Published:Updated:

அதே விலை, ஆனால் ஏகப்பட்ட அப்டேட்ஸ் - 9 ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் BMW 3 சீரிஸ்!

ஸ்மார்ட்போன் என்ட்ரி, ரிவர்ஸ் அசிஸ்டென்ட், கனெக்டட் தொழில்நுட்பம், டிரைவிங் அனுபவம் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது புது 3 சீரிஸ் மாடலில்.

BMW 3 series
BMW 3 series

ஒரு வாரத்துக்கு ஒரு படம் என வந்துகொண்டிருக்கும் நேரத்தில் திடீரென மூன்று நான்கு படங்கள் ஒரே வாரத்தில் ரிலீஸ் ஆகிவிடும். சில படங்கள் மொக்கையாக இருக்கிறது என ரிவ்யூ வந்தாலும் நடிகர்களைப் பொறுத்து குறைந்தபட்ச கேரன்ட்டி உள்ள படங்களுக்குத்தான் டிக்கெட் விற்கும். அதேநேரம் சில நல்ல படங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமலே சென்றுவிடும். இந்தச் சூழல்தான் சில மாதங்களாக கார் சந்தையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படி நாம் மிஸ் செய்த ஒரு நல்ல கார்தான் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

ஐஃபோனில் இருக்கும் SIRI போல காருக்குள் நமக்கு ஒரு அசிஸ்டென்ட், கீ தேவையில்லாத ஸ்மார்ட்ஃபோன் என்ட்ரி, ஆட்டோமேடிக்காக ரிவர்ஸ் செல்லும் வசதி, டிரைவிங் ஸ்டைலை உணர்ந்து அதற்கேற்ப காரின் தன்மையை மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் என பல விஷயங்கள் ஸ்பெஷலாக வந்திருக்கின்றன.

டிசைன்

9 ஆண்டுகள் கழித்து அடுத்த தலைமுறைக்கு அப்டேட் ஆகியுள்ளது இந்த 3 சீரிஸ் செடான்.

இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்த டிசைனை ஷார்ப்பான லைன்களைக் கொடுத்து இன்னும் மெருகேற்றியுள்ளது பிஎம்டபிள்யூ. பார்த்த உடனேயே இது M சீரிஸ் காரா என கேட்கும் அளவுக்கு காரின் மீது இருக்கும் கோடுகளிலேயே அதன் பெர்ஃபாமன்ஸ் தெரிகிறது.

BMW 3 Series
BMW 3 Series

இதன் க்ரில்லை பெரிதாக்கியுள்ளார்கள் என்று சொல்வதைவிடப் பெரிதாகத் தெரியும்படி வடிவமைத்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும், ஹெட்லைட்டும், க்ரில்லையும் இணைக்கும் அந்த டிசைன் எதிர்கால டிசைனர்களின் இன்ஸ்பிரேஷன். பழைய 3 சீரிஸின் பின்பக்கம் ஃபோலோ, வெர்னா போல கொஞ்சம் சாதாரண டிசைன். ஆனால், இப்போது தனித்துவமான ஸ்பாய்லர், L வடிவ டெயில்லைட், இரண்டு பெரிய எக்ஸாஸ்ட் பைப் என பின்பக்கம் செம ஸ்போர்ட்டி.

அளவு

புதிய 3 சீரிஸ் முன்பைவிட 76 மிமீ பெரிதாக இருந்தாலும் எடை 55 கிலோ குறைந்துள்ளது. இதற்குக் காரணம் வீல்பேஸ் CLAR பிளாட்ஃபார்ம். பிம்டபிள்யூவின் X7 எஸ்யூவி தேவை அதிகரித்திருப்பதால் இதன் பின்பக்க பாசஞ்சர்களுக்கு உட்கார நிறைய இடவசதி இருக்கிறது. டிரான்ஸ்மிஷன் டனல் கொஞ்சம் நீளமாக இருப்பதால் மூன்று பேர் உட்காரும்போது நடுவில் இருப்பவருக்கும் மட்டும் லெக்ரூக் குறையும். ஆனால், இரண்டு பேர் உட்காரும்போது ஏகப்பட்ட லெக்ரூம் உண்டு. ஹெட்ரூமும் முன்பைவிட அதிகம்.

