Published:Updated:

ஆப்பிள் பேஸ் ஐடி... சூப்பரா சொதப்பலா? A to Z அலசல்! #FaceID

ஆப்பிள் பேஸ் ஐடி... சூப்பரா சொதப்பலா? A to Z அலசல்! #FaceID
ஆப்பிள் பேஸ் ஐடி... சூப்பரா சொதப்பலா? A to Z அலசல்! #FaceID

வ்வோர் ஆண்டும் புதிய ஐபோன் அறிமுகமானதும் உடனே அதைத் தொடர்பான விவாதங்களும், சர்ச்சைகளும் உலகமெங்கும் துவங்கிவிடும். அப்படி இந்த முறை அதிக கவனம் ஈர்த்திருப்பது பேஸ் ஐடி (Face ID). ஃபிங்கர்பிரின்ட் மூலமாக மொபைலை அன்லாக் செய்வதற்காக இருந்த Touch ID-க்கு பதிலாக, முகத்தைக் கொண்டு மொபைலை அன்லாக் செய்ய உதவும் தொழில்நுட்பம்தான் இந்த பேஸ் ஐடி. எளிமையாகச் சொன்னால், நம் முகம்தான் மொபைலின் பாஸ்வேர்டு.

ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் 10 (iPhoneX) என மொத்தம் மூன்று ஐபோன்களை இந்த வருடம் அறிமுகம் செய்திருக்கிறது ஆப்பிள். இதில் ஐபோன் 10-ல்தான் இந்த பேஸ் ஐடி வசதி இடம்பெற்றுள்ளது. இந்த வசதி இருப்பதால் ஹோம் பட்டனையே முழுவதுமாக நீக்கிவிட்டது. பாதுகாப்பான அம்சம், மிக எளிதாக அன்லாக் செய்ய முடிவது, மற்ற ஆப்களுக்கும் பாஸ்வேர்டாக பயன்படுத்த முடிவது என ஒருபக்கம் இதனைக் கொண்டாடினாலும், இன்னொரு பக்கம் நிறைய சந்தேகங்களும் எழுகின்றன. நாம் தூங்கிக்கொண்டிருக்கும் போதும் இது வேலை செய்யுமா, யாரேனும் நம்மை மிரட்டி போனை அன்லாக் செய்துவிட்டால் என்ன செய்வது, இரட்டையர்கள் இருந்தால் எப்படி பாஸ் வேலை செய்யும் என எக்கச்சக்க கேள்விகளுடன் காத்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ். 

மேலும், ஐபோனின் அறிமுக விழாவிலேயே பேஸ் ஐடி வசதி வேலை செய்யாமல் சில நொடிகள் சொதப்ப, "ஒழுங்கா வேலை செய்யுமா செய்யாதா?" என்ற சந்தேகத்தையும் சேர்த்து பதிவு செய்துவருகின்றனர் ஆப்பிள் ரசிகர்கள். ஆனால் இந்தச் சந்தேகத்தை முற்றிலுமாக மறுத்திருக்கிறது ஆப்பிள். ஐபோன் அறிமுக நிகழ்வில் நிஜமாகவே நடந்தது என்ன? விடை இந்தக் கட்டுரையின் இறுதியில். அதற்கு முன்பு பேஸ் ஐடி தொடர்பான முக்கியமான கேள்விகள் பற்றி பார்த்துவிடுவோம்.

எப்படி இயங்கும் இந்த Face ID?

ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள் எப்படி விரல் ரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறதோ, அதைப்போலவே மனிதர்களின் முகத்தை பாஸ்வேர்டாகப் பயன்படுத்துவதுதான் இந்த பேஸ் ஐடி. அதில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வேலை செய்கிறது என்றால், இங்கே கேமரா மற்றும் சென்சார் யூனிட்கள் இணைந்து வேலை செய்யும். இதனை True Depth Camera System என அழைக்கிறது ஆப்பிள். 

ஒருவர் ஐபோன் 10-ன் முன்பு முகத்தைக் காட்டினாலே, உடனே அவர்களின் உருவம் கேமரா, டாட் புரஜெக்டர், IR சென்சார் போன்றவைகள் மூலம் துல்லியமாக ஸ்கேன் செய்யப்பட்டு, பின்னர் கணித மாதிரிகளாக மாற்றப்பட்டு 'Secure Enclave'க்கு அனுப்பப்படும். ஐபோனின் A11 சிப்பில் இருக்கும், இந்த 'Secure Enclave'-ல்தான் நம்முடைய முகத்தின் டேட்டா பதிவாகியிருக்கும். ஒவ்வொருமுறை நாம் முகத்தை மொபைலின் முன்னால் காட்டும்போதும், சென்சார் யூனிட் முகத்தை ஸ்கேன் செய்து இந்த 'Secure Enclave'க்கு அனுப்பும். இரண்டு மாதிரிகளும் ஒத்துப்போனால் மட்டுமே மொபைல் அன்லாக் ஆகும். இதுதான் பேஸ் ஐடியின் மெக்கானிசம்.

