Published:Updated:

வீல் அலைன்மென்ட் & வீல் பேலன்சிங் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள தமிழில் ஒரு புத்தகம்!

`சமூகம் மட்டுமல்ல, வாகனங்களின் சக்கரங்களும் சமத்துவத்தோடு இருந்தால் மட்டுமே சரியான பாதையில் செல்லமுடியும்' என்கிறார் இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் மற்றும் மனாடெக் நிறுவனத்தின் உரிமையாளர் மனநாதன்.

வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங்
வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங்

`இந்தியாவின் டெட்ராய்ட்' என்று சென்னையைச் சொல்வதற்குக் காரணம், பல ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைமை இடங்கள் இங்குதான் உள்ளன. இந்தியாவின் ஆட்டோமொபைல் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. ஆனாலும், தமிழில் ஆட்டோமொபைல் புத்தகங்கள் அதிகம் கிடையாது. வெளிவந்துள்ள சில புத்தகங்களும்கூட பொதுவாக ஆட்டோமொபைல் என்றால் என்ன, கார், பைக் பாகங்கள் என்னென்ன என்பதை மட்டுமே சொல்பவையாக இருக்கின்றன.

மனநாதன்
மனநாதன்

`என்ஜின்' போன்ற சில புத்தகங்கள் மட்டுமே தனியாக ஒரு பாகத்தை/தொழில்நுட்பத்தையும் விளக்குபவையாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இரா.மனநாதன் எழுதியிருக்கும் `வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங்' என்ற புத்தகம் இணைந்துள்ளது.

கடந்த வாரம், Madras Management Association-ல் இந்த `வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங்' புத்தகம் வெளியிடப்பட்டது. வீல் பேலன்சிங் துறையில் இருப்பவர்கள் மனநாதனை தெரியாமல் இருக்கமுடியாது. திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லக்குடி எனும் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த மனநாதன் 22 ஆண்டுகளுக்கு மேலாக வீல் பேலன்சிங் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு - டிசைன் துறையில் வேலைவாய்ப்பு எப்படி?

வீல் அலைனர், வீல் பேலன்சர், டயர் சேன்ஞர் போன்ற கருவிகளைத் தயாரித்து ஆசியா முழுவதும் இருக்கும் சர்வீஸ் சென்டர்களுக்கு விற்பனை செய்துவரும் மனாடெக் எனும் நிறுவனத்தை தொடங்கியவர் இவர். தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய கராஜ் மற்றும் சர்வீஸ் எக்யுப்மென்ட் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது மனாடெக்.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய புத்தகத்தைப் பற்றிப் பேசிய அவர், ``மாணவர்களுக்கும் புரியும்படியாக ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்தைகளைக் கண்டறிவது சவாலாக இருந்தது. 'கேலிப்ரேஷன்' என்ற சொல்லுக்கு `அளவுகாத்தல்' எனும் தமிழ்சொல்லைப் பயன்படுத்தியதுபோல, பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் புத்தகத்தில் பல ஆங்கில வார்த்தைகளைத் தமிழ் படுத்தி, எளிய மக்களுக்கும் வீல் பேலன்சிங் பற்றிப் புரியும்படி எழுதியுள்ளார். 'சமூகம் மட்டுமல்ல, வாகனங்களின் வீல்களும் சமத்துவத்தோடு இருந்தால் மட்டுமே சரியான பாதையில் செல்லமுடியும்' என்கிறார் நூலாசிரியர் மனநாதன்.

இந்தப் புத்தகத்தில், வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மென்ட் என்ற இரண்டு கோட்பாடுகளைத் தெளிவுபடுத்த 112 படங்கள் உள்ளன. வீல் பேலன்சிங் ஏன் நடைமுறைக்கு வந்தது, எப்படிச் செய்வது, செய்யத் தவறினால் ஏற்படும் இழப்புகள் எல்லாமே புத்தகத்தில் உண்டு. பொறியியலை, தாய்மொழியில் கற்பது எளிது" என்று கூறினார்.

MMA நிறுவனர் விஜயகுமார் பேசுகையில், ''வீல் பேலன்சிங் & அலைன்மன்ட் குறித்த விரிவான தகவல் தேவையென்றால் 200 ரூபாய்க்கு இந்தப் புத்தகம் வாங்கினால்போதும். இது, மெக்கானிக்குகளுக்கும், மாணவர்களுக்குமானது.'' என்று குறிப்பிட்டார்.

புத்தக வெளியீட்டு விழா
புத்தக வெளியீட்டு விழா

எழிலினி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்நூல், புதுச்சேரி மனாடெக் எலக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிளை அலுவலகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.