
உலகின் பல்வேறு இடங்களில் நூலகங்கள் மூடப்படும்போது, அரிய நூல்களை Internet Archive-க்கு வழங்குகிறார்கள். அவற்றை வாங்கி ஸ்கேன் செய்து டிஜிட்டல் நூல்களாக இங்கு ஆக்குகிறார்கள்.
``கால இயந்திரத்தில் ஏறிப் பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டபோது, ‘‘ஜூலியஸ் சீஸர் `அலெக்ஸாண்ட்ரியா நூலக’த்தை எரிக்க விட்டிருக்க மாட்டேன்'' என்றார் அறிவியலாளரும் எழுத்தாளருமான கார்ல் சாகன். பண்டைக் காலத்தில் உலகின் அறிவுத் தலைநகராக இருந்த அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரியாவில் அன்று எரிந்த பாப்பிரஸ் தாள்களுடைய சாம்பலின் நாற்றம் பிரெஞ்சுப் புரட்சியின்போதும், ஆதி அமெரிக்க வரலாற்றிலும், உலகப் போர்களிலும், நமக்கு அருகில் நடந்த ஈழப் போரிலும் வீசியது. ஒரு நகரத்தை அழிக்கும்போது மனிதர்களைக் கொல்வதைப் போல, அவர்கள் வாழ்ந்த வாழ்வைக் கொல்ல நூலகங்களையும் அழித்தார்கள் எதிரிகள். ‘‘நூல்களை எரித்து நூலகங்களை அழித்ததுபோல, இப்போது இணையத்திலும் ஓர் அழிப்பு முயற்சி நடக்கிறது'' என்று வருந்துகிறார்கள் ஆராய்ச்சி மாணவர்கள் பலர். அவர்கள் சொல்வது, ‘Internet Archive' சர்ச்சை பற்றியது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 26 ஆண்டுகளுக்கு முன்பு ப்ருஸ்டெர் கேல் உருவாக்கிய அமைப்பு ‘Internet Archive.' (https://archive.org/). காப்புரிமை இல்லாத கிளாசிக் எழுத்துகளை டிஜிட்டலில் சேகரித்து, இலவசமாக வாசகர்களுக்கு இணையத்தில் வழங்கிய முன்னோடி டிஜிட்டல் நூலகம் இது. மாணவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் என்று பலருக்கு சர்வதேச நூல்களைப் படித்து அறிய வேண்டிய தேவை இருக்கிறது. சிறிய நகரங்களில் இருக்கும் நூலகங்களிலோ, சின்னச் சின்னக் கல்வி நிலையங்களிலோ இவை கிடைக்காது. பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இவற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அறிவுத் தேடலின் சாளரமாக விளங்குகிறது ‘Internet Archive.'
இதைத் தொடங்கிய கேல், ஒரு நூலகக் காப்பாளர். அவர் ஒரு நூலகம் எப்படிச் செயல்படுகிறதோ அதை டிஜிட்டல் உலகிலும் அறிமுகம் செய்ய முடிவெடுத்தார். ‘‘எந்த அறிவுப் பொக்கிஷமும் ஒரே இடத்தில் தேங்கிவிடக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அறிவை அணுகுவதை எளிதாக்க வேண்டும். இது அனைவரையும் சமமான குடிமக்களாக மாற்றும்'' என்கிறார் அவர்.
Internet Archive-வில் சுமார் 38 மில்லியன் புத்தகங்கள், 15 மில்லியன் ஆடியோ பதிவுகள் மற்றும் 9.8 மில்லியன் வீடியோக்கள் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. இதன் சேகரிப்பில் உள்ள யாவும் உலக நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் உட்பட பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்டவை. உலகில் எங்கிருந்தும் எவரும் இவற்றை இலவசமாகப் பெற வேண்டும் என்பதே நிறுவனத்தின் குறிக்கோள்.
உலகின் பல்வேறு இடங்களில் நூலகங்கள் மூடப்படும்போது, அரிய நூல்களை Internet Archive-க்கு வழங்குகிறார்கள். அவற்றை வாங்கி ஸ்கேன் செய்து டிஜிட்டல் நூல்களாக இங்கு ஆக்குகிறார்கள். ஒரு நாளுக்கு 1,000 பக்கங்கள் ஸ்கேன் செய்து ஆரம்பித்த இந்தப் பணி, இன்று நாளுக்கு 100 புத்தகங்கள் என வளர்ந்திருக்கிறது. இதில் பணிபுரிவோர்கள் எல்லாம் தன்னார்வலர்கள் என்கிறார் ப்ருஸ்டெர் கேல். Internet Archives-ன் மற்றொரு மிக முக்கியமான பங்களிப்பு, அதன் Wayback Machine. அது உலகளாவிய இணையதளங்களின் டிஜிட்டல் அருங்காட்சியகம் எனச் சொல்லலாம். ஒரு அருங்காட்சியகம் எப்படி கைவிடப்பட்ட பழைய பொருள்களைப் பாதுகாக்கிறதோ, அதுபோல கைவிடப்பட்ட பழைய இணையதளங்களைக் காக்கிறது Internet Archive. இது தற்போது ஆன்லைனில் இல்லாத இணையதளங்களை அணுகுவதற்கு உதவுகிறது. இப்படி இதுவரை 806 பில்லியன் வலைப்பக்கங்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.