எப்போதெல்லாம் வேலை செய்யாது?

ஃபிங்கர்பிரின்ட் சென்சார்கள் அறிமுகமான சமயம் அதுதொடர்பாக எழுந்த முக்கியமான சந்தேகம், "நம்முடைய விருப்பமின்றி யாரேனும் நம் விரலை அதில் வைத்தாலோ, விரலை வைக்கச்சொல்லி வற்புறுத்தினாலோ என்ன செய்வது?" என்பதுதான். அவற்றையெல்லாம் தாண்டிதான் இன்று பத்தாயிரம் ரூபாய் மொபைல்களில் கூட வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன ஃபிங்கர் பிரின்ட் சென்சார்கள். இதே சந்தேகத்தை பேஸ் ஐடி விஷயத்திலும் கிளப்புகிறார்கள். ஆனால், நம்முடைய முகம் தெளிவாக மொபைலை உற்றுநோக்காமலோ, நேரடியாக மொபைலைப் பார்க்காமலோ, கண்ணை மூடியிருந்தாலோ பேஸ் ஐடி வேலை செய்யாது என்கிறது ஆப்பிள்.

ஆனால் மற்றபடி முகத்தில் வளரும் மீசையில் இருந்து, வயதாக வயதாக மாறும் முக அமைப்பு வரை மற்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துழைக்கும். எனவே கண்ணாடி அணிந்துகொள்ளலாம்; ஷேவ் செய்யாமல் இருக்கலாம்; தொப்பி அணிந்திருக்கலாம்; இது எதுவுமே பேஸ் ஐடியின் பணிகளைப் பாதிக்காது.

மேலும், யாரேனும் மிரட்டி முகத்தை காட்டச்சொல்வார்களே என நீங்கள் நினைத்தால், அது உண்மைதான். ஆனால் பயோமெட்ரிக் உள்பட எல்லா பாதுகாப்பு அம்சங்களிலும் இந்தக் குறை இருக்கத்தானே செய்கிறது. துப்பாக்கி மூலம் மிரட்டி, பாஸ்வேர்டை கூட வாங்கலாம் அல்லவா?

டேட்டா பாதுகாப்பாக இருக்குமா?

"நம்முடைய முகம் குறித்த தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா" என்பது அடுத்து கேள்வி. முகத்தை ஸ்கேன் செய்து அவற்றை அப்படியே பதிவு செய்வதில்லை ஐபோன். அதனை என்கோடிங் செய்துதான் மொபைலில் பதிவு செய்கிறது. எனவே அவற்றை எடுத்தாலும் கூட நம் முகத்தை மீட்டுருவாக்கம் செய்வது என்பது கடினமான வேலை. மேலும், இந்த பயோமெட்ரிக் தகவல்கள் அனைத்தும் கிளவுடில் பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக ஐபோனில் இருக்கும் சிப்பில்தான் பதிவு செய்யப்படுகின்றன. எனவே உங்கள் தகவல்களை யாரும், யாருடனும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பில்லை.

போலிகளைத் தவிர்க்குமா ஃபேஸ் ஐடி?

பேஸ் ஐடி போலவே, Facial recognition மூலமாக மொபைலை அன்லாக் செய்யும் வசதி, சாம்சங் S8-லும் இருந்தது. ஆனால் நிஜ முகத்திற்கு பதிலாக வெறும் போட்டோவைக் காட்டினாலே அன்லாக் ஆகி பல்ப் வாங்கியது சாம்சங். அதை உணர்ந்து உஷாராக களமிறங்கியிருக்கிறது ஆப்பிள். True Depth camera system புகைப்படங்களையும், போலி முகமூடிகளையும் மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் என்பதால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறது ஆப்பிள். மேலும் பிழைகளைத் தவிர்ப்பதற்காக ஒரு பில்லியன் படங்களை சோதித்துப் பார்த்துள்ளது. 

இப்படி, இத்தனை வாதங்களை ஆப்பிள் முன்வைத்தாலும், அதனை பயனர்கள் நேரில் சோதித்துப்பார்க்கும் வரையிலும் அதன் நிஜமான நிறை குறைகள் தெரிய வராது. எனவே ஐபோன் விற்பனைக்கு வந்த பின்னர்தான் பேஸ் ஐடியின் வெற்றிவாய்ப்பு குறித்து முழுமையாகத் தெரியும். ஆனால் வழக்கம்போல ஆப்பிளின் இந்த தைரியமான முடிவை வரவேற்கின்றனர் ஆப்பிள் ரசிகர்கள். 

