Published:Updated:

4K கேமரா... ஹை எண்ட் கேம்ஸ்... #HonorPlay மொபைலின் 3 ப்ளஸ், 2 மைனஸ்!

4K கேமரா... ஹை எண்ட் கேம்ஸ்... #HonorPlay மொபைலின் 3 ப்ளஸ், 2 மைனஸ்!
News
4K கேமரா... ஹை எண்ட் கேம்ஸ்... #HonorPlay மொபைலின் 3 ப்ளஸ், 2 மைனஸ்!

4K கேமரா... ஹை எண்ட் கேம்ஸ்... #HonorPlay மொபைலின் 3 ப்ளஸ், 2 மைனஸ்!

இந்த வருடம் எப்படியும் இந்திய மொபைல் சந்தையைக் கைப்பற்றிவிடும் நோக்கில், `ஷியோமியுடன்’ (Xiaomi) மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது `வாவே’ (Huawei), அதற்காக அனைத்து வகையான ரேஞ்ச்களிலும், தொடர்ந்து புதிய மொபைல்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அந்த வகையில், மிட்-ரேஞ்ச் செக்மண்ட்டில், சமீபத்தில் `கேமர்களை’ குறிவைத்து விற்பனைக்கு வந்திருக்கிறது, `வாவேயின்’ ”ஹானர் ப்ளே”.

`ஹானரின்’ படைப்பான இந்த ``ஹானர் ப்ளேயில்” தான், `மொபைல் கேமிங்கில் அடுத்த பெரிய புரட்சியாக இருக்கும்' என்று சொல்லப்படும் ஜிபியு டர்போ ( GPU Turbo) டெக்னாலஜி, இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மெட்டல் யூனிபாடி, 19.5:9 டிஸ்ப்ளே மற்றும் டூயல் கேமரா என அசத்தலான வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த ``ஹானர் ப்ளே”, உங்களின் பணத்துக்கு வொர்த்தாக இருக்குமா பார்க்கலாம். 

டிசைன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``ஹானர் ப்ளேயின்” மிகப்பெரிய ஹைலைட்டே அதன் மெட்டல் யூனிபாடிதான். என்னதான், கண்ணாடியாலான பின்பகுதி (Glass backs) மொபைலுக்கு அழகையும், `க்ளாசிக்’ லுக்கையும் அளித்தாலும், உறுதித்தன்மையில், உலோகத்துடன் அதனால் போட்டி போட முடியாது. மேலும், சமீபகாலமாகக் கண்ணாடியாலான பின்புற டிசைன்களுக்கு `பை பை’ சொல்லியிருக்கும் வாவே, அதனால் தான் ``ஹானர் 10” போன்ற கடந்த சில அறிமுகங்களிலிருந்து மெட்டல் பாடியையே பயன்படுத்தி வருகிறது.

பெரும்பாலான இடங்களில், ஸ்கிரீன் டிசைன் ``ஹானர் 10” ஐ பிரதியெடுத்திருந்தாலும் கூட, மேற்பகுதியிலுள்ள நாட்ச் இம்முறை கொஞ்சம் பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹானர் ப்ளே, இந்தியாவில் ``நேவி ப்ளூ” மற்றும் ``மிட்நைட் ப்ளாக்” என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மினிமல் பெசல் ( bezel), எட்ஜ் டூ எட்ஜ் டிசைன் கொண்ட பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இருக்கிறது. பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்திலும், ஹைபிரிட் டூயல் சிம் ட்ரே இடதுபுறத்திலும் அமைந்துள்ளது. 64 ஜிபி இன்பில்ட் மெமரியை எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். கீழ்ப்பகுதியில் டைப்-சி ( Type-C) யூஎஸ்பி போர்ட், 3.5  mm ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோபோன் மற்றும் லவுட் ஸ்பீக்கர் ஆகியவை உள்ளன. 

6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைல், 7.5 மிமீ தடிமனும், 176 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. இதன் உயரம் காரணமாக, இந்த ஃபோன் அனைவருக்கும் கையடக்கமாக இருக்காமல் போகலாம், மேலும் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை அடைய கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கலாம். லவுட் ஸ்பீக்கரும் கூட சுமார் ரகம்தான்.

டிஸ்ப்ளே மற்றும் வசதிகள்

19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடன், 1080*2340 பிக்செல்கள் திறனுடைய, 6.3 இன்ச் டிஸ்ப்ளே 409 ppi கொண்டிருப்பதால் காட்சிகளைத் துல்லியமாக வழங்குகிறது. மேலும், பேட்டரியின் ஆயுளை மேம்படுத்த, ஸ்கிரீன் ரெசல்யூசனில் எஃப்ஹெச்டி+ ( FHD+) மற்றும் ஹெச்டி+ ( HD+) என இரண்டு ஆப்சன்கள், பேட்டரி செட்டிங்க்ஸில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

``ஹானர் 10” ஐப் போலவே, இதிலும் ஹைசிலிக்கான் கிரின் 970 ஆக்டா கோர் ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புராஸசரில் ஜிபியூ டர்போ எனப்படும் கேமிங்-ஃபோகஸ்டு டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

4 மற்றும் 6 ஜிபி ரேம் என இரண்டு வகைகளாகக் கிடைக்கும் இந்த ``ஹானர் ப்ளேவில்”, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3750  mAh நான்-ரிமூவபிள் பேட்டரி அளிக்கப்பட்டுள்ளது. டைப்-சி யூஎஸ்பி அளிக்கப்பட்டுள்ள இந்த ஃபோனில், இரண்டு சிம்களையும் ஒரே சமயத்தில் 4ஜி நெட்வொர்க்கில் உபயோகிக்கவும் முடியும். மேலும் வழக்கமான 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஸ் போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும், கைராஸ்கோப், காம்பஸ் மற்றும் பிராக்ஸிமிடி போன்ற சென்சார்களும் இந்த ஃபோனில் உள்ளன.

