்கு ஆட்டோமொபைலில் IC இன்ஜின், எலெக்ட்ரிக் வாகனம் இரண்டும் ஒன்றாக இருக்கும், ஒன்றாக உருவாகும் ஒன்றிலிருந்து இன்னொன்று கற்றுக்கொள்ளும்" என்றார் விளக்கமாக.

மோடி
மோடி

மின்சார வாகனங்கள் வரும்பட்சத்தில், தற்போது பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்படுமா என்ற சந்தேகத்துக்குப் பிரதமரின் பதில் தெளிவைக் கொடுக்கிறது.