Published:Updated:

``கேசட் முதல் யூடியூப் வரை!” - ஒரு 80's ஆசாமியின் இசைப் பயணம்

``கேசட் முதல் யூடியூப் வரை!” - ஒரு 80's ஆசாமியின் இசைப் பயணம்
News
``கேசட் முதல் யூடியூப் வரை!” - ஒரு 80's ஆசாமியின் இசைப் பயணம்

சமீபத்தில் உங்களிடம், யாராவது, நான் புதிதாய் ஒரு டேப் ரெக்கார்டரோ சிடியையோ வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்களா? அந்தக் காலம் எல்லாம் முடிந்துவிட்டது. சர்வம் ஸ்மார்ட்போன் மயம்.

காட்சி - 1

அப்போது நான் செங்கோட்டையில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு, என் தந்தையின் நண்பர்கள், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அலுவலக அரசியல், வளைகுடா யுத்தம், குற்றாலத்தில் தண்ணி வருதா என்று பேச்சு சகல திசைகளிலும் போய்க்கொண்டிருந்தது. கடைசியாய், போகும் முன் ஒரு நண்பர், என் அப்பாவிடம், "நீ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தியே, இந்தா என்று ஒன்றைத் தந்துவிட்டு போனார்". பார்சலைப் பிரித்துப் பார்த்தால் இந்திப் பட ஆடியோ கேசட் - நாகின் / மதுமதி. அந்த கேசட்டின் மதிப்பு 20 ரூபாய்தான். ஆனால், அவருக்கு, அது, சந்தோஷத்தையும், பல நாள்களாகத் தேடி அலுத்துப்போன பின், எதிர்பாராதவிதமாக அவரைத்தேடி வந்ததன் விளைவு, பெரும் மதிப்பையும் கொடுத்தது. அன்றிலிருந்து, அவர் வீட்டில் இருக்கும்போதெல்லாம், கடி கடி மோரா தில்லு தடுகே, சுஹானா சபர் பாடல்கள்... எங்கள் வீட்டிலிருந்த ஒரே ஸ்பீக்கர் கொண்ட சிறிய பானாசோனிக் டேப் ரெக்கார்டரில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் 

காட்சி - 2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜான் கோல்ட்ரேனின், ப்ளூ ட்ரெயின் என்ற ஜாஸ் இசை கோர்வை என் மொபைலில் ஓடிக்கொண்டிருந்தது. அதன் அட்டகாசமான ஆரம்பம் முடிவதற்குள், 'மாலையில் யாரோ மனதோடு பேச' பாடலுக்கு மொபைல் தாவியது, காலங்காத்தால மனுசன் போடுற பாட்ட பாரு என்ற மனைவியின் முணுமுணுப்போடு. சிறிது நேரத்தில், பையன் தூங்கி எழுந்து வந்து, தன் பங்குக்கு, 'மரணம் மாஸு மரணம்' என்று மங்களகரமாக நாளைத் தொடங்கி வைத்தான்.

இந்த இடைப்பட்ட 25 ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சியால், இசை எத்தனை சல்லிசாக, மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளாக மாறிப்போனது. இன்று, திரையிசைப் பாடல்கள் மட்டுமல்ல, மேற்கத்திய செவ்வியல் இசை முதல் இந்துஸ்தானி வரை பழைய இந்திப் பாடல்கள் முதல் உலகப் படங்களின் பின்னணி இசை வரை, எந்தவொரு இசை வடிவத்தையும் துளி சிரமமின்றி, அதிக செலவின்றி, நம் மொபைலுக்குக் கொண்டு வந்துவிட முடியும்.

அது ஒரு கேசட் காலம்

2000-த்தில் பிறந்து வளர்ந்த தலைமுறையினருக்கு, நம் தலைமுறையினர், பிடித்த பாட்டைக் கேட்க பட்ட பாட்டை அறிந்திருக்க மாட்டார்கள். முதலில் அவர்களுக்கு கேசட் என்றொரு சாதனம் இருந்தது தெரியுமா என்பதே சந்தேகம். அப்புறம் எங்கே அதன் வகைகள் தெரியும்? கேசட்டுகளில், ஒரிஜினல் மற்றும் போலி என இரண்டு வகை இருந்தன. ஒரிஜினல் கேசட்டுகளை ஆர்வமுடன் சேகரிக்கும் பலர் அன்றிருந்தார்கள். நான் ரெண்டாவது வகை. சில சமயம், அப்பாவிடம் நாள் கணக்கில் கெஞ்சி, அடம் பிடித்தால், ’போய்த் தொல’ என்று அபூர்வமாய் ஒரிஜினல் கேசட் கிடைக்கும். மற்றபடி பெரும்பாலான சமயம் 10 ரூபாய் போலி கேசட்தான். 

