Published:Updated:

போர்... ஆமாம் போர்!

போர்... ஆமாம் போர்!
பிரீமியம் ஸ்டோரி
போர்... ஆமாம் போர்!

போர்... ஆமாம் போர்!

போர்... ஆமாம் போர்!

போர்... ஆமாம் போர்!

Published:Updated:
போர்... ஆமாம் போர்!
பிரீமியம் ஸ்டோரி
போர்... ஆமாம் போர்!

காதில் ஹெட்போன்; லேண்ட்ஸ்கேப் மோடில் மொபைலை இரண்டு கைகளாலும் பிடித்திருப்பது; வாய் “சுடுடா  சுடுடா... ஓடு” என முணுமுணுப்பது; கண்கள், சரிவில் உருட்டப்பட்ட கோலிக்குண்டைப் போல அங்குமிங்கும் வேகமாக அலைபாய்வது... இந்த சாமுத்ரிகா லட்சணங்கள் பொருந்திய இளசுகளை நீங்கள் பேருந்தில் பார்க்கலாம்; ஷாப்பிங் மாலில் பார்க்கலாம்; நடைபாதையில் நடக்கும்போது பார்க்கலாம்; கொஞ்சம் எட்டிப்பார்த்தால் உங்கள் வீட்டுக்குள்ளும் பார்க்கலாம். இவர்கள் பப்ஜி வீரர்கள். உலக கேம்ஸ் வரலாற்றின் ஈடு இணையற்ற பாகுபலி, பாட்ஷா, நாயகன் எல்லாமே இந்த பப்ஜிதான். Player’s Unknown Battle Ground, சுருக்கமாக PUBG.

போர்... ஆமாம் போர்!

``நாங்க பார்க்காத மேரியோவா, ஆங்க்ரி பேர்டா, கேண்டி க்ரஷா, கால் ஆஃப் ட்யூட்டியா?” என்பவர்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி விளையாடி, அதன் மூலம் நண்பர்கள் ஆன இருவர் காதலித்து இப்போது கல்யாணமே முடிந்துவிட்டது. நீங்கள் ஆடிய கேமில் இதற்கான சாத்தியமாவது இருந்ததா?

இந்த விளையாட்டின் கதைச் சுருக்கத்தைப் பார்த்துவிடலாம்.

100 பேருடன் ஒரு விமானம் ஒரு தீவுக்குள் செல்லும். யாருக்கு எங்கு பிடிக்கிறதோ அங்கு பாராசூட்டுடன் குதித்துவிடலாம். தரையிறங்கியவுடன் அருகிலிருக்கும்  கட்டடங்களை நோக்கி ஓட வேண்டும். அங்குதான் ஆயுதங்கள் கொட்டிக்கிடக்கும். ஆயுதங்கள் என்றால் வில் அம்பு, துப்பாக்கி, குண்டு, கத்தி, கவசம், பேண்டேஜ் போல பல போர்ப் பொருள்கள். தோசைக்கல்கூட (Pan) உண்டு. அதனால் எதிரியின் மண்டையில் ஓர் அடி போட்டால்  `செத்தான் சிவனாண்டி’தான். ஒரு பேக் பேகை எடுத்து, அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆயுதங்களைத் திணித்துக்கொண்டு எதிரியைத் தேடிப் போக வேண்டியதுதான். யார் கண்ணில் பட்டாலும் டிஷ்யூம் டிஷ்யூம், சதக் சதக், கும் கும்தான். கொஞ்சம் ஏமாந்தாலும் அவர்கள் நம்மைக் கொன்று நம்மிடமிருக்கும் ஆயுதங்களை அபேஸ் செய்துவிடுவார்கள். இதற்கு  Loot என்று பெயர்.

