2020-ல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் கூறி 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு.
அதில் இந்தியாவில் பிரபலமாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, ஹலோ, வீசாட், யூசி ப்ரௌசர் போன்ற பல செயலிகள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து தடை செய்யப்பட்ட செயலிகள் செயலிகளில் பலவும் மீண்டும் வேறு பெயரில் ரீபிராண்டிங் செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவில் வெளியிடப்பட்டன. பலர் இந்தத் தடை செய்யப்பட்ட செயலிகளை 'VPN' போன்ற வழிமுறைகளின் மூலம் பயன்படுத்தி வந்தனர்.

அதில் குறிப்பாக 'PUBG' எனும் விளையாட்டுச் செயலி பலராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வந்தது. மத்திய அரசின் தடைக்குப் பிறகு, இதே போன்ற செயலி ரீபிராண்டிங் செய்யப்பட்டு வேறு பெயரில் 'BGMI' எனப் பிரபலமாக அறியப்படும் 'Battlegrounds Mobile India' என்று வெளியிடப்பட்டது. ஆக்ஷன், போர்க்களம், துப்பாக்கிகள் என ஆக்ரோஷமான விளையாட்டுச் செயலியான இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், இந்தச் செயலியும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் பிறகு வெவ்வேறு வகையில் 'VPN' மூலம் பலரும் இதை விளையாடி வந்தனர். நாளடைவில் இதன் மீதான தாக்கம் குறைந்து ஏராளமானோர் இதை விளையாடுவதைக் கைவிட்டனர்.
இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு மீண்டும் ஆப் ஸ்டோர்களுக்குத் திரும்புகிறது இந்த 'BGMI'. கடந்த வெள்ளிக்கிழமை 'BGMI'-யின் கேம் டெவலப்பர் நிறுவனமான 'Krafton' இது தொடர்பாக, "விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் இரண்டிலும் 'BGMI'-யின் ஆப் பயனர்களுக்குக் கிடைக்கப் பெறும்" எனக் கூறியுள்ளது. இருப்பினும், iOS சாதனங்களில் இதை இன்னும் காண முடியவில்லை. 'BGMI'-யின் அதிகாரபூர்வ பக்கங்களின் மூலம் ஆண்டிராய்டில் இவை கிடைப்பதாகவும் ஆனால், பயன்படுத்துவதில் பிரச்னைகள் இருப்பதாகவும் பலர் கூறிவந்தனர். இதையடுத்து விரைவில் இந்தப் பிரச்னைகள் சரி செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

போர், துப்பாக்கி என இளைஞர்களைத் தவறான போக்கிற்கும், ஆக்ரோஷமான மன நிலைக்கும் தள்ளுவதாக இந்த வகையான விளையாட்டுச் செயலிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேசமயம், இது சாதாரண விளையாட்டு செயலிதான். இதை நாம்தான் சரியாகக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
போர், துப்பாக்கிகள் நிறைந்த இதுபோன்ற ஆக்ரோஷமான விளையாட்டுச் செயலிகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவது குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.