Published:Updated:

`செம்ம என்டர்டெயின்மென்ட் கேரன்டி!' - எப்படி இருக்கிறது ஸ்பாட்டிஃபை? #Spotify #AppReview

`செம்ம என்டர்டெயின்மென்ட் கேரன்டி!' - எப்படி இருக்கிறது ஸ்பாட்டிஃபை? #Spotify #AppReview
News
`செம்ம என்டர்டெயின்மென்ட் கேரன்டி!' - எப்படி இருக்கிறது ஸ்பாட்டிஃபை? #Spotify #AppReview

ஏற்கெனவே அரை டஜன் மியூசிக் ஆப்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், ஸ்பாட்டிஃபையில் புதிதாக என்ன இருக்கிறது?

லகின் சிறந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்பாட்டிஃபை பல தடைகளைக் கடந்து இறுதியாக இந்தியாவில் கால்பதித்துள்ளது. ஏற்கெனவே ஜியோ-சாவன், ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், கானா, விங்க், கூகுள் ப்ளே மியூசிக் எனப் பல நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் போதிலும் உலகம் முழுவதிலும் 207 மில்லியன் ஆக்ட்டிவ் பயன்பாட்டாளர்கள், 96 மில்லியன் கட்டணம் செலுத்தும் பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் ஸ்பாட்டிஃபை இந்தியாவைப் பெரிய வாய்ப்பாகவே பார்க்கிறது. தற்போது அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் புது ப்ளேலிஸ்ட்கள், இந்தியக் கலைஞர்களுக்கான சிறப்பு ரேடியோக்கள் என அனைத்தும் ஏற்கெனவே ரெடி. ஆனால், இப்படி ஏற்கெனவே இந்தச் சந்தையைப் பிடிக்க பெரும் போட்டி நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இங்கு புது என்ட்ரியான ஸ்பாட்டிஃபை எடுபடுமா? 

ஒரு வாரம் முன் இந்தியாவில் அறிமுகமான இந்தச் சேவையைப் பயன்படுத்தியதில் இதில் இருக்கும் நிறை, குறைகள் என்னவென்று ஓரளவு தெரியவந்தது. அதை விரிவாகப் பார்ப்போம்.

இதை எந்தச் சாதனங்களிலெல்லாம் ஸ்ட்ரீம் செய்யமுடியும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்குப் பதில் மிக எளிதான ஒன்றுதான். எல்லாவற்றிலும் கேட்கலாம். முக்கிய இயங்குதளங்களை அனைத்திற்குமே சப்போர்ட் கொடுத்திருக்கிறது ஸ்பாட்டிஃபை. Linux , Mac, Windows ஆகியவற்றுக்குத் தனித்தனி டெஸ்க்டாப் ஆப்கள் இருக்கின்றன. மொபைலிலும் அப்படியே Android, iOS, Windows என அனைத்திற்கும் மொபைல் ஆப் இருக்கிறது. இதுபோக ஸ்மார்ட் டிவி, கேமிங் கன்சோல், கார் என அனைத்து இடங்களிலும் இந்தச் சேவையை ஸ்ட்ரீம் செய்யலாம். ஆப் இல்லாமல் இணையதளத்திலும் ஸ்பாட்டிஃபையில் இசை கேட்கமுடியும். ஆப்பில் நீங்கள் உங்கள் சாதனத்தில் பதிவிறக்கி வைத்திருக்கும் M4P, MP3, MP4 audio போன்ற ஃபைல்களை ஒரு மியூசிக் பிளேயர் போலவும் ப்ளே செய்யமுடியும். எனவே ஸ்பாட்டிஃபை எனக்குக் கிடைக்காது என்று யாரும் கூறமுடியாது.

விலை

இதில் விளம்பரங்களுடன் இலவசமாக இசை கேட்கலாம் என்பதால் ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக் போன்ற கட்டணச் சேவைகளை விட ஸ்பாட்டிஃபைக்கு இந்தியாவில் நல்ல ரீச் இருக்குமென எதிர்பார்க்கலாம். இதனால் இலவசப் பிரிவில் மற்ற நிறுவனங்களுக்கும் டஃப் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. விளம்பரங்கள் இல்லாமல் மிக அதிக தரத்தில் பாடல்கள் கேட்க வேண்டுமென்றால் ஸ்பாட்டிஃபை ப்ரீமியம் சந்தாவைப் பெறலாம். புதிய பாடல்கள் உடனுக்குடன் வெளியாவது, ஆஃப்லைனில் பாடல்களை பதிவிறக்கிக் கொள்வது என மேலும் பல வசதிகள் இந்தச் சந்தாவில் கிடைக்கும். ஒரு நாள் முதல் ஒரு வருடம் வரை இந்த ப்ரீமியம் சந்தாக்கள் கிடைக்கின்றன. இந்தியாவிற்கேற்ப விலை குறைந்ததாகக் கூறினாலும் மாதம் 119 ரூபாய் என்பது இந்தியச் சூழலில் சற்றே அதிகம்தான். அமேசான் இதே 129 ரூபாயில் ப்ரைம் மியூசிக், ப்ரைம் வீடியோ, ப்ரைம் டெலிவரி எனப் பல விஷயங்களைத் தருகிறது. சொல்லப்போனால் இது கிட்டத்தட்ட ஆப்பிள் மியூசிக்கின் விலை வந்துவிடும். ஆப்பிள் போன்ற ஃபேமிலி பேக்குளும் இங்கே கிடையாது. ஆனால் மாணவர் என்றால் சிறப்புச் சலுகை உண்டு.

