Published:Updated:

``Winner winner chicken dinner!” - #PUBG விளையாடியிருக்கீங்களா ப்ரோ?

``Winner winner chicken dinner!” - #PUBG விளையாடியிருக்கீங்களா ப்ரோ?
``Winner winner chicken dinner!” - #PUBG விளையாடியிருக்கீங்களா ப்ரோ?

அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என PUBG பக்கா ஆக்‌ஷன் கேம் விரும்புகிறவர்களுக்கு செம தீனி

PUBG
ஒரு நாளில் நூறு விஷயங்களைச் செய்யும் ஜென் z இளைஞர்களை எங்கேயும் நகர விடாமல் இழுத்துக் கட்டியிருக்கும் புதிய டிஜிட்டல் கயிறு PUBG. இந்த மொபைல் கேமுக்குள்( Xboxலும் உண்டு) விழுந்து கிடக்கும் இளைஞர்களின் என்டெர்டெயின்மென்ட் அதோடு நிற்கவில்லை. PUBG தொடர்பான மீம்ஸ், கலாய் வீடியோ, டிப்ஸ் ஷேரிங்ஸ், ஃபேஸ்புக் க்ரூப் எனப் ``போற இடத்துல எல்லாம் ஒண்ணு கூடிடறாய்ங்கப்பா” எனச் சொல்ல வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

``நீயும் சென்னையா? நானும்” என சிநேகம் வளர்க்கும் விஷயங்களில் ஒன்றாக வைரல் ஹிட் ஆகியிருக்கும் இந்த விளையாட்டைப் பற்றி சின்ன அறிமுகம்.

 PUBG - Player's Unknown BattleGround என்பதன் சுருக்கம்தான் PUBG.

ஒரு தீவு. 100 பேரை ஒரு விமானத்தில் அந்தத் தீவுக்கு அழைத்து வருகிறார்கள். யாருக்கு எங்கு வேண்டுமோ அங்குக் குதித்து விடலாம். குதிக்கும் இடம் கடலாகவோ, தரையாகவோ, மலையாகவோ, தார்ச்சாலையாகவோ, கட்டடமாகவோ இருக்கும். குதித்தவுடன் அருகிலிருக்கும் கட்டடங்களைத் தேடி ஓட வேண்டும். அங்குதான் ஆயுதங்கள் கொட்டிக்கிடக்கும். வில் அம்புவில் தொடங்கி, மிஷின் கன்கள் வரை எல்லாமும் கிடக்கும். ஆயுதங்களில் பல ரகம் உண்டு. தோசைக்கல் கூட உண்டு. அதனால் எதிரியின் மண்டையில்ஓர் அடி போட்டால் ``செத்தான் சிவனாண்டி”தான்.

வேண்டிய ஆயுதங்களை நம் Back packல் நிரப்பிக்கொள்ள வேண்டும். எதிரில் யாரையாவது பார்த்தால் கையிலிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு அவர்களைக் கொன்றுவிட வேண்டும். டிஜிட்டல் காருண்யம் பார்த்தால் அவர்கள் நம்மைக் கொன்று நம்மிடமிருக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொள்வார்கள். இதற்கு Loot என்று பெயர். இது போதாதென அவ்வப்போது ஒரு விமானம் வந்து ஒரு பெட்டியைக் கீழே போடும். அந்த air dropல் ஜெகஜால ஆயுதங்கள் இருக்கும்.

 எல்லோரும் குதித்தவுடன் ஒரு வட்டம் போடுவார்கள். அந்த வெள்ளைக்கோட்டுக்குள்தான் இருக்க வேண்டும். அதைத் தாண்டி வெளியே போனால், ஒரு நீல நிற வட்டம் துரத்தும். அது நம் சக்தியையெல்லாம் உறிஞ்சி நம்மைக் கொன்றுவிடும். சிறிது நேரத்தில் வெள்ளை வட்டத்தின் விட்டம் குறையும். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் புதிய வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும். தூரம் அதிகம் இருந்தால் பயணம் செய்ய கார், பைக், மோட்டர் போட், ஜீப் என எல்லா வாகனங்களும் உங்களுக்கு உதவும். (12ஜி பஸ் எல்லாம் வராது). குறிப்பிட்ட நேரத்தில் வெள்ளை வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும்; எதிரிகளைப் பார்த்தால் கொன்றுவிட்டுத் தப்பிக்க வேண்டும். இதுதான் அடிப்படை. 100 பேரில் கடைசியில் யார் உயிர் பிழைத்திருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சிக்கன் டின்னர். ஆம், வெற்றி பெற்றால்  Winner winner chicken dinner என்றுதான் சொல்கிறது  PUBG.

