Published:Updated:

வழக்கத்தைவிட 80% குறைவான ரன்னிங் காஸ்ட்... டாடாவின் எலெக்ட்ரிக் நெக்ஸானில் என்ன ஸ்பெஷல்?

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என Ziptron தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது, டாடா மோட்டார்ஸ். அதன்படிதான் நெக்ஸான் EV, பின்னர் வரப்போகும் அல்ட்ராஸ் EV ஆகியவை கட்டமைக்கப்படும்.

டாடா Nexon EV
டாடா Nexon EV ( Tata Motors )

ஏப்ரல் 1, 2020 முதல் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில், அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கைக் காட்சிப்படுத்திய டாடா மோட்டார்ஸ், தற்போது தனது அடுத்த அஸ்திரத்தைத் தயார்செய்திருக்கிறது. அதன்படி, நெக்ஸானின் எலெக்ட்ரிக் வெர்ஷனை, மும்பையில் இந்த நிறுவனம் உலக அளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

முதற்கட்டமாக மும்பை, தானே, நவி மும்பை, புனே, பெங்களூரு, அஹமதாபாத், நியூ டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில், சுமார் 15-17 லட்ச ரூபாயில் அடுத்த ஆண்டில் வரப்போகும் இந்த எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவியை, 21,000 ரூபாய் செலுத்தி புக் செய்ய முடியும். பெட்ரோல்/டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களின் ரன்னிங் காஸ்ட்டில் 20% (1/5 பகுதி) மதிப்பிலேயே நெக்ஸான் EV காரை இயக்க முடியும் என்பது வரவேற்கத்தக்க அம்சம்.

டிசைன்

Ziptron EV Tech
Ziptron EV Tech
Tata Motors

காரின் முன்பக்கத்தில் அதிகப்படியான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது எனலாம். புதிய வடிவத்தில் இருக்கும் பானெட் மற்றும் பம்பர், மாற்றியமைக்கப்பட்ட பனி விளக்குகள், மெலிதான ஆனால் மூடப்பட்ட க்ரில், DRL உடனான LED ஹெட்லைட்ஸ் ஆகியவை அதற்கான உதாரணம். அக்டோபர் 2020 முதல் Pedestrian Protection விதிகள் அமலுக்கு வருவதாலேயே, நெக்ஸானில் இந்த மாறுதல்கள் நடந்திருக்கிறது எனலாம். பக்கவாட்டில் அலாய் வீல்களின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிகிறது. மற்றபடி காரின் பின்பக்கத்திலும் (டெயில் லைட், பம்பர்) சிற்சில மாற்றங்களே நிகழ்ந்துள்ளன.

Nexon EV
Nexon EV
Tata Motors

இதே விஷயங்கள், அப்படியே பெட்ரோல்/டீசல் இன்ஜின்களால் இயங்கும் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கு இடம்பெயரலாம். எலெக்ட்ரிக் நெக்ஸான் அதே அளவுகளில்தான் இருக்கிறது என்றாலும், எடை & சஸ்பென்ஷனில் மாறுதல் இருக்கலாம். அதேபோல நீல நிற வேலைப்பாடுகளுடன்கூடிய Electric Teal கலர் ஆப்ஷன், இந்த மாடலுக்கு எனப் பிரத்யேகமானது. கேபினுக்குள்ளே சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பகுதியிலும் நீல நிற ஃபினிஷ் இருப்பது, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. கியர் லீவருக்குப் பதிலாக இருக்கும் டயல், இது EV என்பதை உணர்த்திவிடுகிறது. மற்றபடி, இன்டீரியர் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. காரின் டச் ஸ்க்ரீனில் 30 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகள் இருக்கின்றன. இதை மொபைல் ஆப்-பினாலும் கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி - ரேஞ்ச்