ஆப்பிள் நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

பேஸ் ஐடி குறித்து தற்போது உங்களுக்கு விரிவாகத் தெரிந்திருக்கும். எனவே ஆப்பிள் ஐபோன் அறிமுக நிகழ்ச்சியில் ஏன் சொதப்பியது என்பதை இப்போது பார்ப்போம். ஐபோன் அறிமுக நிகழ்ச்சியில் பேஸ் ஐடி. குறித்து செய்முறை விளக்கம் அளிப்பதற்காக மேடைக்கு வந்தார் ஆப்பிளின் மென்பொருள் பிரிவின் தலைவர் கிரேக். அங்கிருந்த ஐபோனை முகத்தின் மூலமாக அன்லாக் செய்ய முயற்சிக்க, மொபைலோ அன்லாக் ஆக மறுத்தது. மாறாக "Your passcode is required to enable Face ID” எனக்காட்டியது ஐபோன். உடனே சுதாரித்த கிரேக் இன்னொரு மொபைல் மூலம் பேஸ் ஐடியை விளக்கினார். அது நன்றாக வேலை செய்தது. சில நொடிகளே நடந்த இந்த சம்பவம்தான், அடுத்த நாள் வைரலான விஷயமாக மாறிவிட்டது. உடனே 'பேஸ் டைம் சொதப்பலான விஷயம் போலயே' என்ற தோற்றமும் உருவாகிவிட்டது. ஆனால் அங்கே என்ன நடந்திருக்கும்? யோசிப்போம்.

1. முதல் விஷயம் பேஸ் ஐடி வேலை செய்யாமல் போனதும், ஐபோன் ஸ்க்ரீனில் தெரிந்த விஷயம், "Your passcode is required to enable Face ID” என்பதுதான். எனவே ஐபோன் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ரீ-ஸ்டார்ட் செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை ஐபோனை ஆன் செய்யும்போதும் 'Secure Enclave' வேலை செய்வதற்காக முதலில் பாஸ்கோட் கேட்கப்படும். ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரிலும் இதே லாஜிக்தான். அதே விஷயம் இங்கேயும் நடந்திருக்கலாம்.

2. நீண்ட நேரமாக ஐபோனை அன்லாக் செய்யாமல் இருந்தவிட்டு, பின்னர் Touch ID கொடுக்கும்போது ஐபோன் பாஸ்கோட் கேட்கும். இது பேஸ் ஐடிக்கும் பொருந்தும். எனவே நீண்ட நேரம் அந்த மொபைல் அன்லாக் செய்யப்படாமலேயே இருந்திருக்கலாம்.

3. ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் உள்ள மொபைல்களில் தவறான விரல் ரேகைகள் பலமுறை ஸ்கேன் செய்யப்பட்டால், பின்னர் மொபைலை சரியான கைரேகை கொண்டுகூட திறக்க முடியாது. முதலில் பாஸ்வேர்டு கொடுத்து அன்லாக் செய்த பின்புதான் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் வேலை செய்யும். இதுபோல அந்த ஐபோனை பலரும் எடுத்துப் பார்த்திருக்கலாம். அப்போது தவறுதலாக பேஸ் ஐடி இயங்கி, மொபைல் லாக் ஆகியிருக்கலாம். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிரேக் இரண்டாவது முறை இயக்கிக்காட்டிய ஐபோனில் பேஸ் ஐடி மிக நன்றாக இயங்கியது. பலமுறை அன்லாக் செய்யப்பட்டது. சரி, இந்த சம்பவத்திற்கு மேற்கண்ட மூன்றில் ஆப்பிளின் பதில் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? 

மூன்றாவதுதான் ஆப்பிள் தெரிவித்திருக்கும் பதில். நிகழ்ச்சிக்கு முன்னரே பலபேர் ஐபோன் 10-ஐ ஸ்வைப் செய்து பார்த்திருகின்றனர். அந்த மொபைல், அவர்களின் முகத்தை ஸ்கேன் செய்வது தெரியாமலே இதைச் செய்துள்ளனர். மேலும், அந்த போன் கிரேக்கின் முகத்தை பதிவு செய்த ஒன்று என்பதால் பலமுறை தவறான முகங்களை ஸ்கேன் செய்திருக்கிறது. இதனை கிரேக்கும் கவனிக்காமல் மேடையில் சோதிக்கவே, இறுதியாக ஐபோன் பாஸ்கோட் கேட்டது.இதில் ஐபோன் மீது எவ்வித தவறும் இல்லை. பின்னர் கிரேக் வெற்றிகரமாக அடுத்த மொபைலில் பேஸ் ஐடியை சோதித்து காட்டினார். ஆனால் இந்த சின்ன தவறு, ஆப்பிளின் புத்தம்புது ஐபோன்களை விடவும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது :-)