Published:Updated:

இரட்டை VVT தொழில்நுட்பம், 90 டிகிரி கதவு, ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங்...செம பிரீமியம் இந்த அல்ட்ராஸ்!

2018 ஆட்டோ எக்ஸ்போவில், கான்செப்ட் 45X ஆக காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் ஆன்ரோடு வெர்ஷன்தான், இந்த அல்ட்ராஸ்.

Tata Altroz
Tata Altroz

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான 'அல்ட்ராஸ்'-ஐ டெஸ்ட் செய்ய, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் நகரத்துக்கு வந்திருக்கிறோம். பாகிஸ்தான் பார்டரில் காரை இரண்டு நாள்கள் டெஸ்ட் செய்திருந்தாலும், எம்பார்கோ இருப்பதால் 9-ம் தேதி வரை காரின் டிரைவிங் அனுபவத்தைப் பகிர முடியாது. அதனால், இந்தக் காரின் ஸ்பெஷாலிட்டி என்ன என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

Tata Altroz
Tata Altroz

மாருதி பெலினோ, ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுக்குப் போட்டியாக வருகிறது இந்த மாடல். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் 45X ஆக காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் ஆன்ரோடு வெர்ஷன்தான் இது. கான்செப்ட்டில் இருந்து அதிகம் விலகாமல் சின்னச்சின்ன மாற்றங்களோடு இந்த கார் தயாரிப்புக்கு வந்துள்ளது.

Tata Altroz
Tata Altroz

டாடாவின் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் முற்றிலும் புதிய ஆல்ஃபா (Alfa) எனும் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. 20 சதவிகித ஹை-டென்சைஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளாட்பார்ம் எடை குறைவானது மற்றும் வலுவானது என்கிறது டாடா நிறுவனம். அதுமட்டுமில்லை, இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்டு இந்தியாவிலேயே தயாராகும் முதல் மாடுலார் பிளாட்பார்ம் இது. அதாவது, இந்த ஒரே பிளாட்பார்மைப் பயன்படுத்தி ஹேட்ச்பேக், காம்பாக்ட் எஸ்யூவி, செடான், எம்பிவி, ஹைப்ரிட், எலெக்ட்ரிக் என எல்லா விதமான வாகனங்களையும் கட்டமைக்க முடியும்.

டாடா அல்ட்ராஸ்
டாடா அல்ட்ராஸ்

ஹேரியர் டிசைன் செய்யப்பட்ட அதே இம்பேக்ட் 2.0 என்ற வடிவமைப்பின் அடிப்படையிலேயே இந்தக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட், DRL, க்ரில் எல்லாமே செம ஒல்லியாக, ஒரே செட்டாக வருவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நேர்த்தியான வடிவம் - அகலமான ஃபெண்டர் - பெரிய வீல்கள் என டிசைனில் மாடர்ன் டக்சைப் பார்க்க முடிகிறது. ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா கொடுத்திருந்தால் இன்னும் மாடர்னாக இருந்திருக்கும். பழைய ஸ்டைல் ஆன்ட்டெனா காரின் ஐரோப்பிய டிசைன் வடிவத்துக்கு நெருடலாக இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ்
டாடா அல்ட்ராஸ்

டெயில் பகுதியின் மேற்பாதி கறுப்பாகவும், கீழ் பாதி காரின் நிறத்திலும் உள்ளது. இந்த கறுப்பு பகுதியில்தான் ஷார்ப்பான டெயில் லைட் பொருத்தியுள்ளார்கள். இந்தக் காரின், முன் கதவுகள் 90 டிகிரி கோணத்தில திறக்கக்கூடியவை என்பது செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதி.

டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல், நெக்ஸானில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களோடு வருகிறது, டாடா அல்ட்ராஸ். வைப்ரேஷனைக் கட்டுப்படுத்த பேலன்சர் ஷாஃப்ட், இன்லெட் மற்றும் எக்ஸாஸ்ட் இரண்டுக்குமே VVT தொழில்நுட்பம் என இந்த இன்ஜின்களை இன்னும் சிறப்பானதாக மாற்றியமைத்துள்ளார்கள். இரண்டுமே பிஎஸ்-6 என்பது கூடுதல் சிறப்பு.

Tata Altroz
Tata Altroz

காரின் இன்ட்டீரியர் முழுவதும் வெளிர் நிறங்களில் உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் ஃபிளோட்டிங் டிசைனில் இருப்பது இந்தச் செக்மென்ட்டுக்குப் புதுசு. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் கொடுத்துள்ளார்கள். ஸ்போர்ட்டியான ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்ஸ் உண்டு. பட்டன் ஸ்டார்ட், ரியர் ஏசி வென்ட், ஃபாஸ்ட் சார்ஜிங், ஹார்மன் ஆடியோ சிஸ்டம், 16 இன்ச் வீல் ஆகிய வசதிகளும் உள்ளன. பாதுகாப்பு வசதிகளாக, 2 ஏர்பேக், ABS & EBD, குழந்தைகள் சீட்டுக்கான ஐசோஃபிக்ஸ் மவுன்ட் போன்றவை வருகின்றன.

அல்ட்ராஸின் முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் விற்பனைக்கு வரப்போகிறது. 5 வேரியன்ட்கள், 5 நிறங்களில் வரும் இதன் ஆன்ரோடு விலை ரூ.7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்ட்ராஸ், பஸ்ஸார்டு, ஹேரியர் AT, டியாகோ பேஸ்லிஃப்ட்.... டாடாவின் அதிரடி கேம் பிளான்!