Published:Updated:

ஃபோக்ஸ்வாகன் போலோ மற்றும் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்டில் புதுசா என்ன இருக்கு!

ரஞ்சித் ரூஸோ

ஃபோக்ஸ்வாகன் தனது போலோ மற்றும் வென்ட்டோ கார்களை அப்டேட் செய்துள்ளது. வெளிவந்த காலம் முதல் அடுத்த தலைமுறையையே பார்க்காமல் இந்த கார்கள் அப்டேட்டில் மட்டுமே இருக்கின்றன. வந்திருக்கும் புது ஃபேஸ்லிஃப்டில் அப்படி என்னென்ன மாறியிருக்கிறது, ஏன் இந்த காரை வாங்கலாம் எனப் பார்ப்போம்.

polo facelift
polo facelift ( volkswagen )

போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.5.82 லட்சத்திலும், வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.8.76 லட்சத்தில் இருந்தும் தொடங்குகிறது. புது அப்டேட்டில் இரண்டு கார்களில் பழைய பெரிய க்ரில்லுக்கு பதிலாக ஸ்டைலான தேன்கூடு (Honeycomb) வடிவ க்ரில் வருகிறது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் டிசைனும் புதுசு. இந்த புதிய ஸ்டைல் ஃபோக்ஸ்வாகனின் GTI மாடலை நினைவுபடுத்துகிறது. இரண்டு கார்களிலும் டாப் வேரியன்ட்டில் கன்மெட்டல் ஃபினிஷ் அலாய் வீல் வருகின்றன. 

Vento Facelift
Vento Facelift
ஃபோக்ஸ்வாகன்

இந்த புதிய கார்களில் ஃபோக்ஸ்வாகன் கனெக்ட் எனும் கனெக்ட்டிவிட்டி வசதி வருகிறது. இது ப்ளூடூத் மூலம் நம் காரை இயக்கும் ஒரு வசதி. நம் காரில் ஃபோக்ஸ்வாகன் கனெக்ட் எனும் கருவி ஒன்று உண்டு அதைப் பொருத்திவிட்டால் நம் காரை மொபைல் ஆப் மூலமாகவே ஆன் செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லை, நம் டிரைவிங் ஸ்டைல், காரின் மைலேஜ், எவ்வளவு தூரம் பயணிக்கிறோம், காரில் எந்தெந்த விஷயங்களை மாற்றவேண்டி உள்ளது, எப்போது சர்வீஸ் விடவேண்டும் போன்ற தகவல்களை எல்லாம் மொபைல் ஆப் மூலம் பார்த்துக்கொள்ளலாம். காரை வேறு ஒருவரிடம் கொடுக்கிறோம் என்றால் நம் கார் எங்கே இருக்கிறது என்பதை உடனுக்குடன் பார்க்கமுடியும். காருக்கு ஏதாவது பாதிப்பு நேர்ந்தால் அதையும் உடனே சொல்லிவிடும்.

அரசு அத்தியாவசியமாக்கியுள்ள பாதுகாப்பு வசதிகளான சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் ஆகியவை ஏற்கெனவே இந்த கார்களில் வந்துவிட்டன. புதிய காரில் இந்த வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. 

volkswagen connect
volkswagen connect

இன்ஜினை பொருத்தவரை போலோவில் 76bhp பவர் தரும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 90bhp பவர் தரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் வருகின்றன. போலோ ஜீடியில் 105bhp பவர் தரும் டர்போ பெட்ரோலும், 110bhp பவர் கொடுக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் வருகின்றன. இவை எல்லாமே பிஎஸ்-4 இன்ஜின்கள் மட்டுமே. வென்ட்டோவின் 105bhp, 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்; 105bhp, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 110bhp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

போலோ இன்டீரியர்
போலோ இன்டீரியர்
ஃபோக்ஸ்வாகன்

டீசல் மாடல் கார்களுக்கு ஃபோக்ஸ்வாகன் 5 ஆண்டு வாரன்ட்டி கொடுக்கிறார்கள். இதனால், காரின் பராமரிப்பு செலவுகள் 30 சதவிகிதம் வரை குறையும் என்கிறது இந்நிறுவனம். இந்த கார்களை வாங்கத்தூண்டும் பெரிய அம்சம் என்றால் அது வாரன்ட்டி மட்டுமே. மற்றபடி ஃபோக்ஸ்வாகன் கார்களுக்கு புது அவதாரம் தேவை.