Published:Updated:

நமக்கே தெரியாமல் நம் கான்டாக்ட் லிஸ்ட்டில் ஆதார் ஹெல்ப்லைன்... நடந்தது என்ன?

சமீபகாலத்தில் ஆதார் ஆணையமான UIDAI சந்திக்கும் இரண்டாவது சர்ச்சை இது!

நமக்கே தெரியாமல் நம் கான்டாக்ட் லிஸ்ட்டில் ஆதார் ஹெல்ப்லைன்... நடந்தது என்ன?
நமக்கே தெரியாமல் நம் கான்டாக்ட் லிஸ்ட்டில் ஆதார் ஹெல்ப்லைன்... நடந்தது என்ன?

டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவின் ஆதார் சேலஞ்ச் பரபரப்பு அடங்கி பத்து நாள்கள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் மீண்டும் ஆதார் ஆணையம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இத்தனைக்கும் இந்தமுறை பஞ்சாயத்து ஆதார் தகவல்கள் மீதோ, அதன் பாதுகாப்பு குறித்தோ அல்ல; ஆதார் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துதான். பல்வேறு ஸ்மார்ட்போன்களில் பயனர்களின் அனுமதியின்றி, அவர்களின் கான்டாக்ட் லிஸ்ட்டில் ஆதார் உதவி மையத்தின் தொடர்பு எண் Default-டாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பயனரின் விருப்பமின்றி இப்படி ஆதார் ஆணையம் செய்யலாமா? அப்படி செய்கிறது என்றால் எதற்காக செய்கிறது என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கு காரணம். இந்த விஷயத்தை ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ட்விட்டரில் சிலர் விவாதித்து வந்திருந்தாலும், நேற்று முன்தினம் ஹேக்கர் எனச் சொல்லப்படும் எலியட் இதுகுறித்து ட்வீட் செய்யவே விஷயம் வைரலானது. விஷயம் கேள்விப்பட்ட எல்லா நெட்டிசன்களும் உடனே, தங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டை செக் செய்யவே அதில் UIDAI கான்டாக்ட் சத்தமின்றி இருந்திருக்கிறது. உடனே எல்லாரும் அந்தப் படங்களை ஷேர் செய்யவே, விஷயம் பெரிதாகி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. உண்மையில் இது நம் பிரைவசியைப் பாதிக்கும் விஷயம்தானா?

இல்லை என்பதுதான் பதில். காரணம், இப்படி பதிவாகியிருக்கும் கான்டாக்ட்டால் நமக்கு எவ்விதத்திலும் பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை. ஆனால், எதற்காக ஆதார் ஆணையம் இப்படி செய்கிறது என்பதுதான் கேள்வியே. உதாரணமாக ஏர்டெல் அல்லது ஜியோ நிறுவனங்களின் சிம் கார்டை நம் மொபைலில் பயன்படுத்தினால் அந்நிறுவனங்கள் கஸ்டமர் கேர் எண்கள் அனைத்தும் அந்த சிம் மூலமாக நம் கான்டாக்ட் லிஸ்ட்டுடன் sync ஆகிவிடும். ஆனால், ஆதாரின் உதவி எண் எப்படி நம் மொபைலுக்குள் வந்தது என்பதுதான் இதில் இருக்கும் சந்தேகம். இதனை மொபைல் நிறுவனங்கள் செய்தனவா, டெலிகாம் நிறுவனங்கள் செய்தனவா, ஆதார் ஆணையமே ஏதேனும் உத்தரவிட்டு செய்திருக்கிறதா என்றெல்லாம் இதுதொடர்பாக விவாதங்கள் விரிவடைந்தன. ஆனால், இறுதியில் இதைச் செய்தது நாங்கள்தான் என அப்ரூவர் ஆகிவிட்டது கூகுள். இந்தப் பிரச்னை தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது.

எப்படி UIDAI எண் நம் மொபைலுக்கு வந்தது?

 இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசு 112 என்ற எண்ணை நாடு முழுவதுக்குமான எமர்ஜென்சி எண்ணாக அறிவித்தது. எனவே இந்த எண்ணை, இந்தியாவில் பயன்படுத்தும் மொபைல்களில் எமர்ஜென்சி எண்ணாகப் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆதார் உதவி மைய எண் எப்படி வந்தது என்றே யாருக்கும் தெரியாது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஆதார் ஆணையமும், "1800-300-1947 என்ற எண் ஆனது, எங்களின் பழைய எண். தற்போது இது செயல்பாட்டிலேயே இல்லை. ஆனால், இதனை Default-டாக ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதிவு செய்கிறோம் எனப் புகார் கிளம்பியிருக்கிறது. இதனை முற்றிலுமாக மறுக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 1947 என்ற எண்தான் ஆதார் உதவி மையத்தின் தொடர்பு எண்ணாக இருக்கிறது. ஆனால், தற்போது பழைய எண்ணைப் பயன்படுத்தி சிலர் குழப்பம் விளைவிக்க முயல்கின்றனர். மேலும், UIDAI ஆனது, எந்தவொரு டெலிகாம் நிறுவனத்தையோ, அல்லது மொபைல் உற்பத்தியாளரையோ, இந்த எண்ணைப் பதிவு செய்யச்சொல்லி வற்புறுத்தவில்லை." எனக் கூறியிருக்கிறது. கடைசியில் கூகுள்தான் இதனைச் செய்கிறது. 

அதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "UIDAI-யின் ஹெல்ப்லைன் எண் மற்றும் எமர்ஜென்சி ஆகிய இரண்டு எண்களையும் நாங்கள்தான் கவனக்குறைவாக ஆண்ட்ராய்டு செட்டப்பில் சேர்த்தோம். ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, அந்த இரு மொபைல் எண்கள் பதிவு செயப்பட்ட ஆண்ட்ராய்டைத்தான் வழங்கினோம். அதனால்தான் பலரது மொபைல் போனிலும் அந்த எண், Default-டாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு பிரைவசியைப் பாதிக்கும் விஷயமாகப் பார்க்கவேண்டியதில்லை. தேவைப்பட்டால் அந்த எண்களை நீங்கள் டெலிட் செய்துகொள்ளலாம். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வருங்காலத்தில் இந்தப் பிரச்னையை சரிசெய்துவிடுகிறோம்" என வருத்தம் தெரிவித்திருக்கிறது. 

இந்தப் பிரச்னையில் ஆண்ட்ராய்டு மொபைல்கள் மட்டுமல்ல; ஐபோன்களும் இருந்தன. ஐ.ஓ.எஸ்.சிலும் UIDAI எண் இருந்தது. இதற்கும் கூகுள்தான் காரணம். முதலில் ஒரு ஆண்ட்ராய்டு மொபைலைப் பயன்படுத்தும் நபர், தன்னுடைய கான்டாக்ட் முழுவதையும் கூகுளிடம் Sync செய்துவிடுவார். பின்னர், அந்த Sync ஆன கான்டாக்ட் லிஸ்ட்டை, எந்தவொரு மொபைலில் டவுன்லோடு Sync செய்தாலும், அந்த UIDAI எண்ணும் வந்துவிடும். அது ஆண்ட்ராய்டோ, ஐ.ஓ.எஸ்ஸோ... எல்லாவற்றிற்கும் இதே லாஜிக்தான். அதனால்தான் ஐபோன்களிலும் UIDAI எண் வந்திருக்கிறது. எனவே இதற்கும் பிரைவசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; ஆனால், UIDAI சொல்லாமல் எப்படி கூகுள் இப்படி செய்யமுடியும்? மேலும், மக்கள் அனைவரும் நிச்சயம் பயன்படுத்த வேண்டிய அளவுக்கு அவ்வளவு முக்கியமான எண்ணா இது? இதுபோன்ற குழப்பங்களால்தான் UIDAI மீதான நம்பகத்தன்மை குறைந்துகொண்டே போகிறது!