Published:Updated:

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 பைக்கின் விலை 9,000 குறைந்தது... எப்படி?

Pure Black, Mercury Silver எனும் இரு கலர்களில் வெளிவந்திருக்கும் இந்த பைக்கில், வீல்கள் - இன்ஜின் - மிரர்கள் ஆகியவற்றில் க்ரோமுக்குப் பதில் கறுப்பு இடம்பெற்றிருக்கிறது.

Classic 350S
Classic 350S ( Royal Enfield )

சில மாதங்களுக்கு முன்பு, புல்லட் 350X மற்றும் புல்லட் 350X-ES எனும் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. இவற்றின் ஸ்டாண்டர்டு மாடல்களைவிட இந்த X-சிரீஸின் விலை குறைவாக இருந்ததற்கு, அதில் க்ரோம் ஃபினிஷுக்குப் பதிலாகக் கறுப்பு நிற ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருந்ததே பிரதான காரணம். மேலும், பெட்ரோல் டேங்க்கில் பிரத்யேகமான Hand Painted Pinstripe மற்றும் 3D லோகோவுக்குப் பதில், வழக்கமான Decals இருந்ததும் கவனிக்கத்தக்கது. தற்போது கிளாஸிக் பைக்கிலும் அதே பாணியை அந்த நிறுவனம் பின்பற்றியிருக்கிறது.

Classic 350 Dual ABS
Classic 350 Dual ABS
Royal Enfield

கிளாஸிக் 350S எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, அதற்கேற்றபடி சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸைக் கொண்டிருக்கிறது. 1.45 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கக்கூடிய கிளாஸிக் 350S, டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான வழக்கமான கிளாஸிக் 350 பைக்கைவிட 9,000 ரூபாய் குறைவான விலையில் வந்திருக்கிறது; Pure Black, Mercury Silver எனும் இரு கலர்களில் வெளிவந்திருக்கும் இந்த பைக், வீல்கள் - இன்ஜின் - மிரர்கள் ஆகியவற்றில் க்ரோமுக்குப் பதில் கறுப்பு இடம்பெற்றிருக்கிறது. மேலும் Thigh Pad & ஸ்பெஷல் லோகோவுக்குப் பதில், சாதாரணமான Decal பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி டெக்னிக்கலாக பைக்கில் எந்த மாற்றமும் இல்லை.

இப்படி தனது பைக்குகளில் விலைகுறைவான வேரியன்ட்களை ஒருபுறம் அறிமுகப்படுத்தினாலும், மறுபுறத்தில் தனது 650சிசி மாடல்களின் விலையை 2% வரை (சுமார் 5,700 - 6,500 ரூபாய்) அதிகரித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அதன்படி இன்டர்செப்டர் 650 ஆரம்ப மாடலின் (Orange Crush/Silver Spectre/Mark Three) சென்னை ஆன்-ரோடு விலை, 2,89,510 ரூபாயிலிருந்து 2,95,784 ரூபாயாக மாறியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 Twins
ராயல் என்ஃபீல்டு 650 Twins
Royal Enfield

கான்டினென்ட்டல் ஜீடி 650 பைக்கின் ஆரம்ப சென்னை ஆன்-ரோடு விலை (Black Magic/Ventura Blue), 3,05,849 ரூபாயிலிருந்து 3,12,454 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. BS-6 வெர்ஷன் வரும்போது, இந்த 650சிசி பைக்குகளின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.