Election bannerElection banner
Published:Updated:

அலாவுதீன் பூதமாகத் தோன்றும் ஃப்ரன்ட் கேமரா... விவோவின் கில்லர் மொபைல்!

அலாவுதீன் பூதமாகத் தோன்றும் ஃப்ரன்ட் கேமரா... விவோவின் கில்லர் மொபைல்!
அலாவுதீன் பூதமாகத் தோன்றும் ஃப்ரன்ட் கேமரா... விவோவின் கில்லர் மொபைல்!

அலாவுதீன் பூதமாகத் தோன்றும் ஃப்ரன்ட் கேமரா... விவோவின் கில்லர் மொபைல்!

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் முன்பெல்லாம் ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகப் போகிறது என்ற செய்தி வெளியானால் முதலில் டெக்  உலகம் உற்றுநோக்குவது ஆப்பிளைத்தான். அடுத்தது சாம்சங், நோக்கியா எனப் பட்டியல் நீளுமே தவிர சீன நிறுவனங்கள் எதுவும் அந்த 'எதிர்பார்ப்பு' பட்டியலில் இருக்காது. அவர்களைப் பொறுத்தவரையில் சீன மொபைல்கள் என்றாலே அவை தொழில்நுட்பம் முதல் வடிவமைப்பு வரை முன்னணி மொபைல்களின் காப்பியாகத்தான் இருக்கும். சமீபகாலமாக இந்த வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கின்றன சீனாவைச் சேர்ந்த சில மொபைல் நிறுவனங்கள். அதிலும் முக்கியமாக விவோ!

ஆப்பிளும், சாம்சங்கும் புதிய தொழில்நுட்பங்கள் என ஏற்கெனவே அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கக் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ள துவங்கியிருக்கின்றன சீன நிறுவனங்கள். டெக் உலகில் ஆரம்பக் காலத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம், முன்பக்கம் முழுவதும் தொடு திரையைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள். அவ்வப்போது இந்த வருடம் ஆப்பிள் அறிமுகப்படுத்திவிடும், சாம்சங் அறிமுகப்படுத்திவிடும் என மக்கள் எதிர்பார்த்தாலும் யாராலும் ஒரு முழுமையான திரை கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்க முடியவில்லை. அதிலும் கடந்த வருடம் வெளியான ஐபோன் X-ல் இந்த விஷயம் அறிமுகப்படுத்தப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆப்பிளும் இந்த விஷயத்தில் ஏமாற்றத்தையே கொடுத்தது. 

முழுவதும் தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. என்னதான் வடிவமைப்பை மாற்றியமைத்தாலும் மொபைலின் முன்புறமாக இருக்கும் முன்புற கேமரா, proximity,ambient light sensor மற்றும் முன்புறமாக இருக்கும் ஸ்பீக்கர் ஆகியவற்றை இடம் மாற்றி அமைக்க முடியாது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒரு மொபைலை தயாரிக்கவும் வாய்ப்பில்லாமல் இருந்தது. எவ்வளவுதான் வடிவத்தை மேம்படுத்தினாலும் திரையின் மேல்பக்கத்தில் சிறிய அளவு இடம் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் சில சீன நிறுவனங்கள் இந்த வடிவமைப்பை மாற்ற முயற்சி செய்யத் தொடங்கின. ஷியோமி நிறுவனம் Mi Mix  சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் மாற்றம் செய்தது. கேமராவைத் திரைக்குக் கீழே கொடுத்து, ஸ்பீக்கரை சிறிய அளவில் வடிவமைத்திருந்தது. இது நன்றாக இருந்தாலும் முன்புற கேமராவில் படம் எடுக்க வேண்டுமென்றால் மொபைலை தலைகீழாகத் திருப்ப வேண்டியிருந்தது. இந்நிலையில்தான் APEX என்ற கான்செப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது விவோ (Vivo) நிறுவனம். இதன் மூலமாக டெக் உலகைத் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. APEX மொபைலின் வடிவமைப்பு பெரிய அளவில் வரவேற்பபை பெற்றுள்ளது. 

APEX ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்?

இந்த மொபைலில் முன்புறம் முழுவதுமே டிஸ்ப்ளேதான். ஏற்கெனவே திரைக்கு அடியில் ஃபிங்கர்பிரின்ட் இருந்து இயங்கக்கூடிய ஸ்கேனரைத் தனது ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியிருந்தது விவோ. அதை இந்த ஸ்மார்ட்போனில் சற்று மேம்படுத்தியிருக்கிறது. இதன் டிஸ்ப்ளேவில் பாதிக்கு மேல் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்தான். திரையில் கீழ்ப்பகுதியில் விரல்களை எங்கே வேண்டுமானாலும் வைத்து மொபைலை அன்லாக் செய்து கொள்ளலாம். அடுத்தது proximity, ambient light sensor போன்ற அனைத்து சென்சார்களும் திரைக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற மொபைல்களில் இருக்கும் சாதாரண ஸ்பீக்கர் இதில் கிடையாது, அதற்குப் பதிலாக அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமாக ஒலிகளைக் காதுகளுக்கு கடத்துகிறது. எல்லாம் சரி... முன்புற கேமராவை என்ன செய்வது என்பதை யோசித்தவர்கள், அதற்கென புது வழியை உருவாக்கியிருக்கிறார்கள்.

போனின் மேலே உட்பகுதியில் கேமராவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு தேவைப்படும்போது வெளியே வரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது  APEX ஸ்மார்ட்போன். மொபைலின் உள்ளே மறைந்திருக்கும் கேமரா 0.8 நொடிகளில் வெளியே வரும் என உறுதியளிக்கிறது விவோ நிறுவனம். 5.99-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக்கொண்டிருக்கும் இது இதுவரை வெளியானதிலேயே அதிக டிஸ்ப்ளே பரப்பைக் கொண்ட ஸ்மார்ட்போனாகக் கருதப்படுகிறது. தற்பொழுது கான்செப்ட் ஸ்மார்ட்போனாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கும் விவோ நிறுவனம் இதில் சில மாற்றங்களைச் செய்து விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு