`பயம் தேவையில்லை' - எலெக்ட்ரிக் வாகனம் குறித்து போக்குவரத்துச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

எலெக்ட்ரிக் வாகனங்கள் வருவதால், மற்ற வாகனங்கள் இருக்காது என்ற பயம் தேவையில்லை என்று போக்குவரத்துத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், `2030-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும்தான் இயங்க முடியும்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பும் முக்கிய காரணியாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்காக, அதற்கு ஐந்து சதவிகிதம் மட்டுமே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, கோவையில் ஸ்மார்ட் மின் வாகனச் செயலாக்க சமூகம் (Society for Smart E Mobility) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ரூட்ஸ், ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் , குமரகுரு கல்வி நிறுவனம், ஆம்பியர் பிரைவேட் லிமிட்டட், ராபர்ட் போஷ் இந்தியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது. தமிழக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்மார்ட் மின் வாகனச் செயலாக்க சமூக நிர்வாகிகள், ``உலகில் அதிக மாசுபட்ட நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், இது பெண்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

ஆனால், சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்நாட்டில் இதற்கான தொழில்நுட்ப வளர்ச்சி குறைவுதான். சீனாவில் 2002-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனத் தொழில்நுட்பம் எப்படி இருந்ததோ, அந்த நிலையைத்தான் இந்தியா இப்போது எட்டியுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் வருவதன் மூலம், அனைத்து வகையான தொழில் நிறுவனங்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். எப்படி ஆட்டோ மொபைல் துறைக்கான ஹப்பாக சென்னை இருக்கிறதோ?, அதேபோல கோவையை இ மொபைலிட்டி துறைக்கான ஹப்பாக மாற்றுவதே எங்களின் நோக்கம்” என்றனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மொத்த வாகனங்களில், எலெக்ட்ரிக் வாகனங்கள் 0.5 சதவிகிதம்தான் இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தமிழக அரசின் கொள்கைகளை மூன்று வாரங்களில் வெளியிட இருக்கிறோம். அதில், பல்வேறு சலுகைகள் இருக்கின்றன.

நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிக அறிவிப்புகளும், சலுகைகளும் அதில் இருக்கும். தமிழகத்தில் 525 எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்த உள்ளோம். கோவையில் 100 பேருந்துகள், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தலா 50 பேருந்துகள் வருகின்றன.
உயர் தொழில்நுட்பத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வர உள்ளோம். பேருந்துப் பணிமனைகள், பொது இடங்களில் இந்த வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்களால், மற்ற வாகனங்கள் இருக்காதோ? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆட்டோ மொபைல் துறையில் தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள், 30 சதவிகிதம் எலெக்டரிக் வாகனங்களாக மாற்றுவதுதான் இலக்கு. மற்ற வாகனங்கள் இருக்காது என்ற பயம் தேவையில்லை” என்றார்.
“ஆட்டோ மொபைல் துறையை நம்பியுள்ள சிறு, குறு நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில், அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் நல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராஜேஷ் கூறினார்.