Published:Updated:

`கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்... ஆனால் ஒரு விஷயத்தில் சறுக்கல்!’- பாதுகாப்பானதா டாடா அல்ட்ராஸ்?

டாடா அல்ட்ராஸ் கிராஷ் டெஸ்ட்
டாடா அல்ட்ராஸ் கிராஷ் டெஸ்ட்

இந்த மாதம் 22-ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் டாடா அல்ட்ராஸின் குளோபல் கிராஷ் டெஸ்ட் (GNcap) முடிவுகள் வெளிவந்துள்ளன. விற்பனைக்கே வராத கார் ஒன்றுக்கு குளோபல் Ncap சோதனை முடிவுகள் வருவது இதுவே முதல் முறை.

எதிர்பாத்தபடியே டாடா நெக்ஸான் போல அல்ட்ராஸ் மாடலும் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்கள் வாங்கியுள்ளது. டாடாவின் பழைய X1 பிளாட்ஃபார்ம் மட்டுமில்லை, புதிய ஆல்ஃபா பிளாட்ஃபார்மும் கட்டுமானத்தில் உலகத்தரம் என்பதை இந்தச் சோதனை முடிவு உணர்த்துகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் 5 ஸ்டார்கள் வாங்கியுள்ள இரண்டாவது கார், அல்ட்ராஸ் (முதல் கார் நெக்ஸான்). இந்த கார் அடல்ட் பாசஞ்சர் பாதுகாப்பில் 17 புள்ளிகளுக்கு 16.13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. Front offset மற்றும் side impact சோதனைகளில் பாசஞ்சர்களின் தலை, கழுத்து, மூட்டு மற்றும் மார்புப் பகுதிகளுக்கு பாதுகாப்பு வலுவாக இருப்பதாக சோதனை முடிவில் கூறியுள்ளார்கள். இந்த காரின் பாடி அதிக எடையைத் தாங்கும் அளவுக்கு ஸ்டேபிளாக இருப்பதாகவும் கிராஷ் டெஸ்ட் முடிவில் கூறப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ்
டாடா அல்ட்ராஸ்

பெரியவர்கள் பாதுகாப்பில் அசத்திய டாடா, குழந்தைகள் பாதுகாப்பில் கொஞ்சம் சறுக்கிவிட்டது. இதில், அல்ட்ராஸ் வெறும் 3 ஸ்டார்கள் மட்டுமே வாங்கியுள்ளது. ஒன்றரை வயது குழந்தையின் டம்மியை வைத்து டெஸ்ட் செய்தபோது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், 3 வயது குழந்தையின் டம்மி மாதிரியை வைத்து டெஸ்ட் செய்தபோது, ஐசோஃபிக்ஸ் சீட் மவுன்ட்டில் இருந்து வெளியேறியதால் குழந்தையின் தலையில் ஆபத்தான காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளன. இதனால், குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 29 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

GNcap டெஸ்ட்டில் எப்போதும் என்ட்ரி லெவல் மாடல்களை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அல்ட்ராஸைப் பொறுத்தவரை இவர்கள் விலை உயர்ந்த டாப் வேரியன்ட்டை சோதனைக்குப் பயன்படுத்தியுள்ளது கவனிக்கவேண்டிய விஷயம். இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரிக் பிரேக் ஃபோர்ஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் மவுன்ட் எனப் பாதுகாப்பு வசதிகள் எல்லாமே இந்த காரின் அனைத்து வேரியன்ட்டுகளிலும் வருவதால், எடை அதிகமான டாப் வேரியன்ட்டை டெஸ்ட் செய்துள்ளதாகக் GNcap கூறியுள்ளது. அதுமட்டுமில்லை, அலாய் வீல்கள் ஸ்டீல் வீல்களைவிட வலுவானது என்பதால் மோதலின்போது ஏற்படும் விசை, காரில் அதிகமாகக் கடத்தப்படும் என்பதும் இதற்கு ஒரு காரணம்.

கிராஷ் டெஸ்ட்
கிராஷ் டெஸ்ட்

மாருதி பெலினோ, ஹூண்டாய் i20, டொயோட்டா கிளான்ஸா, ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுக்குப் போட்டியாக வரும் அல்ட்ராஸ், இந்த கார்களைவிட விலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த காரின் முன்பதிவுகள் தொடங்கிவிட்ட நிலையில், ஜனவரி 22-ம் தேதி இதன் விலையை அறிவிக்கிறார்கள். இதன் ஆன்-ரோடு விலை, தோராயமாக 6 லட்சம் ரூபாயிலிருந்து 9 லட்சம் வரை இருக்கலாம்.

பின் செல்ல