Published:Updated:

ஃபோர்டை மஹிந்திரா ஏன் வாங்குகிறது? - இந்தக் கூட்டணியின் வரப்போகும் கார்கள் என்னென்ன?

2017-ல் பேச்சவார்த்தை ஆரம்பித்து, 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, 2019-ல் மஹிந்திராவுக்கு சொந்தமாகிவிட்டது ஃபோர்டு.

மஹிந்திரா, ஃபோர்டு
மஹிந்திரா, ஃபோர்டு

செப்டம்பர் 2017-ல் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் இந்தியாவில் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். அதன்படி, மார்ச் 2018-ல் பேச்சுவார்த்தைகள் முடிந்து, மஹிந்திரா தனது பவர்ட்ரெயின் (powertrain) தருவதாகவும், ஃபோர்டு தனது கனெக்டட் கார் தொழில்நுட்பத்தைத் தருவதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், இந்தியாவில் ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் மின்சார வாகனங்கள் உருவாகின அவை, விற்பனைக்கு வரவில்லை, டெஸ்ட்டிங்களில் இருக்கின்றன.)

மஹிந்திரா - ஃபோர்டு நிர்வாகிகள்
மஹிந்திரா - ஃபோர்டு நிர்வாகிகள்

இதன் அடுத்தகட்டமாக, மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இரண்டு நிறுவனங்களும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்கள். இம்முறை, வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே கிடையாது. 4.4 லட்சம் கார்களை உருவாக்கக்கூடிய ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்கிவிட்டது மஹிந்திரா.

இந்தப் புதிய கூட்டணியின் 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ஃபோர்டு நிறுவனத்தின் தொழிலை இந்தியாவில் வளர்ப்பதும், ஃபோர்டு கார்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதுமே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கம்.
ஜிம் ஃபார்லே
  • மஹிந்திரா நிறுவனம், ஃபோர்டு இந்தியாவை வாங்கியிருந்தாலும், ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் விற்பனையில் இருக்கும். தற்போது இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஃபோர்டு. இதன் ஏற்றுமதி தொழில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு போலவே தொடரும்.

  • ஃபோர்டு நிறுவனத்தின் தொழிலை, இந்தியாவில் வளர்ப்பதுதான் இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கம். அதாவது, கிட்டத்தட்ட பஜாஜ்-கேடிஎம் நிறுவனங்களின் கூட்டணி போலவே இந்தக் கூட்டணியும் செயல்படும். இதனால், மஹிந்திரா நிறுவனத்தின் உதவியுடன் அதிக ஃபோர்டு ஷோரூம்கள், சர்வீஸ் சென்டர்கள் போன்றவை அமைக்கப்படும்.

Jim Farley, Pawan Goenka, Rajan Wadhera
Jim Farley, Pawan Goenka, Rajan Wadhera
  • புதிய கூட்டணி நிறுவனத்தில் மஹிந்திராவுக்கு 51 சதவிகிதமும், ஃபோர்டுக்கு 49 சதவிகிதமும் பங்கு உண்டு. அதிகாரிகள் குழுவில் இரண்டு நிறுவனத்தின் ஆட்களும் சரிசமமாகவே இருந்தாலும், தலைவராக மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்தவரே தேர்வு செய்யப்படுவார்.

ஃபோர்டு எண்டேவர் VS ஆல்ட்டுராஸ் G4 VS பார்ச்சூனர் VS MU-X
ஃபோர்டு எண்டேவர் VS ஆல்ட்டுராஸ் G4 VS பார்ச்சூனர் VS MU-X
  • மஹிந்திரா-ஃபோர்டு இணைந்து சில புதிய எஸ்யூவிகளை உருவாக்குகிறார்கள். இதில், மூன்று எஸ்யூவிக்கள், ஃபோர்டு நிறுவனத்தின் அடையாளத்தோடும், XUV500 போல ஒரு மிட் சைஸ் எஸ்யூவி இரண்டு நிறுவனங்களிலும், அதனதன் பிராண்டில் விற்பனைக்கு வரப்போகிறது.

  • புதிதாக வரப்போகும் அடுத்த தலைமுறை XUV500 காரின் பிளாட்ஃபார்மில் ஃபோர்டு நிறுவனத்தின் C செக்மென்ட் எஸ்யூவி ஒன்று விற்பனைக்கு வரவுள்ளது. ஃபோர்டு பிளாட்பார்மில் க்ரெட்டா, செல்ட்டோஸ்போல ஒரு B செக்மென்ட் எஸ்யூவியும், ஹோண்டா BR-V போல எம்பிவி ஒன்றும் தயாரிக்க உள்ளார்கள். ஃபோர்டு ஏற்கெனவே மஹிந்திராவின் உதவியோடு புதிய மின்சார மாடல் காரை உருவாக்கிவருகிறது.

மஹிந்திரா நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா
மஹிந்திரா நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா
Matti Blume - Wikimedia commons
  • கார்களின் தயாரிப்பைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் அகமதாபாத் இரண்டு தொழிற்சாலைகளும் இந்தக் கூட்டணியின் கீழ் இயங்கும். ஆனால், அகமதாபாத்தில் இருக்கும் ஃபோர்டின் இன்ஜின் தொழிற்சாலை மட்டும் தனியாக ஃபோர்டு குளோபல் நிறுவனத்தின் கீழ் இயங்கும்.

Vikatan
  • இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும், ஃபோர்டு கார்கள் மட்டுமல்லாமல் மஹிந்திராவின் கார்களையும் தயாரிக்க முடியும். இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து, தனியாக எந்த ஒரு பிராண்டையும் உருவாக்கப்போவதில்லை. அந்தந்த நிறுவனம் அதன் பேட்ஜிலேயே செயல்படவுள்ளன.

  • இந்தியாவில் இருக்கும் ஃபோர்டின் மற்ற தொழில்களான குளோபல் பிசினஸ் சர்வீஸ் யூனிட், ஃபோர்டு க்ரெடிட் மற்றும் ஃபோர்டு ஸ்மார்ட் மொபிளிட்டி போன்ற நிறுவனங்கள் தனித்து இயங்கவுள்ளன.

2019 ஃபோர்டு எண்டேவர் பேஸ்லிஃப்ட்
2019 ஃபோர்டு எண்டேவர் பேஸ்லிஃப்ட்
  • புதிய கூட்டணியின் முதல் கார் 2020-ம் ஆண்டு ஜூன்/ஜூலை மாதங்களில் காட்சிப்படுத்தவுள்ளார்கள்.

  • மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணியில் மஹிந்திரா 657 கோடி ரூபாயும், ஃபோர்டு 632 கோடி ரூபாயும் முதலீடு செய்கிறது. கடன்கள் 636 கோடி ரூபாய் போக இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1,289 கோடி ரூபாய்.

மஹிந்திரா நிறுவனம் இதுவரை ரெனோ, ஃபோர்டு, Peugeot, சாங்யாங், ரெவா எலெக்ட்ரிக்கல் கம்பெனி, BSA, GenZe எனப் பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், எதுவும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இந்தப் புதிய கூட்டணி இரண்டு நிறுவனங்களுக்கும் கைகொடுக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.