என்னுடைய மூன்றாவது வகுப்பில் Tezaab மற்றும் Qayamat Se Qayamat Tak படத்தின் பாடல்கள் வெகுவாக பாதித்த சமயம், அப்பாவோடு ஆபீஸ் டூர் சென்றிருந்தேன் - நாகூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம். டூரில் நான் என் அப்பாவிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான், ``Tezaab மற்றும் Qayamat Se Qayamat Tak படத்தின் கேசட்கள் மட்டும் வாங்கித்தாங்க‌ப்பா... வேற எதுவும் வேணாம்.” வெறும் 10 ரூபாயோட போச்சு தலைவலி என்று சம்மதித்தார். ஆனால், கேசட் சுலபமாகக் கிடைக்கவில்லை, நாகப்பட்டினத்தை சுற்றிப் பார்க்க வந்த நாங்கள், அங்கு உள்ள எல்லா கேசட் கடைகளையும் சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம். யார் செய்த புண்ணியமோ, கடைசியாக‌ ஒரு கடையில் கிடைத்தது.    

போலி கேசட்டுகளில், ஒலித்தரம் சுமாராய் இருக்கும் அல்லது பாடல்கள் வேகமாய் ஓடும். இருந்தும், அதை வாங்கவும் ஒரு கூட்டம் இருந்தது. மூன்றாவது வகையினர் உண்டு. இவர்கள் ஒரிஜனல் கேசட்டுகளையும் வாங்க மாட்டார்கள், பத்து ரூபாய் கேசட்டையும் வாங்க மாட்டார்கள். மாறாக, T-Series, Meltrack, TDK, Sony போன்ற கம்பெனிகள் விற்கும், பதியப்படாத வெற்று கேசட்டுகளை வாங்கி, மியூஸிக்கல் கடைகளுக்குச் செல்வார்கள். அங்கு, பல படங்களின் பாடல்களைப் கேட்டுப் பார்த்து, தங்களுக்குப் பிடித்ததை மட்டும் பதிந்துவிட்டு வருவார்கள். கிட்டத்தட்ட 2000-களின் முற்பகுதி வரை இந்த முறைதான். 80'-களின் ஆசாமியான நானே கடைசியாக வாங்கிய கேசட் 'பாய்ஸ்'. அதன் பிறகு, சிடிக்களின் வரவையொட்டி, கேசட்டுகள் மெள்ள மெள்ள சந்தையைவிட்டுப் போய், இன்று மியூசியப் பொருளாய் காட்சியளிக்கிறது

வந்தது கேபிள் டிவி

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் தொடக்கப்புள்ளியாக, 90-களின் தொடக்கத்தில் வந்த சாட்டிலைட் சானல்களைச் சொல்லலாம். அது வரை நமக்குப் பிடித்த இசையைக் கேட்க  ஒளியும் ஒலியும், இலங்கை வானொலி அல்லது டேப் ரிக்கார்டர் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்த காலம். 90-களில் சன், ராஜ் டிவி வருகிறது. பின்னர், சில வருடங்களிலேயே இசைக்கென்றே 24 மணி நேர சேனல்கள் SCV, சன் மியூசிக் வர ஆரம்பிக்கின்றன.