Internet Archive கிட்டத்தட்ட நிகழ் உலகில் ஒரு நூலகம் எப்படிச் செயல்படுகிறதோ அதை டிஜிட்டல் உலகில் செயல்படுத்துகிறது. இது வாசகர்களை Internet Archive-வின் தளத்தில் உள்ள டிஜிட்டல் புத்தகத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குப் படிக்க அனுமதிக்கிறது. அந்நேரத்தில் மற்றொரு வாசகர் அப்புத்தகத்தைப் படிக்க இயலாது. மேலும் வாசகர்கள் அதைப் பதிவிறக்கம் செய்யவோ, நகல் எடுக்கவோ முடியாது. Internet Archive ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம். முழுக்க முழுக்க மக்கள் அளிக்கும் நிதியில் இது இலவச சேவையைச் செய்துவருகிறது.
ரெஃபரன்ஸ் புத்தகங்களையும் தகவல்களையும் தேடும் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மாணவர்கள் பலருக்குமான அறிவியந்திரமாக இது இருக்கிறது. அப்படிப்பட்ட டிஜிட்டல் நூலகம் தற்போது இழுத்து மூடப்படுகிற சட்ட சிக்கலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி, நூலகங்கள் என அனைத்தும் காலவரையின்றி பூட்டப்பட்டன. அந்நேரத்தில் வழக்கமான Controlled Digital Lending திட்டத்தை மாற்றி எப்போது வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் படித்துக்கொள்ள வசதியாக ‘National Emergency Library’ என்ற Open access திட்டத்தை அறிமுகப்படுத்தியது Internet Archive. ஆன்லைனில் கிடைக்காத 14 லட்சத்துக்கும் அதிகமான டிஜிட்டல் புத்தகங்களை இலவசமாக வழங்கியது.

இது தங்கள் காப்புரிமையையும் விற்பனையையும் பாதிப்பதாக ஹார்பர் காலின்ஸ், பென்குயின் ரேண்டம் ஹவுஸ், விலே மற்றும் ஹச்செட் ஆகிய நான்கு பெரிய பதிப்பகங்கள் வழக்கு தொடர்ந்து Internet Archive-வை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தன. இதன் விளைவாக 2020 ஜூனில் National Emergency Library மூடப்பட்டது. இந்தச் சட்டப் போராட்டத்தின் முடிவில் தீர்ப்பு பதிப்பாளர்களுக்கு ஆதரவாக வந்தது. அது மட்டுமல்லாமல் Internet Archive செயல்படவே தடை விதிக்கப்படும் வகையில் தீர்ப்பு வந்தது. இது மற்ற டிஜிட்டல் நூலகங்களையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
‘‘பள்ளி, கல்லூரிகள், நூலகங்கள் என எல்லாம் மூடப்பட்டு, யாரும் வெளியில் செல்ல முடியாத காலகட்டத்தில் ஒரு நூலகமாக புத்தகங்களைப் பெற்று அவற்றைக் கடனாக வழங்கினோம். எழுத்தாளர்களிடம் புத்தகத்துக்கான தொகையைக் கொடுத்தே இதைச் செய்தோம். அந்த எழுத்தாளருக்கும், பதிப்பாளருக்கும் இக்கட்டான நேரத்தில் புத்தகத்தை வெளியே சேர்ப்பதற்கான ஒரு முறையாகவும் இது இருந்தது. ஆனால் பதிப்பாளர்கள் இப்போது அந்த லட்சக்கணக்கான டிஜிட்டல் புத்தகங்களை அழிக்க வேண்டும் என்று கோருகின்றனர்’’ என்கிறார் கேல்.

பதிப்பாளர்கள் எதிராக நிற்கும் இந்தத் தருணத்தில், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் Internet Archive-வின் பக்கம் நிற்கிறார்கள். Battle for Libraries என்றொரு தளத்தினை உருவாக்கி ஆதரவு எழுப்பி வருகிறார்கள். Internet Archive-வின் காரணமாக புத்தகங்களின் விற்பனை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்பது அவர்களின் வாதம். ‘‘டிஜிட்டல் நூல்களை அச்சு நூல்களைப் போலவே பாதுகாப்பது முக்கியம். லட்சக்கணக்கான முக்கியமான நூல்களைப் பாதுகாத்துவருகிறது Internet Archive. இந்த வகையான பரவலாக்கப்பட்ட அணுகுமுறை புத்தகங்களை மேலும் மீள்தன்மையடையச் செய்கிறது, அவற்றைப் பொதுமக்களுக்குக் காலம் கடந்தும் கிடைக்கச் செய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்’’ என்கிறார்கள் அவர்கள்.
‘‘நம் சமூகத்தின் நிகழ்கால நூலகங்களிலிருந்து கோடிக்கணக்கான புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. இனியும் அந்த நிலை வரக்கூடாது என்று பலவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். டிஜிட்டல் நூலகம் அழிக்கப்பட்டால் அதன் விளைவைப் பற்றி என்னால் யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை’’ என்கிறார் கேல்.
அலெக்ஸாண்ட்ரியாவில், யாழ்ப்பாணத்தில் அன்று எரிக்கப்பட்ட நூல்களுடைய சாம்பலின் வாசம் டிஜிட்டல் தாள்களிலும் வீசப்போகிறதா?