Published:Updated:

' ஒண்ணு ரெண்டு இல்ல... அஞ்சு கேமரா!' - நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்

' ஒண்ணு ரெண்டு இல்ல... அஞ்சு கேமரா!' - நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்
' ஒண்ணு ரெண்டு இல்ல... அஞ்சு கேமரா!' - நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்

நோக்கியா...பேரைக் கேட்டவுடனே பலருக்கு நாஸ்டால்ஜியா ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகும். ஒரு காலத்தில் சந்தையை ஆண்ட நோக்கியா வீண் பிடிவாதத்தால் காணாமல் போனது. இன்றைக்கும் கூட பேட்டரி பெர்பாமன்ஸோ, பில்டு குவாலிட்டியோ ஒரு தடவை பழைய நோக்கியாவ நெனச்சு பாக்க வச்சதுதான் அதோட தரத்துக்கு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு விஷயத்தைத் தவிர நோக்கியா கேமாரவுலையும் கில்லிதான். இங்க பாதி பேர் மொபைலில் போட்டோ எடுக்க பழகுனது நோக்கியா மொபைலாகத்தான் இருக்கும். ஸ்மார்ட்போனுன்னு ஒன்னு வாங்குனா அது நோக்கியாவாத்தான் இருக்கும்னு வருஷக்கணக்கா வெயிட் பண்ணுனவங்க இங்க பல பேர் இருக்காங்க. அப்படி தனது வெறித்தனமான  ரசிகர்களுக்காகவே நோக்கியா ஒரு ஸ்பெஷல் ஸ்மார்ட்போனை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நோக்கியா நிறுவனம் திரும்பி வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்து விட்டது. இந்த காலகட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியும் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் சந்தையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று பார்த்தால் இல்லை என்றே கூறலாம். ஏற்கெனவே பிற நிறுவனங்கள் என்ன வசதிகளைத் தருகிறதோ அதையே தனது போன்களிலும் கொடுத்து வருகிறது. வேறு எந்த ஸ்பெஷலான விஷயங்களையும் தரவில்லை என்பதும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததற்குக் காரணமாக இருக்கலாம்.

மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து கைமாறிய பியூர்வியூ

பியூர்வியூ என்ற பெயரை எங்கேயோ பார்த்தது போல இருக்கலாம். நாம் மறந்தாலும் மொபைல் நிறுவனங்கள் மறக்கப் போவதில்லை.ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு எம்.பி கேமரா, இரண்டு கேமராவைக் ஸ்மார்ட்போன்களில் கொடுத்ததையே சாதனையாக எண்ணி மொபைல் நிறுவனங்கள் விளம்பரம் பண்ணிக் கொண்டிருந்தன. எல்லாம் இருக்கட்டும் கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்க பாஸ்னு சொல்லி நோக்கியா களமிறக்கியதுதான் Nokia PureView 808 மற்றும் Nokia Lumia 1020 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் 41 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டிருந்தன, அதில் கேமராவிற்குப் பக்கத்தில் Carl Zeiss மற்றும் PureView என்ற வார்த்தைகள் இருப்பதைப் பலர் கவனித்திருப்பார்கள். கடந்த வருடமே Carl Zeiss நிறுனவத்துடன் இணைந்து கேமரா லென்ஸை  ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தத் தொடங்கி விட்டது. Carl Zeiss தான் வேறு நிறுவனமே தவிர PureView நோக்கியாவிற்கு சொந்தமான பிராண்ட்தான். கடந்த முறை பழைய நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கிய போது அதற்குச் சொந்தமானது. தற்பொழுது நோக்கியாவின் பெயரில் HMD நிறுவனம்தான் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமையை வைத்திருக்கிறது. அப்படியே கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட்டிடம் இருந்து PureView பிராண்டை கைப்பற்றியிருக்கிறது. எவ்வளவோ எதிர்பார்த்தோம் ஆனா உங்க பேர் சொல்ற மாதிரி ஒண்ணுமே பண்ண மாட்றீங்களே பாஸ்னு இவ்வளவு நாளாக நோக்கியா ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கவலையெல்லாம் போக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறது நோக்கியா 9. மொபைல் வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கேமராக்களுடன் என்று முத்திரை பதிக்கும் வகையில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

முதல் முறையாக ஐந்து கேமரா

இப்பொழுது சந்தையில் டூயல் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சகஜமாகிவிட்டன. இது தவிர அதிக பட்சமாக சில ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமராக்களும் இருக்கின்றன. இந்நிலையில்தான் நோக்கியா ஐந்து கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னால் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அதில் பின்புறமாக மட்டும் ஐந்து கேமரா காணப்படுகிறது, சற்று பெரிய பிளாஷ் ஒன்றும் சென்சார் ஒன்றும் காணப்படுகிறது. PureView பிராண்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த வருடத் தொடக்கத்தில் நோக்கியா இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கொஞ்சம் லேட்தான் ஆனால் நோக்கியா ரசிகர்களுக்குப் பெரிய விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.