"ஒரு துறையை பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்கும்பட்சத்தில், நாம் AI-ஐ கண்டு பயப்படவும் தேவை இல்லை...அது நம் வேலையையும் பறிக்காது" என்று ஐ.ஐ.டி மெட்ரஸின் இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.
‘Responsible AI for India’-ன் தொடக்க விழாவில் ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குனர் காமகோடி, "AI தொழில்நுட்பத்திற்கு ஒரு பொறுப்பை கொடுத்து, அது தரும் வெளியீட்டிற்கான காரணங்களை ஆராயும் படிநிலையில் தற்போது நாம் உள்ளோம்.

AI-ன் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதுப்போல, அதில் உள்ள தகவல் கசிவு, பாராபட்சமான தகவல்கள் போன்ற அபாயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் ஐ.ஐ.டி மெட்ராஸ் பொறுப்பான மற்றும் சரியான AI வளர்ச்சிக்காக Centre for Responsible AI (CeRAI) என்ற ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. இந்த மையத்திற்கு கூகுள் 10 லட்சம் டாலர்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" என்று பேசினார்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தலைமைச் செயலதிகாரி அபிஷேக் சிங் பேசியதாவது, "ஒவ்வொரு நாளும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் AI-ஐ பயன்படுத்தி வருகிறோம். சமுதாய பிரச்னைகள், மருத்துவம், கல்வி, விவசாயம் போன்றவைகளில் AI-ஐ பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை கொள்கைகள் வகுப்பவர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பணிபுரிபவர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்" என்று கூறினார்.
CeRAI மையத்தின் தலைவர் ரவீந்திரன், "மருத்துவம், தயாரிப்பு, வங்கி போன்ற துறைகளில் பயன்படுத்தக்கூடிய AI விளக்கமானதாகவும், புரிந்துக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்" என்று பேசினார்.