Published:Updated:

மேலும் ஒரு மாதம் மூடப்படும் தொழிற்சாலை..!- ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் அடுத்த திட்டம் என்ன?

அக்டோபர் - நவம்பர் வரையிலான ஒரு மாத காலம், ஃபோக்ஸ்வாகன் தனது தொழிற்சாலையை மூடியிருந்த நிலையில், இந்த இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது.

ஃபோக்ஸ்வாகன்
ஃபோக்ஸ்வாகன்

வாகன விற்பனை குறைந்திருப்பதால், உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புனேயில் இருக்கும் தனது தொழிற்சாலையை ஒரு மாதம் வரை மூடியிருந்தது. இந்நிலையில், ஃபோக்ஸ்வாகன் இப்போது, தனது தொழிற்சாலையை மேலும் ஒரு மாதம் வரை மூடப்போவதாகத் தகவல் வந்திருக்கிறது.

VW-Skoda
VW-Skoda

ஃபோக்ஸ்வாகனின் சக்கன் தொழிற்சாலையில், ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்கள் ஏற்றுமதிக்காகவும் உள்நாட்டு விற்பனைக்காகவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. தற்போது, சர்வதேச அளவில் ஃபோக்ஸ்வாகன் வாகனங்களில் விற்பனை சரிந்துவருவதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வாகனங்கள் குறைந்துவிட்டன. உள்நாட்டு விற்பனையும் பல ஆண்டுகளாக சரிவில்தான் இருக்கின்றன. விலை குறைவான ஏமியோ செடானையும், டீசல் வேரியன்ட்களையும் நிறுத்துவதாக முடிவெடுத்த பிறகு, ஃபோக்ஸ்வாகனின் உள்நாட்டு விற்பனை இன்னும் பல மடங்காகக் குறைந்துவிட்டது.

இந்த விற்பனை குறைவுக்கு இன்னொரு முக்கியக் காரணம், ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா கார்களின் அப்டேட். ஃபேஸ்லிஃப்ட், வேரியன்ட், விலை என சின்னச்சின்ன அப்டேட் வந்தாலும், இந்தியாவில் பல ஆண்டுகளாக அடுத்த தலைமுறை மாற்றத்தைக் காணாமலேயே இருக்கின்றன இந்தக் கார்கள். அதுவும் சர்வதேச அளவில் பல நாடுகளில் இந்நிறுவனம் நவீனமான MQB பிளாட்ஃபார்முக்கு மாறிவிட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் இன்னும் பழைய PQ25 பிளாட்ஃபார்ம் கார்களையே விற்பனை செய்துகொண்டிருக்கிறது.

ஸ்கோடா
ஸ்கோடா

தற்போது, இந்த வாகனங்களின் விற்பனை வெகுவாகக் குறைந்து வருவதால், MQB பிளாட்ஃபார்மைக் கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தம், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கு முன்பைவிட அதிகமாக இருக்கிறது. இதனால், கார்களின் விற்பனை குறைந்துள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு ஃபோக்ஸ்வாகன் தனது தொழிற்சாலையில் உள்ள PQ25 யூனிட்களை MQB யூனிட்டாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Vikatan

தற்போது இருப்பில் உள்ள கார்களுக்கு, அதிகப்படியான டிஸ்கவுன்ட் கொடுத்து விற்பனை செய்துவிட்டு, 2020-ன் மத்தியிலிருந்து தனது மொத்த கார் மாடல்களையும் மாற்றி MQB பிளாட்ஃபார்ம் கார்களை விற்பனைசெய்ய திட்டமிட்டுள்ளார்கள். அதுமட்டுமில்லை, இறக்குமதியாகும் பாகங்களைக் குறைத்துவிட்டு, தற்போது இருக்கும் கார்களில் 90 சதவிகிதம் இந்தியப் பாகங்களைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.