Nexon EV Cabin
Nexon EV Cabin
Tata Motors

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என Ziptron தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது, டாடா மோட்டார்ஸ். அதன்படிதான் நெக்ஸான் EV, பின்னர் வரப்போகும் அல்ட்ராஸ் EV ஆகியவை கட்டமைக்கப்படும். சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களைப் போலவே, இந்த எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவியிலும் காரின் தரைப்பகுதியில்தான் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தின் Centre Of Gravity குறைவாக இருக்கும் என்பதுடன், காரின் ஓட்டுதல் அனுபவமும் நன்றாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், காரின் கிரவுண்ட் கிளீயரன்ஸ், 209-ல் இருந்து 205 ஆகக் குறைந்துவிட்டது. 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி Pack, 95kW/129bhp பவர் மற்றும் 24.5kgm டார்க்கைத் தரும் Permanent Magnet Synchronous வகை எலெக்ட்ரிக் மோட்டார் - Single Ratio கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Ziptron EV Tech
Ziptron EV Tech
Tata Motors

0-60கி.மீ வேகத்தை 4.6 விநாடிகளிலும், 0-100கி.மீ வேகத்தை 9.9 விநாடிகளிலும் நெக்ஸான் EV எட்டிவிடும் என்கிறது, டாடா மோட்டார்ஸ். பேட்டரிகளுக்கு லிக்விட் கூலிங், IP67 ரேட்டிங், High Strength ஸ்டீல் கேஸிங் (AIS-48) ஆகியவை வழங்கப்பட்டிருப்பது செம. Modified Indian Driving Cycle (MIDC) டெஸ்ட்டிங்கின்படி, ஃபுல் சார்ஜில் 300கி.மீ தூரம் கார் செல்லும் எனத் தகவல் வந்திருக்கிறது. இதில் CCS2 DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திலேயே 80% சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்! இதுவே வழக்கமான 15A AC சார்ஜர் பயன்படுத்தும்போது, 0-100% பேட்டரி சார்ஜ் ஏறுவதற்கு 8-9 மணி நேரம் வரை தேவைப்படும். கார் Coasting பாணியில் இயங்கும்போது, அதில் இருக்கும் Energy Regeneration வசதி, பேட்டரிக்கு மின்சாரத்தை அனுப்பும்.

வசதிகள் மற்றும் போட்டியாளர்கள்

Instrument Cluster
Instrument Cluster
Tata Motors

மொத்தம் 3 வேரியன்ட்டுகளில் நெக்ஸான் EV கிடைக்கும் (XM, XZ+, XZ+ LUX). XM-ல் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், 2 டிரைவிங் மோடுகளைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் (Drive, Sport) ஆகியவை உள்ளன; XZ+ வேரியன்ட்டில் டூயல் டோன் கலர் ஆப்ஷன், 16 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள், 7 இன்ச் ConnectNext இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட Harman ஆடியோ சிஸ்டம், ரியர் வியூ கேமரா மற்றும் பார்க் அசிஸ்ட், லெதர் சுற்றப்பட்ட புதிய ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டிருக்கிறது. டாப் வேரியன்ட்டான XZ+ LUX-ல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்மார்ட் & Wearable சாவி, Leatherette அப்ஹோல்சரி, Ascent & Descent ஹில் அசிஸ்ட், தானாக இயங்கும் LED ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள், LED DRL, எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள் என ஒட்டுமொத்தத்தில், அதிக சிறப்பம்சங்கள் காரில் உள்ளன.

Gear Selector
Gear Selector
Tata Motors

Global NCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் (2 காற்றுப்பைகள், ISOFIX) அப்படியே தொடர்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான கி.மீ தூரம் இந்த காரை டெஸ்ட் செய்திருக்கும் டாடா, நம் ஊரின் நெரிசல் மிக்க நகரச் சாலைகளை மனதில் வைத்து நெக்ஸான் EV-யைத் தயாரித்திருப்பதாகக் கூறியுள்ளது. ஏற்கெனவே, e-வெரிட்டோ, டிகோர் EV, கோனா EV ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், MG eZS - eKUV1OO - eXUV5OO - ஆஸ்பயர் எலெக்ட்ரிக் செடான் - Futuro E கான்செப்ட் - வேகன்-ஆர் EV எனப் புதிய எலெக்ட்ரிக் கார்கள் வரிசைகட்டி வரவிருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 8 வருடம்/1,60,000 கி.மீ வாரன்ட்டி (பேட்டரி, மோட்டார்) உடன் வரும் நெக்ஸான் EV, மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறும் எனத் தோன்றுகிறது.

2020 சிறந்த கார்/பைக்
எது?