இலங்கை வானொலி, குறிப்பாக, தூர்தர்ஷனுக்கு விழுந்த முதல் அடி இதுதான். தொடர்ச்சியாக, விஜய், ஜெயா, உள்ளூர் சேனல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வர, கேசட்டுகளை ஆர்வத்துடன் வாங்குவது, மியூசிக்கலில் போய் பிடித்த பாடல்களைப் பதிவு செய்வது எல்லாம் முதல் முறையாக மந்தமடைய ஆரம்பிக்கின்றன. இருந்தும், சில மாதங்களுக்கு ஒரு முறை மியூசிக்கல் கடைகள் பரபரப்படைந்து, பின், தங்களின் பழைய நிலைக்குத் திரும்பும். அந்தத் தற்காலிக பரபரப்புக்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானின் புதுப்பட கேசட்டுக்கு, படத்துக்குப் பூஜை போட்ட நாள் முதலே காத்திருக்கும் கூட்டம் இருந்தது. 'ரிதம்' படத்தின் கேசட் வந்துவிட்டதா என்று ஒரு வருடம் முழுக்க மியூஸிக்கல் கடைக்காரரை நான் நச்சரித்திருக்கிறேன். 

புத்துயிர் பெற்ற ரேடியோ

கேசட்டுகளுக்கு விழுந்த அடுத்த பெரும் அடி தனியார் பண்பலை சானல்கள். வந்த சில மாதங்களிலேயே, தையற் கடைகள், கல்லூரி விடுதிகள், டீக்கடைகள், டவுண் பஸ்கள் என சூரியன் FM கேட்காத பொது இடங்கள் இல்லை. நேயர் விருப்பம், பழைய பாடல்கள், புதுப் பாடல்கள் என அனைத்து தரப்பினரையும் ஈர்த்தன இந்த பண்பலை சேனல்கள். ரேடியோ பெட்டியின் விலையும் மிகக் குறைவு. ஒவ்வொரு புதுப் படம் வரும்போதும், காசு கொடுத்து கேசட் வாங்கும் தொல்லை இல்லை எனப் பல சௌகரியங்கள். கூடுதலாக, செல்போனில் ரேடியோ கேட்கும் வசதிகள் வர மக்களை மீண்டும் ரேடியோவிடம் சரணடைய வைத்தது. 

2000-த்தின் முற்பகுதியில் FM சேனல்கள் என்றால், நடுப்பகுதியில் mp3 சிடிக்கள், அதி நவீன மொபைல் மாடல்கள் என எல்லாம் சேர்ந்து கேசட்டுகளுக்கு ஒரேயடியாகச் சமாதி கட்டிவிட்டன. 

ஸ்மார்ட்போனும் யூடியூபும்

கேசட்டுகளாவது 30 வருடங்கள் கழித்து காணாமல் போயின. ஆனால், சிடிக்கள் வந்த கடந்த பத்து பதினைந்து வருடங்களிலேயே, பென் ட்ரைவ், ஐபாட், ஸ்மார்ட்போன் செயலிகள், ஐடியூன்ஸ் எனப் பல முனை தொழிநுட்ப தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் உங்களிடம், யாராவது, நான் புதிதாக ஒரு டேப் ரெக்கார்டரோ சிடியையோ வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்களா? அந்தக் காலம் எல்லாம் முடிந்துவிட்டது. சர்வம் ஸ்மார்ட்போன் மயம். ஒரு ஜியோ சிம், 5000 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உலகின் எந்த இசையையும் தரவிறக்கம்கூட செய்யாமல் கேட்கலாம்.

மனித நாகரிகத்தில், அச்சு இயந்திரக் கண்டுபிடிப்புதான் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகச் சொல்வார்கள். என்னைக் கேட்டால், அதற்கடுத்து, யூடியூப்தான். யூடியூபில், 'மாசி மாசம் ஆளான பொண்ணு' ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம், செங்கோட்டையில், எங்கள் வீட்டின் மாடியில், கல்யாணமாகி புதுப்பெண்ணாய் வந்த அக்காவின் நினைவு வந்து போகும். வண்ணதாசன் சிறுகதைகளில் வரும் பெண்களைப்போல பிரியத்துடன் இருப்பாள். 'தர்ம துரை' பாடல்களைக் கேட்க அக்கா வீட்டுக்குப் போவேன். இந்தப் பாடல் வரும்போது மட்டும் அக்கா தன்னிச்சையாக வெட்கப்பட்டுச் சிரிப்பாள். அந்தப் புன்னகையைத் தவிர, யூடியூபில் எல்லாம் கிடைக்கும்.