அந்தத் தீவின் சுற்றளவு நேரம் ஆக ஆக சுருங்கிக்கொண்டே வரும். ஒரு வெள்ளை வட்டம்; ஒரு நீல வட்டம். அது நம்மைத் தொட்டுவிட்டால் நம் சக்தி குறையத் தொடங்கும். அது நம்மைத் தீண்டாமல் வெள்ளைக் கோட்டுக்குள் தப்பிப்பதுதான் விஷயம். போக வேண்டிய இடத்துக்கு விரைவாகப்  போக ஜீப், பைக், கார் என ஏகப்பட்ட வண்டிகளும் ஆங்காங்கே நிற்கும். இடையில் எதிரிகள். இவ்வளவு சிக்கல்களையும் சமாளித்து கடைசிவரை தப்பிப் பிழைத்தால் சிக்கன் டின்னர் கிடைக்கும். ஆம், வெற்றிபெற்றால் Winner winner chicken dinner என்றுதான் சொல்கிறது பப்ஜி.

போர்... ஆமாம் போர்!

பப்ஜி கதை மட்டுமல்ல; அது உருவான கதையும் சுவாரஸ்யமானதுதான். பப்ஜியின் கர்த்தா பிரெண்டன் கிரீன். கிரீனுக்கு விவாகரத்து ஆகி, கையிலிருந்த பணமெல்லாம் தொலைந்து தனிமையில் சிக்கி உழன்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரே ஆசுவாசம் வீடியோ கேம்ஸ். உலகம் அப்போது கொண்டாடிய கால் ஆஃப் ட்யூட்டிதான் அவருக்கு பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம். ஆனால், சீக்கிரமே போர் அடித்தது. காரணம், ஒரே கேம்தான். தோற்றால் மீண்டும் அதே டாஸ்க். ஒரு `வெரைட்டி’ இல்லை. ``ஏன் எல்லா வீடியோகேமும் இப்படி இருக்கின்றன? படம் பார்ப்பதுபோல எத்தனை முறை விளையாடினாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா? ஒவ்வொரு முறையும் புதுசு புதுசாக டாஸ்க் இருக்கலாம் இல்லையா” எனத் தோன்றியது அந்த லோன்லி மேனுக்கு.  ‘அந்த மாதிரி ஒரு கேமை நாமே உருவாக்கலாமே’ என்ற அவரது எண்ணம்தான் இன்று உலகம் முழுவதும்  40 கோடிப் பேரை விளையாட வைத்திருக்கிறது. சென்ற மாதம் மட்டும் 25 கோடிப் பேர் பப்ஜி விளையாடியிருக்கிறார்கள். இதுவரை வீடியோ கேம் உலகிலிருந்த  அத்தனை சாதனைகளையும் தன் பேக் பேகில் போட்டுக்கொண்டது பப்ஜி. கைப்பேசி, கணினி, Xbox போன்ற கேம் கன்சோல்கள் என அனைத்துத் தளங்களிலும் ‘பப்ஜி... பப்ஜி’ கோஷங்கள்தான். அப்படி என்ன வித்தியாசம் இதில்?

ஒரு டீமில் அதிகபட்சம் நான்கு பேர். ஒருவர் சிங்கப்பூரில் இருந்தால் இன்னொருவர் சிங்கம்புணரியில் இருக்கலாம். ஆனால், இருவரும் பேசிக்கொண்டே, திட்டம் தீட்டி எதிரியை ஒரே காட்டில் ஓட ஓட விரட்டலாம். இதுவரை வந்த கேம்களில் சாட் வசதி இருந்ததுண்டு. ஆனால், பப்ஜி போல நிஜத்தில் பேசிக்கொண்டே விளையாடும் உணர்வை வேறு எந்த கேமும் தரவில்லை. அதனால்தான் அறிமுகமில்லாதவர்கள்கூட நண்பர்கள் ஆகிறார்கள். காதலர்கள் ஆகிறார்கள்.
 
