Published:Updated:

டிவிஎஸ் ஜூபிட்டர் க்ளாஸிக் ET-Fi...! முதல் 110சிசி BS-6 ஸ்கூட்டரில் என்ன ஸ்பெஷல்?

இந்த BS-6 வெர்ஷன், புதிய ET-Fi தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது (Eco Thrust - Fuel Injection); தற்போதைய BS-4 மாடல்களில் இருக்கும் CVT-i கார்புரேட்டட் இன்ஜினைவிட, இது 15% அதிக மைலேஜைத் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

Jupiter Classic ET-Fi
Jupiter Classic ET-Fi ( TVS Motors )

நாடெங்கும் BS-6 விதிகள் ஏப்ரல் 1, 2020 முதல் அமலுக்கு வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றனர். டூ-வீலர்களைப் பொறுத்தவரை, ஸ்கூட்டர் செக்மென்ட்டில் BS-6 அலையை ஹோண்டா ஆக்டிவா 125 தொடங்கி வைத்தது என்றால், பைக் செக்மென்ட்டில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-ஸ்மார்ட் 110தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்; இதைத் தொடர்ந்து பல BS-6 பைக்குகள் இடையே வந்த நிலையில், தற்போது மீண்டுமொரு ஸ்கூட்டர் BS-6 அவதாரத்தில் களமிறங்கியுள்ளது. ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மாடலான ஜூபிட்டர்தான் அது. (இதுவரைக்கும் 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்!)

க்ளாஸிக் வேரியன்ட்டில் வந்திருக்கும் இது, புதிய ET-Fi தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது (Eco Thrust - Fuel Injection); தற்போதைய BS-4 மாடல்களில் இருக்கும் CVT-i கார்புரேட்டட் இன்ஜினைவிட, இது 15% அதிக மைலேஜைத் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

Jupiter Classic ET-Fi
Jupiter Classic ET-Fi
TVS Motors

இந்த BS-6 வெர்ஷனின் டெக்னிக்கல் விவரங்களை அந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், அது முன்பைவிடச் சரிவைச் சந்தித்திருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது! 67,911 ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கும் இந்த ஸ்கூட்டர், முன்பைவிட 7,921 ரூபாய் அதிக விலையில் அறிமுகமாகியிருக்கிறது.

எனவே, விலை உயர்வை ஈடுகட்டும் விதத்தில் முன்பக்க Apron-க்குப் பின்னே USB மொபைல் சார்ஜர் மற்றும் மொபைல் வைக்க ஸ்டோரேஜ் ஸ்பேஸ் - க்ளியர் வைஸர் மற்றும் ஹாலோஜன் ஹெட்லைட்டுக்குப் பதிலாக Tinted Visor & LED ஹெட்லைட் என வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகிறது. மேலும் வழக்கமான Sunlit Ivory, Autumn Brown தவிர, புதிய Indiblue கலரிலும் இந்த BS-6 ஜூபிட்டர் க்ளாஸிக் ET-Fi மாடலை வாங்கலாம். அந்தப் புதிய கலருக்கேற்றபடி, சீட் கவர் மற்றும் Inner Sheild ஆகியவற்றின் நிறங்களில் சிறிய வித்தியாசம் தெரிகிறது. மற்ற வேரியன்ட்களின் (Base, ZX, Grande) BS-6 வெர்ஷன்கள், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் எனத் தகவல் வந்திருக்கிறது.