செயல்பாடு, மென்பொருள் மற்றும் பேட்டரி

பப்ஜி (PUBG) மற்றும் ஆஸ்பால்ட் (Ashpalt) போன்ற ஹெவி கேம்கள், அதிகப்படியான 4ஜி யூசேஜ் மற்றும் சோஷியல் மீடியா மல்டிடாஸ்கிங் என எல்லாவற்றையும் ஸ்மூத்தாகச் செய்யக்கூடிய கிரின் 970 ஆக்டா கோர் ப்ராஸசரின் செயல்பாட்டில், எந்தவித சந்தேகமும் இல்லை. முதலில் சீனாவில் கேமிங் ஃபோன் என்று அறிவிக்கப்பட்டது, இந்த ஹானர் ப்ளே. ஏனென்றால், இதிலிருக்கும் ஜிபியூ டர்போ டெக்னாலஜி மூலம், 60 சதவிகித சிறந்த பெர்ஃபார்மன்ஸையும், 30 சதவிகித பேட்டரி லைஃபையும் ஸ்மார்ட்ஃபோன் கேமிங் செஷன்களின் போது நாம் பெறலாம். மேலும் வருங்காலத்தில் OTA அப்டேட் மூலம், 4டி கேமிங் வசதி ``ஹானர் ப்ளேவில்” அளிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில், `வாவேயின்’ முன் இருந்ததைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட EMUI 8.2 (Emotion UI) OS ல் இயங்குகிறது. ஒன் ஹேண்டட் மோட், நேவிகேஷன் கெஸ்சர்ஸ், வைஃபை+ எனப் புதிய வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், சிலபல தேவையில்லாத ப்ரீ-லோடட் கேம்கள் மற்றும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தலாம்.

பேட்டரியின் ஆயுட்காலம் ஒரு நாள்தான் என்பது மிட்-ரேஞ்ச் செக்மெண்ட் ஃபோன்களில் மிகப் பொதுவான விஷயம். அதனால், இந்த ஃபோனின் 3750  mAh திறன்கொண்ட பேட்டரியின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலேயே உள்ளது. வாவேயின் ஃபாஸ்ட்-சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது; 0 விலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் ஏற, இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால், ஒன் ப்ளஸின் டேஷ் சார்ஜ் மற்றும் ஓப்போவின்  VOOC யை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்லோதான்.

கேமரா

பின்புறம் எல்ஈடி ஃபிளாஷுடன், 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என டூயல் கேமரா அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 4 K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், பொக்கே எஃபெக்ட் ஆகிய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. முன்புறம் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. ஆனால் ஃப்ளாஷ் இல்லை. உண்மையில் மிட்-ரேஞ்ச் செக்மண்டில் `ஷியோமி’ மற்றும் `அசுஸ்’ நிறுவனங்கள் அளிக்கக்கூடிய கேமராக்களின் தரம், `வாவேயில்’ இருப்பதில்லை. அந்த வேதனை இந்த மொபைலிலும் தொடர்கிறது. கேமராக்களின் செயல்பாடு சுமார் ரகம்தான்.

16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவின் ஃபேஸ் அன்லாக் வசதி, வெளிச்சம் குறைவான இடங்களில் டல்லடிக்கிறது. ஆனால், இரவு நேரங்களில் பிரைட்னெஸ்ஸை அதிகரித்து வைத்துக்கொண்டால் அந்தப் பிரச்னையைச் சமாளித்து விடலாம்.

வாவேயின் கிரின் 970  SoC கொண்ட இந்த ``ஹானர் ப்ளே” ஒட்டுமொத்த மதிப்பில் பட்டையைக் கிளப்புகிறது. அழகான அதே சமயத்தில் உறுதியான டிசைன், அதிரவைக்கும் டிஸ்ப்ளே மற்றும் பவர்ஃபுல் செயல்பாடு ஆகியவை இந்த ஃபோனின் பலங்கள். சுமாரான கேமராக்களும், கைக்கடங்காத அளவும்தான் கொஞ்சம் இடிக்கிறது. ``ஹானர் ப்ளேவின்” 4 ஜிபி ரேம் வேரியன்ட் 19,999 ரூபாய்க்கும், 6 ஜிபி ரேம் வேரியன்ட் 23,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ரூபாய் 20,000 - 25,000 செக்மண்டில், நிச்சயம் கொடுக்கும் பணத்துக்கு நம்பிக்கையாக விளங்குகிறது இந்த ஹானர் ப்ளே. அதனால், ``கேமராவா பாஸ் முக்கியம், கேம்ஸ்தான் முக்கியம்” என்பவர்கள் நிச்சயம் இந்த பவர்ஃபுல் பெர்ஃபார்மருக்கு ஒரு டிக் அடிக்கலாம்.