“என் கூட பப்ஜி ஆடுற யாரையும் நான் நேர்ல பார்த்ததில்லை. ஆனா, அவங்க ஷார்ட் டெம்பரா, வீரமான ஆளா விவேகமான ஆளா , எந்த நேரம் அவர் ஃப்ரீயா இருப்பாரு...   இதையெல்லாம் அவர் விளையாடும் முறையை வச்சே தெரிஞ்சிக்கிட்டேன். நேர்ல பேசுறப்பகூட அவங்க இயல்பை மறைச்சுப் பேசலாம் . ஆனா, இப்படி டென்ஷன் ஏத்துற கேம்ல அவங்களோட உண்மையான குணம் வெளிய வந்துடும். அதனாலதான் பப்ஜி மூலமா நண்பர்கள், காதலர்கள் ஆகுறவங்க எண்ணிக்கை வேகமா அதிகரிக்குதுன்னு நினைக்கிறேன்” என்கிறார் சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் சக்திவேல், பப்ஜியில் கில்லாடி; இவரைத் தன் டீமில் சேர்த்து விளையாட க்யூவில் நிற்கிறார்கள் சக பப்ஜி வீரர்கள்.

பப்ஜி விளையாட நல்ல மொபைல் தேவை. குறைந்தது 4 ஜிபி ரேம் இல்லாத மொபைல்களில் பப்ஜி ஆடுவது சிரமம். முக்கியமான சமயத்தில் ஹேங் ஆகி எதிரியிடம் நம்மை மாட்டிவிடும். இணைய வேகத்தைப் பொறுத்தவரை 3ஜி வேகத்தில்கூட சிக்கலின்றி ஆட முடியும். அதிகபட்சம் 32 நிமிடங்கள்வரை நீடிக்கும் ஓர் ஆட்டத்துக்கு 6-8 எம்.பி டேட்டா செலவாகிறது. 

“பெரிய ஸ்க்ரீன் மொபைல், டேப்லெட் மாதிரி இருந்தா நல்லது. எதிரிகள் கண்ணுக்கு எளிதில் தெரிவார்கள். நிறைய கண்ட்ரோல்கள் உண்டு என்பதால் சின்ன ஸ்க்ரீனில் அடிக்கடி தவறான பட்டனை க்ளிக் செய்யும் ஆபத்து உண்டு” என்கிறார் சக்தி.

பப்ஜி வீரர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இப்போது இந்தியாவுக்கு  3வது இடம். வேகமாகப்  பரவும் பப்ஜியின் புகழைத் தங்களின் பலமாக மாற்றவும் பலர் முயற்சி செய்கிறார்கள். மெட்ரோ நகரங்களின் பிரபல மால்களில் பப்ஜி டோர்னமென்ட்களும் நடக்கின்றன. முதல் பரிசு சில இடங்களில் 50 லட்சம் வரை.

பப்ஜியில் சிக்கல்களும் இல்லாமலில்லை. பெங்களூரில் ஒரு மாணவன். அவன் முன்பும் கேம்ஸ் விளையாடியதுண்டு. அதெல்லாம் அப்பா வீட்டுக்கு வரும்வரை மட்டுமே. அப்பா வரும் சத்தம் கேட்டால் மொபைல் அணைந்துவிடும். ஆனால், பப்ஜியில் அப்படி செய்ய முடியாது. எதிரி நம்மீது ஏறி வெற்றி நடனம் ஆடிவிட்டு நம் ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுவான். நம் டீமில் ஆடும் மற்ற 3 பேரும் அடுத்த நாள் அடி பின்னிவிடுவார்கள். அதனால், அப்பா திட்டிக்கொண்டிருக்கும்போதும் கைகள் தானாக துப்பாக்கியை  இயக்கிக்கொண்டிருக்கும். பப்ஜி தரும் போதை அவனை புதைகுழிபோல உள்ளிழுத்துக்கொன்டது. அறிமுகமான சில மாதங்களிலே அந்த மாணவனுக்கு சிகிச்சை தொடங்கிவிட்டார்கள். கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டால் பப்ஜி இதுபோன்று பல பேரை அடிமைகளாக்கும் என்பது நிதர்சனம். காரணம், இந்த விளையாட்டு தரும் என்டெர்டெயின்மென்ட் அப்படி.

டெக்னாலஜி நமக்கு நல்லதையும் கெட்டதையும் ஒரே தட்டில்தான் வைக்கும். நாம்தான் வேண்டியதைச் சாப்பிட்டுவிட்டு மீதியை தூரப் போட வேண்டும். பப்ஜியின் சிக்கன் டின்னரும் அதற்கு விதிவிலக்கல்ல.

கார்க்கிபவா