
அபத்தமான ஆன்லைன் கேம்ஸ்... ஆபத்தாகும் தொழில்நுட்பம்!
எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்ட இன்றைய சூழலில், குழந்தைகளின் விளையாட்டும் விதி விலக்கல்ல.... ஆன்லைனில் குழந்தைகள் விளையாடு வதற்கென `மேக் ஓவர் கேம்ஸ்' என்ற பட்டியலில் எக்கச்சக்கமான கேம்ஸ் உள்ளன. இவற்றில் பெண் களுக்கு எதிரான ஆணாதிக்க சிந்தனைகள் வெளிப் படுகின்றன. இந்த கேம்ஸில் வரும் பெண் கதா பாத்திரங்கள் தங்களை ஆண்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொள்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பெண்களின் உடலமைப்பும் இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு பெண் தன் காதலனுடன் தெருவில் நடந்து கொண்டிருக்கிறாள். அப்போது இன்னொரு பெண் இருவரையும் கடந்து செல்கையில், காதலன் வாயில் எச்சில் வடிய, முன்செல்லும் பெண்ணை பின் தொடர்வான். இதைக்கண்ட காதலி, ஆணின் கவனத்தை தன் பக்கம் இழுக்க தன்னை அழகுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வாள். அவள் அழகுபடுத்திக்கொள்ள உதவுவதே விளையாட்டு. இந்த கேம், ஓர் ஆண் தன் இணை யுடன் இருக்கும்போதே வேறொரு பெண்ணை பார்ப்பதை ஆதரிக்கிறது. பெண் வாழ்க்கைப்பயணத்தில் தன் இணையை அழகால் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிற்போக்குத் தனமான கருத்தை குழந்தைகள் மத்தி யில் விதைக்கிறது.
இன்னொரு மேக் ஓவர் கேமில், ஆணும் பெண்ணும் காதலுறவில் ஈடு படுகின்றனர். எதிர்பாராதவிதமாக பெண் கருவுறுகிறாள்; குடும்பம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. காதலித்த வனோ இவள் அழுக்காக இருக்கிறாள் என்று புறக்கணிக்கிறான். இதனால் பெண் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவும், அழகாக்கிக் கொள்ளவும் முயற்சி செய்கிறாள். இந்த கேமை உற்றுநோக்கினால் காதலுறவில் இருந்தபோது
அழுக்கானவள் என்று ஆணுக்குத் தெரியாதா என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. முட்டாள்தனமான காரணத்தைச் சொல்லி பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஆணைச் சாடவில்லை. மாறாக, பெண் தன்னை அழகுபடுத்திக் கொள்வதே தீர்வு என்ற மோசமான கருத்தை இந்த கேம் விதைக்கிறது.

பெண்ணுடலின் முடி வளர்ச்சியை இழிவுப்படுத்தும் காட்சியும் மேக் ஓவர் கேம்ஸில் இடம்பெறுகிறது. பெண் என்பவள், ஆணை கவரும்படி அலங்கரித்துக் கொள்ளும் விளையாட்டுகளே மேக் ஓவர் கேம்ஸில் உள்ளன.
இதுகுறித்து மக்கள் தொடர்பு ஆலோசகரும் குழந்தைகள் நல ஆர்வலருமான ரோடா அலெக்ஸிடம் பேசினோம்...
“மேக் ஓவர் கேம்ஸை பெண் குழந்தைகள் தான் அதிகமாக விளையாடுகின்றனர். இதை விளையாடும் பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் அழகைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் போகலாம். இந்த கேம்ஸ் பெரும்பாலும் வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்டவை. அதனால் மேற் கத்திய கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. இவற்றை வடிவமைத்தது ஆண்களாகத் தான் இருக்க முடியும். இந்தியாவாக இருந்தாலும், வெளிநாடுகளாக இருந்தாலும், பெண் அழகியல் பண்டமாகவே பார்க்கப்படுகிறாள். இதனுடைய வெளிப்பாடே இதுபோன்ற கேம்ஸ்.

மேக் ஓவர் ஆன்லைன் கேம்ஸைவிட அவற்றுக்கான விளம்பரங்கள் மிகவும் ஆபத்தானவை யாக இருக்கின்றன. நிறைய பேர் பதிவிறக்க வேண்டும் என்பதற்காக பிற்போக்குத் தனங்களை குழந்தைகள் மத்தியில் திணிக்கின்றன. பெண் என்பவள் அறிவு, சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் சிறப்பாக இயங்கக் கூடியவள் என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்றார்.
தொழில்நுட்பம் மனித சமூகத்தின் வளர்ச்சி யின் அடையாளம். ஆனால் அது சமூகத்தின் மனநிலையில் முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதிலும் பழைமைவாதத்தைத் திணித்து பெண்களை இழிவுபடுத்துவதை இப்போதே சரி செய்ய வில்லை என்றால் காலத்துக்கும் பெண் மீதான ஒடுக்குமுறை தொடரும்.