இந்த  survival of the fittest விளையாட்டைத் தனியாக விளையாட வேண்டுமென்றில்லை. 4 பேர் கொண்ட குழுவாக அல்லது இருவராக அல்லது தனியாகவும் விளையாடலாம். 4 பேர் சேர்ந்து விளையாடினால் ஜாலியாகவும் இருக்கும்; வெற்றி பெறும் வாய்ப்பும் அதிகம். PUBG விளையாடும்போது ஹெட்ஃபோன் அவசியம். அதன் மூலம் குழுவினர் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம். நம்மைச் சுற்றி யாராவது நடந்தாலோ சுட்டாலோ சத்தத்தைக் கேட்டு உஷார் ஆகலாம்.

பஸ் ஸ்டாண்டிலோ, ரெஸ்ட்டாரன்ட்டிலோ அல்லது வேறு எங்கேயோ யாராவது ஒருவர் மொபைலை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு ``டேய்... உன் பின்னால வர்றாண்டா.. சுடுறா *** ” எனக் கத்திக் கொண்டிருந்தால் போலிஸுக்குக் கால் செய்துவிடாதீர்கள். அவர் தன் சிக்கன் பிரியாணிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

``தக்கன பிழைக்கும்”தான் கான்செப்ட். ஆனால், அதனுள் அவர்கள் ஒளித்து வைத்திருக்கும் சுவாரஸ்யங்கள் ஏராளம். அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டத் தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என பக்கா ஆக்‌ஷன் கேம் விரும்புகிறவர்களுக்கு PUBG செம தீனி. இதைத் தாண்டி எல்லா கேமிலும் இருக்கும் இதர சுவாரஸ்யங்களான டீம் அமைப்பது, பாயின்ட்ஸ் எடுப்பது, அதைச் சமூக வலைதளத்தில் ஷேர் செய்வது போன்றவையும் உண்டு. சட்டையில் தொடங்கி துப்பாக்கிவரை ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ் உண்டு. அதை நீங்கள் தொடர்ந்து விளையாடித்தான் வாங்க முடியும். உங்களுக்கான `பக்கா சொக்கா’ கிடைத்து மாட்டிக்கொண்டால், தீபாவளிக்குப் புது துணி எடுத்த ஃபீல் கொடுக்கும். அப்படி ஒரு என்கேஜிங் விளையாட்டு இந்த பப்ஜி.

PUBG விளையாட்டின் அளவு 1.4 ஜிபி. எல்லா மொபைலிலும் இதை விளையாடிவிட முடியாது. ஆனால், இதை ஏற்கும் மொபைல்கள் கிடைத்தால், பின் 3ஜி இணைய வேகத்தில் கூட சிக்கலில்லாமல் விளையாடலாம். ஒரு கேமுக்கு 5 -7 எம்பி டேட்டாதான் செலவாகிறது.
இந்த விளையாட்டைப் புரிந்துகொண்டு விட்டால் இதை விளையாடும் சுவாரஸ்யம் தாண்டி இன்னும் பல விஷயம் உண்டு. அவை மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள், Glitches videos ஆகியவை. சில மீம்ஸ் எல்லாம் விளையாட்டை விடவும் வெறித்தன என்டெர்டெயின்மென்ட் தரக்கூடும். 

4 ஜிபி ரேமுக்கு மேல் மொபைல் இருந்தால் ஒரு முறை ஆடிப்பார்க்கலாம். யாருக்குத் தெரியும்... அந்த சிக்கன் டின்னரில் உங்கள் பெயர் எழுதியிருந்தாலும் இருக்கும்.

.
 

அடுத்த கட்டுரைக்கு