
கேட்ஜெட்ஸ்-2
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான குவால்காம் தனது புதிய மொபைல் சிப் (Mobile Chip) ஒன்றை, கடந்த நவம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தியது. அந்த சிப்பானது என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது? முந்தைய சிப்களைவிட எந்தெந்த வகையில் எல்லாம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.
அதற்குமுன் கேட்ஜெட்ஸில் ஏன் நாம் சிப்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்புதான். தெரிந்தோ தெரியாமலோ - மொபைல் மற்றும் லேப்டாப்கள் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்துவிட்டன. இதுவரை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி இருக்காத மக்களையும், குழந்தைகளின் கல்விக்காகப் புதிதாக ஸ்மார்ட்போன்களை வாங்க வைத்துவிட்டது கொரோனா. இப்போது ஸ்மார்ட்போன் என்பது நாம் வசதிக்குப் பயன்படுத்தும் விஷயம் இல்லை, அது அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாக மாறி வருகிறது. அப்படி இருக்கும்போது நமக்கான ஸ்மார்ட்போனைச் சரியாகத் தேர்ந்தெடுக்கத் தெரிந்து கொள்வதும் ஓர் அத்தியாவசியத் தேவைதான். ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுக்கும்போது, அது என்ன ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது என்பதையும் முக்கியமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தச் சமயத்தில் புதிதாக தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ப்ராசஸர் என ஒரு சிப்பை வெளியிட்டிருக்கிறது குவால்காம் நிறுவனம். இந்த ஃப்ளாக்ஷிப் சிப்பில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன எனப் பார்த்து விடுவோம். இனி வரும் வாரங்களில் என்னென்ன ப்ராசஸர்கள் இருக்கின்றன, அதனை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
குவால்காம் தனது புதிய ப்ராசஸருக்கு ‘ஸ்நாப்டிராகன் 8 ஜென் 1’ (Snapdragon 8 Gen 1) எனப் பெயரிட்டிருக்கிறது. இந்தப் ப்ராசஸரானது அதிவேக 5G நெட்வொர்க்கைக் கையாளும் வசதியுடன் வருகிறது. அதாவது, இந்த ப்ராசஸரின் மூலம் 10GB அளவுக்கு வேகமாகத் தகவல்களைத் தரவிறக்கம் செய்ய முடியும் (ஆனால், அதற்கு அதிவேக நெட்வொர்க்கை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்). மேலும் 3.6GBPS அளவிற்கு அதிவேக வை-ஃபையையும் பயன்படுத்திக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய சிப்.
போட்டோகிராஃபிக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறது இந்த குவால்காம். இதனால் இந்த சிப்புடன், நல்ல கேமராவை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வழங்கினால் கேமரா குவாலிட்டி சிறப்பாக இருக்கும். இதுவரை போட்டோக்களுக்கு மட்டுமே Bokeh Effect வசதியை வழங்கி வந்தன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். ஆனால், இந்த சிப்பின் மூலம் வீடியோக்களுக்கும் Bokeh Effect வசதியை வழங்கும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது குவால்காம். இந்த சிப்பைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் கேமராவானது எப்போதும் பயன்பாட்டிலேயே இருக்கும் ‘Always On’ வகையில் வடிவமைத்திருக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது குவால்காம். ஏற்கெனவே, மொபைல் மற்றும் கணினியினால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டிருக்க, இந்த அம்சம் தேவைதானா எனக் கேள்விகள் எழுந்தன. இந்த வசதியே பாதுகாப்புக்காகத்தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் வேற்று நபர்களிடம் நம்முடைய மொபைல் சென்றால் தானாகவே லாக் ஆகி விடும் என விளக்கம் அளித்திருக்கிறது குவால்காம். மேலும், வேண்டாம் என்றால் இந்த வசதியை ‘ஆஃப்’ செய்தும் வைத்துக் கொள்ளலாமாம்.
இந்தப் புதிய ப்ராசஸரின் AI-யை நிறையவே மேம்படுத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம். கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களை ப்ராசஸ் செய்வது, சிறப்பான புகைப்படங்கள் எடுக்க உதவுவது, நமது மொபைலுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை முக்கியமானது எது எனக் கண்டறிந்து அதனை வரிசைப் படுத்துவது, முக்கியமாக உடல்நலம் சார்ந்தவற்றையும் ட்ராக் செய்யும் வகையிலும் இதன் AI-யை மேம்படுத்தியிருக்கிறது குவால்காம். உடல்நலமின்மை காரணமாக ஒருவர் இருமினார் என்றால், அதனை உடனடியாகக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் இதன் AI செயல்படுமாம். இதை எந்த வகையில் நம்முடைய பயன்பாட்டுக்கு வரப்போகிறது என்பது, இந்தச் சிப்பைப் பயன்படுத்தி மொபைல் வெளியாகும்போது தெரிந்துவிடும்.


சிறப்பான ஒலி அனுபவம் மற்றும் வசதிகளைக் கொடுப்பதற்காக புளுடூத் 5.2 மற்றும் குவால்காம் aptX லாஸ்லெஸ் டெக்னாலஜி ஆகியவற்றை இந்த சிப்பில் பயன்படுத்தியிருக்கிறது குவால்காம். இதனால் ஸ்மார்ட்போனில் ஒலியின் தரம் சிறப்பாக இருக்கும். மேலும், முதன்முறையாக புளுடூத் LE ஆடியோ வசதியை இந்த சிப்பில் அறிமுகம் செய்கிறது குவால்காம். நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ஆடியோ சாதனங்களின் அடுத்த கட்டமாக இந்த LE ஆடியோ இருக்கும்.
பாதுகாப்பிலும் சில மேம்பாடுகளைச் செய்திருக்கிறது குவால்காம். நமது தரவுகள் பாதுகாப்பாக இருப்பதற்கு, வால்ட் போன்ற ஒரு கட்டமைப்பும் இந்தச் சிப்பில் இருக்கிறதாம். முதல்முறையாக ஆண்ட்ராய்டு ரெடி SE வசதியை இந்தச் சிப்பில் கொடுத்திருக்கிறது குவால்காம். இதன் மூலம் நம் ஆவணங்களையும் பிற விஷயங்களையும் டிஜிட்டலாகப் பாதுகாப் பாக வைத்திருக்கவும் பயன்படுத்தவும் முடியும். தனியாக ஒரு சிம்மைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்றி ப்ராசஸரிலேயே iSIM-ஐ கொடுத்திருக்கிறது குவால்காம். இதன் மூலம், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தனி சிம் அவசியம் இன்றி இதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
மொபைல் கேமர்கள் இப்போது அதிகமாகி விட்டார்கள். கேமிங் சந்தையும் கணிசமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. இனி வரும் ப்ராசஸர்கள் கேமிங்குக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தால் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், இந்த ப்ராசஸரில் கேமிங்குக்கும் முக்கியத்துவம் கொடுத்து கேமிங் பெர்ஃபாமன்ஸை அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது குவால்காம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரத்தில், இந்த ப்ராசஸரைப் பயன்படுத்தி புதிய மொபைல் ஒன்று வெளியாகியிருக் கலாம். ஷாவ்மி நிறுவனம் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் மொபைலில் இந்த ப்ராசஸரைப் பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடவிருப்பதாக அறிவித்திருந்தது. இனி வரும் சாம்சங், சோனி உள்ளிட்ட சில நிறுவனங்களும் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் மொபைல்களில் இந்த ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரைப் பயன்படுத்தலாம். இந்தப் புதிய ப்ராசஸர் பயன்படுத்துவதற்கு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.