Published:Updated:

`ராயல் என்ஃபீல்டு 500 இனி கிடையாது?!’- அதிக பவருடன் வரப்போகிறது 2020 கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு

தண்டர்பேர்டு 500X
தண்டர்பேர்டு 500X

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 500 சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்திவிட்டது. தற்போது ஸ்டாக் இருக்கும் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

சமீப காலமாக ராயல் என்ஃபீல்டின் 500சிசி மாடல்களான கிளாசிக், புல்லட் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகள் நிறுத்தப்படப்போவதாக வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்ஃபீல்டு தனது 500 சிசி பைக்குகளின் புக்கிங்கை நிறுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டின் முன்பதிவு இணையபக்கத்தில் இருந்து புல்லட் மற்றும் தண்டர்பேர்டு 500 பைக்குகள் நீக்கப்பட்டுள்ளன. கிளாசிக் 500 பைக் மட்டுமே முன்பதிவுக்கு இருக்கிறது.

புல்லட் 500
புல்லட் 500

சில ராயல் என்ஃபீல்டு டீலர்களிடம் விசாரித்தபோது 500 சிசி பைக்குகளின் உற்பத்தியை ராயல் என்ஃபீல்டு நிறுத்திவிட்டதாகவும் தற்போது ஸ்டாக் இருக்கும் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்வதாகவும் கூறினார்கள். கிளாசிக் 500 பைக்கின் ஸ்டாக் அதிகமாக இருப்பதால் இந்தப் பைக்குகளின் முன்பதிவு இன்னும் நடைபெறுகிறது.

ராயல் என்ஃபீல்டின் தற்போது புதிய கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகளை டெஸ்ட் செய்து வருகிறது. இந்த பைக்குகளின் பவர் தற்போது இருக்கும் 500 சிசி மாடல்களைவிட அதிகம் என்பதால் ராயல் என்ஃபீல்டு இந்த முடிவை எடுத்துள்ளது. ஏப்ரல் 2020-க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய பைக்குகளில் இன்ஜின், ஃபிரேம் என எல்லாமே புதுசு.

2020 ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு...
2020 ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு...
புது ராயல் என்ஃபீல்டு
புது ராயல் என்ஃபீல்டு

பழைய புஷ்ராடு இன்ஜினுக்குப் பதிலாகத் தற்போது இருக்கும் நவீன OHC செட்அப் இன்ஜினில் இந்த பைக்குகள் வரவிருக்கின்றன. இன்ஜின் கவர், ஹெட் முதற்கொண்டு இன்ஜினில் நிறைய விஷயங்களும் மாறியிருப்பதால் புது FI இன்ஜின் 350சிசி இன்ஜின்தான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இது ஹிமாலயனில் இருப்பது போன்ற 410சிசி இன்ஜினாகக்கூட இருக்கலாம்.

டெஸ்ட் செய்யப்பட்டு வரும் பைக்குகளை வைத்துப் பார்க்கும்போது கேஸ் ஷாக் சஸ்பென்ஷனுக்குப் பதிலாக இவற்றில் ஸ்பிரிங் செட்டப் சஸ்பென்ஷன் வருகிறது. ஃபிளாட் ஹேண்டில்பார், சிங்கிள் பீஸ் செமி-டிஜிட்டல் கன்சோல், டூயல் கிரேடில் ஃபிரேம், Y வடிவ அலாய் வீல் போன்ற விஷயங்கள் புதிதாக இணைந்துள்ளன. பைக்கின் பின்பக்கம், டேங்க் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் புது டிசைனில் இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ்
ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ்

ராயல் என்ஃபீல்டில் இருப்பவர்கள் சிலரிடம் புதிய பைக்குகளைப் பற்றி விசாரித்தோம். "இந்தப் புதிய பைக்குகளை லடாக் போன்ற கடுமையான இடங்களில் டெஸ்ட் செய்திருக்கிறோம். பழைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட இது எடை குறைவானது மற்றும் அதிக பவர் கொண்டது. வைப்ரேஷன் சுத்தமாக இருக்காது" என்றார்கள். இந்த 500 சிசி மாடல்களோடு சேர்த்து புல்லட் ட்ரையல்ஸ் மாடல்களும் இணையதள முன்பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு