கட்டுரைகள்
Published:Updated:

பிரிடேட்டர்... குவாட்ரீம்... காக்நைட்! - அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...

அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...

மத்திய அரசின் சீக்ரெட் பிளான்?

இந்திய அரசியலில் கடந்த ஆண்டு பெரும் புயலைக் கிளப்பியது பெகாசஸ் விவகாரம். இந்த நிலையில், `பிரிடேட்டர்’, (Predator) `குவாட்ரீம்’ (QuaDream), `காக்நைட்’ (Cognyte) ஆகிய மூன்று புதிய உளவு மென்பொருள்களில் ஏதேனும் ஒன்றை வாங்குவதற்கு மத்திய அரசு முன்வந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களை மத்திய பா.ஜ.க அரசு உளவு பார்த்ததாக வெளியான குற்றச்சாட்டுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், புதிய உளவு மென்பொருள்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் கசிகின்றன.

அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...
அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...

குவாட்ரீம் எனும் ஸ்பைவேர் ஐபோன், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அனைத்து வகை செல்போன்களிலும் ஊடுருவி உளவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, பயனாளிகளின் செல்போன்களிலுள்ள தரவுகள், அதன் கேமராக்களைக்கூட ஹேக் செய்துவிட முடியும் என்கிறார்கள் சைபர் வல்லுநர்கள். அமெரிக்க அரசு இந்த ஸ்பைவேரைத் தடைசெய்த ஒன்றாகவே அறிவித்திருக்கிறது.

‘பிரிடேட்டர்’ எனும் ஸ்பைவேர்... செல்போனிலுள்ள மெசேஜ்கள், படங்கள், பாஸ்வேர்டுகள்,கேமரா, மைக்ரோபோன் உட்பட அனைத்தையும் வேவு பார்க்கக்கூடியது. இது செல்போன்களில் இருப்பதைக் கண்டுபிடித்து, நீக்குவதே கடினமானது. மேலும் தவறான செய்திகளையும், ஆபத்தான லிங்க்குகளையும் பயனாளர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வண்ணம் செல்போன் திரையில் பாப்-அப் செய்வதையும் பிரிடேட்டர் செய்யும். இதன் மூலம் இயக்கத்தில் இல்லாதபோதும் செல்போன் மைக் வழியாகப் பயனாளிகள் பேசுவதை ஒட்டுக்கேட்க முடியும் என்கிறார்கள்.

அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...
அச்சுறுத்தும் புதிய உளவு மென்பொருள்கள்...

‘காக்நைட்’ ஸ்பைவேர்... இ-மெயில் தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்த ஸ்பைவேர். இந்த ஸ்பைவேர் மூலமாக, போலியான ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, அதன் வாயிலாக 50,000 ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டா திருடப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. `காக்நைட்’ ஸ்பைவேர் மூலமாக மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறி காக்நைட் மென்பொருளின் பயன்பாடுகளை நார்வே நாடு நிறுத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜனநாயக நாடு, தனிமனித உரிமைகளைக் கபளீகரம் செய்யும் இது போன்ற உளவு மென்பொருள்களை ஏன் வாங்க வேண்டும் என்று பலதரப்பினர் கேள்வியெழுப்பிவருகின்றனர். இந்தச் செயல், இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையலாம் என சர்வதேசச் செய்தி நிறுவனங்களும் எச்சரித்துவருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து, எதிர்க்கட்சிகளின் வியூகங்களை அறியவும், பொதுமக்களின் மொபைல்போன் வழியாக அவர்கள் தகவலைத் திருடவுமே மத்திய பா.ஜ.க அரசு இந்த உளவு மென்பொருள்களை வாங்குகிறது என காங்கிரஸார் குற்றம்சாட்டுகிறார்கள்.

ப்ரியன்
ப்ரியன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ‘‘இந்திய அரசு வாங்க முனைவதாகச் சொல்லப்படும் உளவு மென்பொருளுக்காகக் கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் செலவிடப்போவதாகத் தெரிகிறது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் குறிவைக்கப்படுகிறார்கள்” என்றார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டபோது, “ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆதாரமாகக்கொள்ள முடியாது. பிரதமர்மீதும், மத்திய அரசின்மீதும் எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாதவர்களின் பொய்ப் பிரசாரம் இது” என்றார்.