UI மற்றும் தரம்

உலகம் முழுவதும் இத்தனை மக்களை எப்படி இது சென்றுசேர்ந்தது என்று யோசித்தால் அதற்கு இந்த UI மற்றும் தரம்தான் முக்கியக் காரணமாக இருக்கவேண்டும். எளிதாகவும் அதே நேரத்தில் அழகாகவும் இருக்கிறது இதன் UI. இலவசப் பயனாளர்கள் பாடல்களை 160 Kbps வரை கேட்கலாம். இதிலேயே மற்ற சேவைகளை விடத் தரத்தில் ஒரு சிறிய முன்னேற்றம் தெரிகிறது. பிரீமியம் பயனாளர்களுக்கு 320 Kbps தரத்தில் பாடல்கள் கிடைக்கும். இவற்றை நீங்கள் ஆஃப்லைனில் பதிவிறக்கி வைத்துக்கொள்ளலாம். இது மிகவும் துல்லியமாக இருக்கிறது. மேலும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பாட்டிஃபை கனெக்ட் வசதியும் கிடைக்கிறது. இதன்மூலம் லேப்டாப், டிவி போன்ற மற்ற சாதனங்களில் ஓடும் பாடல்களை உங்கள் மொபைல் மூலமாகவே செலக்ட் செய்யவோ மாற்றவோ முடியும். இது ஸ்பாட்டிஃபைக்கே மட்டுமான சிறப்பு. எனவே செம்ம என்டர்டெயின்மென்ட் கேரன்டி என்கிறது ஸ்பாட்டிஃபை.

பாடல்கள்

இப்போது களம் காண்கிறதென்றாலும் முக்கிய இந்தியப் பாடல்கள் அனைத்தும் இதில் இருக்கிறது. தமிழில் தேடிப்பார்த்ததில் பழைய இளையராஜாவின் பாடல்கள் தொடங்கி இன்றைய ரஹ்மான் பாடல்கள் வரை முக்கியமான பாடல்கள் இருப்பினும் சற்றே கிளாசிக்கான பழைய பாடல்கள் மிஸ்ஸிங். இவை விரைவில் சேர்க்கப்படலாம். நீங்கள் பழைய பாடல் விரும்பி என்றால் ஜியோ-சாவன், கானா போன்ற இந்திய சேவைகள்தாம் பெஸ்ட். அதே நேரத்தில் ஆங்கில இசை கேட்பவர் என்றால் ஸ்பாட்டிஃபை பெஸ்ட் என்று கூறலாமா என்றால் அப்படியும் இல்லை என்ற நிலைதான். வார்னர் நிறுவனத்துடனான பஞ்சாயத்தில் அவர்களிடம் இருக்கும் லட்சக்கணக்கான பாடல்கள் தற்போதைக்கு ஸ்பாட்டிஃபையில் இல்லை. இந்திய நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பு வரும்வரை இதைப் பற்றிய முடிவுகள் எதுவும் தெரியவராது. ஆனால், நீங்கள் கேட்கும் பாடல்களை வைத்து உங்களுக்கு எந்தப் பாடல்கள் பிடிக்கும் என்று சரியாகப் பரிந்துரைப்பது, முன்னணி கலைஞர்களுக்கு தனித்தனி ரேடியோக்கள் இருப்பது, லேட்டஸ்ட் பாடல்கள் அனைத்தும் உயர்தரத்தில் இருப்பது என பாசிட்டிவ்களும் இல்லாமல் இல்லை.  

ஒரு வாரத்திலேயே இந்தியாவில் 1 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பிடித்துள்ளது ஸ்பாட்டிஃபை. இது மிகவும் சிறப்பான தொடக்கம்தான். ஆனாலும் இந்தியாவிற்கேற்ப சில மாற்றங்கள் செய்யாமல் தரம், லுக் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் இங்கு டாப் ஸ்பாட்டை பிடிப்பது கடினம்தான். மேலும் தற்போது இருக்கும் சேவைகளைவிட்டு பணம் செலுத்தி ஸ்பாட்டிஃபை பிரீமியம் பெறவும் ஸ்பெஷல் காரணங்கள் பெரிதாக இப்போதைக்கு இல்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்குக் காதுகொடுத்து அதற்கான பணிகளைச் செய்யும் என்றே இவர்களது ட்ராக் ரெகார்டு கூறுகிறது. இதனால் ஒரு வாரத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தொடர்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ப்ளஸ்

- UI மற்றும் தரம்
- அனைத்துக்குமான சப்போர்ட் 
- விளம்பரங்களுடன் கிடைக்கும் இலவச சேவை

மைனஸ் 

- பிரீமியம் சந்தாவின் விலை, சற்றே அதிகம்தான்
- கிளாசிக் பாடல்கள் மிஸ்ஸிங்
- தீர்வு காணாத வார்னர் - ஸ்பாட்டிஃபை பஞ்சாயத்து