Published:Updated:

மொபைல் ஆன்டிவைரஸ்கள்... இனியும் இவை அவசியம்தானா?

இப்போதும் மொபைல்களில் ஆன்டி வைரஸ் உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.

மொபைல் ஆன்டிவைரஸ்கள்... இனியும் இவை அவசியம்தானா?
மொபைல் ஆன்டிவைரஸ்கள்... இனியும் இவை அவசியம்தானா?

ன்று பெரும்பாலான மொபைல்கள் ஆண்ட்ராய்டில்தான் இயங்குகின்றன. அவை கிட்டத்தட்ட சிறிய கணினிகளாகவே ஆகிவிட்டன. கணினி என்றால் அனைவரும் முக்கியப் பிரச்னையாக பார்ப்பது வைரஸைத்தான். இதைத் தடுக்க பல ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதேபோல மொபைல்களுக்கும் ஆன்டிவைரஸ் ஆப்கள் பல இருக்கின்றன. ஆனால், உண்மையில் மொபைல்களுக்கு ஆன்டிவைரஸ்கள் தேவைதானா?

ஆண்ட்ராய்டு மொபைல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஐ.ஓ.எஸ் சற்று பாதுகாப்பானது என்கிறது MyBroadband அறிக்கை. இதேபோல ஆண்ட்ராய்டும் பாதுகாப்பானதுதான். இதுவரைக்கும் அச்சுறுத்தும் வைரஸ்கள் எதுவும் ஆண்ட்ராய்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இங்கே பிரச்னை நாம்தான். இருக்கும் வைரஸ்களும் நமது அசால்ட்டான பயன்பாட்டால்தான் நம்மைப் பாதிக்கமுடியும். எனவே, இதைத் தடுக்க ஆன்டி வைரஸ் எல்லாம் தனியாக தேவையில்லை. 

மேலும், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் உள்கட்டமைப்பு அளவில் இறங்கிப் பாதுகாப்பை நிலைநிறுத்த முயற்சி செய்துவருகின்றன. போன்கள் தனியாக செக்யூரிட்டி சிப் கொண்டு வெளிவரத் தொடங்கியுள்ளன. எனவே, பெரிதாக கவலைகொள்ள வேண்டியதில்லை. பாதுகாப்பாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது. அதற்கு சில நடைமுறைகளை மட்டும் பின்பற்றினாலே போதும். 

முடிந்தளவு ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டும் ஆப்களை பதிவிறக்குங்கள். இதுதான் உங்கள் மொபைலை பாதுகாப்பதற்கு நீங்கள் எடுத்துவைக்கும் முதல் அடி. ஏனென்றால் ஆபத்தான ஆப்கள் எதுவும் ப்ளே ஸ்டோரில் நீண்ட நாள்கள் இருக்காது. எப்படியும் நீக்கப்பட்டுவிடும். கூகுள் ப்ளேவும் 'Play Protect' என்ற வசதியை தற்போது தருகிறது. இது உங்கள் மொபைலில் பதிவிறக்கவிருக்கும் ஆப்களை ஸ்கேன் செய்து பாதுகாப்பானதுதானா என்பதை செக் செய்யும். இதைச் செய்ய Settings சென்று அதில் இருக்கும் Security  பகுதியில் உள்ள Play Protect வசதியைத் தேர்வுசெய்யவும்.

ஆப்பை பதிவிறக்கும்போது அது என்ன என்ன அனுமதிகளைக் கேட்கிறது என்று பொறுமையாக ஆராய்ந்து பின் அதைக் கொடுங்கள். தேவையில்லாத அனுமதிகளையேல்லாம் கேட்பதாகத் தெரிந்தால் அந்த ஆப்பை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இணையத்தில் பிரவுஸ் செய்துகொண்டிருக்கும்போதோ, மெயில் செக் செய்யும்போதோ சந்தேகத்திற்குரிய லிங்க் எதையும் கிளிக் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான வைரஸ் போன்ற ஆபத்தான விஷயங்களை உங்கள் மொபைலில் இறங்க இதுதான் காரணம்.

உங்கள் ஓ.எஸ்ஸை உடனுக்குடன் அப்டேட் செய்யுங்கள். பழைய ஓ.எஸ்களை புது ஓ.எஸ்கள் அளவுக்குப் பாதுகாப்பாக இருக்காது. அதாவது புதிய பிரச்னைகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு திறன்பட்டு இருக்காது. எனவே ஓ.எஸ் அப்டேட்  செய்வது மிக முக்கியம்.

தெரியாத ஓபன் wifi-களில் கனெக்ட் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியான நெட்ஒர்க்களைப் பயன்படுத்தி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிப்பதுடன் பல ஆபத்தான விஷயங்களை உங்களுக்கே தெரியாமல் செய்யமுடியும். மேலும், இதைப் போன்ற ஓபன் wifi-களில் கனெக்ட் செய்யும்போது VPN (Virtual Private Network) மூலம் கனெக்ட் செய்வது நல்லது.

உங்கள் மொபைலோ, கம்ப்யூட்டரோ பாதுகாப்பைப் பொறுத்தவரை பாஸ்வேர்டு மிகவும் முக்கியம். அனைத்து சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு வைக்காமல் இருங்கள். எளிமையாகக் கண்டுபிடிக்கும் வண்ணம் இருக்கும் பாஸ்வேர்டுகளை மொபைல் லாக்குக்கு வைக்காதீர். பணப்பரிவர்த்தனை முதல் சமூகவலைதளங்கள் வரை நம்முடைய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மொபைலில்தான் இருக்கின்றன என்பதை மறக்கவேண்டாம். 

இதையெல்லாம் விட ஆன்டி வைரஸ் என்ற தோலை போர்த்திப் பல ஆபத்தான ஆப்கள் இணையத்தில் சுற்றிவருகின்றன. உங்கள் மொபைல் ஆபத்தில் இருக்கிறது இந்த ஆப்பை பதிவிறக்கி அதைச் சரிசெய்யுங்கள் என்பதைப் போன்ற விளம்பரங்கள் பல தென்படும். அவை எதிலும் ஏமாந்துவிட வேண்டாம். கூகுள் செய்து பார்த்தாலே அதன் நம்பகத்தன்மை பற்றி அறிந்துகொள்ள முடியும். இன்னும் சில ஆண்டுகளில் எப்படியும் ஆண்ட்ராய்டு மொபைல்களும், ஆப்பிள் அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்களை மொபைலிலேயே கொடுக்கத் தொடங்கிவிடும். அதுவரைக்கும் எந்தவொரு சிக்கலிலும் சிக்காமல் இருப்பது நம் கைகளில்தான் இருக்கிறது. இந்தப் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொள்ளாவிட்டால், ஆன்டி வைரஸ் ஆப்கள் இருந்தாலுமே அவை பயன்தராது.