`ChatGPT' தொழில்நுட்பம் டெக் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. டிஜிட்டல் கார்ட்டூன்கள் வரைவது, கட்டுரைகள் எழுதுவது, போலியான வீடியோக்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவது எனப் பல கிரியேட்டிவான வேலைகளை இந்த `AI' தொழில்நுட்பம் எளிதாகச் செய்து வருகிறது.
இதில் பல நன்மைகள் இருந்தாலும், இந்த 'ChatGPT' தொழில்நுட்பத்தால் பல்வேறு ஆபத்துகள் இருப்பதாகவும், இதன் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ரஷ்யா, சீனா, தென் கொரியா, கியூபா, ஈரான், சிரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இதன் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்துள்ளன.

இந்நிலையில் சீனாவில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமடைந்து உயிரிழந்திருப்பதாகப் போலியான வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்த வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணக் காவல்துறை இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தியுள்ளது. அதில், இந்த வீடியோவை 'Baijiahao' என்ற பிரபல இணையதளம் வெளியிட்டிருப்பதாகவும், இதைக் குறுகிய நேரத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், 'ஹாங்' என்று அறியப்படும் நபர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் காவல்துறை ஹாங்கைக் கண்டுபிடித்து அவரது வீட்டையும், கணினியையும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், ஹாங், 'VPN' செயலியைப் பயன்படுத்தி 'ChatGPT' மூலம் இந்த ரயில் விபத்து வீடியோவை உருவாக்கியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
சீன அரசு, இது போன்ற தவறான செய்திகளைப் பரப்புவதைத் தடுக்க 'Deep Synthesis' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற குற்றங்களைக் கண்டறிந்து வருகிறது. இந்தக் குற்றங்களுக்கு சுமார் பத்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், `AI' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக, சீனாவில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்றும் அறியப்படுகிறது.
'AI' தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இந்த நவீனக் காலத்தில் பல போலியான செய்திகள் மற்றும் சித்திரிக்கப்பட்ட வீடியோக்கள் பரவத் தொடங்கியுள்ளன. டெக்னாலஜி துணையுடன் வளர்ந்து வரும் இந்தக் குற்றங்களைத் தடுக்க சீனா போல உலகெங்கிலுமுள்ள பல நாடுகள் பிரத்யேக சட்ட வரையறைகளைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சீனாவும் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.