BMW 330i
BMW 330i

வசதிகள்

சொகுசாகப் பயணிக்க ஸ்போர்ட் சீட், மெமரி வசதி கொண்ட எலெக்ட்ரிக் சீட் மட்டுமல்ல, பிஎம்டபிள்யூவின் கனெக்டட் தொழில்நுட்பமும் இதில் வந்துவிட்டது. ஆர்ம்ரெஸ்ட்டில் இருந்து கையை எடுக்காமலேயே கெஸ்ச்சர் மூலம் பாடல்களை மாற்றலாம், வால்யூம் ஏற்றி இறக்கலாம், மொபைல் அழைப்பை எடுக்கலாம்/நிராகரிக்கலாம். டிரைவர் வைத்து ஓட்டுபவர்கள் என்ன செய்வது என்று கேட்டால் அதுக்கும் ஒரு வழிவைத்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் / Infotainment system
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் / Infotainment system

SIRI போல உள்ளே ஒரு வாய்ஸ் அசிஸ்டென்ட் கொடுத்துள்ளார்கள். கடைசி சர்வீஸில் என்ன செய்தார்கள் என்பதில் இருந்து ஏசியை ஆஃப் செய் என்பது வரை என்ன சொன்னாலும் செய்கிறது இந்த கார். இதெல்லாம் எம்ஜியிலேயே இருக்கே எனக் கேட்கலாம். ஆனால், பிஎம்டபிள்யூவின் துல்லியம் எம்ஜி-யில் இல்லை. சின்னச் சின்ன சந்துகளில் ரிவர்ஸ் எடுப்பதை சுலபமாக்கக் கடைசி 50 மீட்டர் தூரம் தானாக ரிவர்ஸ் எடுக்கும் ரிவர்ஸ் அசிஸ்டென்ட் வசதி இதில் இருக்கிறது.

இன்ஜின்

புது 3 சீரிஸ் காரில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் இருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சம் 258bhp பவரும், டீசல் இன்ஜின் 190bhp பவரும் தருகிறது. இரண்டு இன்ஜினுமே 400Nm டார்க் தரக்கூடியவை. இரண்டு இன்ஜினிலும் 8 ஸ்பீடு அட்டோமேடிக் கியர்பாக்ஸ் மட்டுமே. பெட்ரோல் இன்ஜின் 0-100 கி.மீ தொடுவதற்கு 5.8 நொடிகளை எடுத்துக்கொள்கிறது. டீசல் இன்ஜின் 6.8 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. டிரைவிங்கில் பிஎம்டபிள்யூவின் தரம் வேற லெவல்.

இன்ஜின்
இன்ஜின்

இதற்கு முந்தைய மாடலில் இன்ஜின் சத்தம்தான் பெரிய குறையாக இருந்தது. ஆனால், இதில் டீசல் இன்ஜினா, எலெக்ட்ரிக் காரா என்பதே தெரியாத அளவு இன்ஜின் அமைதியோ அமைதி. வேகம் கூட்டினாலும் கேபினில் இன்ஜின் சத்தம் தெரியவேயில்லை.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்

விலை

இந்தியாவில் மூன்று வேரியன்ட்டுகளில் மட்டுமே வரும் 3 சீரிஸ், 51.49 லட்சம் ரூபாயில் இருந்து 59.29 லட்சம் வரை விற்பனைக்கு வந்துள்ளது. பழைய 3 சீரிஸின் டாப் வேரியன்ட்டுக்கும், புதிய மாடலின் டாப் வேரியன்ட்டுக்கும் 10,000 ரூபாய் மட்டுமே விலை வித்தியாசம். ஆனால், அப்டேட்ஸ் ஏகபோகம். லக்ஸூரி கார் வாங்குபவர்களின் தற்போதைய ஃபேவரெட் இந்த 3 சீரிஸ்.

Vikatan