Published:Updated:

`எப்போதும் கவனமாக இருக்கமுடியாது!'- 43 ஆண்டுகள் கழித்து F1 பந்தயத்தில் பெண் டிரைவர்

லேலா லோம்பார்டிக்குப் பிறகு 43 ஆண்டுகள் கழித்து, ஆல்ஃபா ரோமியோ F1 அணியின் டெஸ்ட் டிரைவராகவும் BWT Arden அணியின் F2 டிரைவராகவும் பந்தயத்தில் கலந்துகொள்கிறார்.

Tatiana Calderón
Tatiana Calderón

உலகளவில், பாலின பாகுபாடு இல்லாமல் இரு பாலினத்தவர்களும் சேர்ந்து ஈடுபடும் விளையாட்டுகளில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிக முக்கியமானது. கார் ரேஸர்களின் கனவான ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ஆண், பெண் வேறுபாடு இல்லையென்றாலும், இதில் கலந்துகொள்பவர்கள் பெரும்பாலானோர் ஆண்களே.

ஃபார்முலா ஒன்
ஃபார்முலா ஒன்
F1

1976-ல் இத்தாலியைச் சேர்ந்த லேலா லோம்பார்டி, வெறும் அரைப் புள்ளிகளோடு வெளியேறிய சீசனுக்குப் பிறகு இதுவரை ஃபார்முலா ஒன் பந்தயத்தில் எந்தப் பெண்ணும் கலந்துகொள்ளவே இல்லை. 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது வரலாற்றைத் தன் ஸ்டீயரிங் கைகளால் திருப்பியுள்ளார் டாட்டியானா கால்டிரோன். லோம்பார்டிக்குப் பிறகு முதல் முறையாக ஃபார்முலா ஒன் பந்தயத்தில் கலந்துகொள்கிறார் கொலம்பியாவைச் சேர்ந்த டாட்டியானா கால்டிரோன்.

26 வயதான கால்டிரோன் தற்போது, ஆல்ஃபா ரோமியோ F1 அணியின் டெஸ்ட் டிரைவராக இருக்கிறார். கூடவே, BWT Arden அணிக்காக FIA F2 பந்தயத்திலும் கலந்துகொள்கிறார். 9 வயதிலிருந்து கார் ரேஸ் பயிற்சி பெற்றுவரும் இவர், கோ கார்ட் மூலமாக ரேஸ் உலகத்துக்குள் நுழைந்து, தற்போது உச்சபட்ச போட்டியான ஃபார்முலா ஒன் வரை உயர்ந்திருக்கிறார்.

சமீபத்தில், ஃபோர்ப்ஸ் நிறுவனத்துக்குப் பேட்டியளித்த டாட்டியானா கால்டிரோன், ``போட்டியின் முடிவுகள் எனக்குச் சாதகமாக இல்லாதபோது, `இவர் ஒரு பெண். எனக்குப் போதுமான உடல் வலிமை இல்லை' என்கிறார்கள். எப்போதும் முடிவுகளில் மட்டுமே கவனமாக இருக்கமுடியாது. நான் ரேஸ் ஓட்டக் காரணம், எனக்கு வேகம் பிடிக்கும், அட்ரினலின் பிடிக்கும்'' என்று பேசி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியிருக்கிறார்.

Tatiana Calderón - டாட்டியானா கால்டிரோன்
Tatiana Calderón - டாட்டியானா கால்டிரோன்

கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் F1-ல் கலந்துகொள்வதுதான் தன்னுடைய 100 சதவிகித லட்சியம் என்று சொல்லும் இவர் இப்போது F1 போட்டிக்கு முன்னேறும் முயற்சியில் இருக்கிறார்.